Appam, Appam - Tamil

மார்ச் 01 – அன்புகூருங்கள்!

“மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை (1 கொரி. 13:2).

உலகத்திலேயே தலைசிறந்தது விசுவாசம்தான் என்று அநேக பிரசங்கிமார்கள் வலியுறுத்துகிறார்கள். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும். விசுவாசித்தால் மலைகளைப் பெயர்ப்பதுபோன்ற அரிய பெரிய காரியங்களைச் செய்யலாம். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கும் ஜெயம் என்று விசுவாசத்தைமட்டுமே வலியுறுத்திக் கூறுகிறார்கள்.

நல்லது, விசுவாசம் அத்தியாவசியமானதுதான். அதே நேரத்தில் அன்பின் முக்கியத்துவத்தை நாம் மறந்துவிடக்கூடாது. விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகிய மூன்றையும் ஒன்றாக நிறுத்திவைத்து இதிலே எது பெரியது என்ற கேள்வியை அப். பவுல் எழுப்புகிறார். ஒருவேளை இதே கேள்வியை என்னிடத்தில் யாரும் கேட்டால் ஒரு வினாடிகூட தாமதியாமல் அன்பே பெரியது என்று பதில் கொடுப்பேன் (1 கொரி. 13:13).

ஒருமுறை ஒரு நியாயசாஸ்திரி இயேசுவினிடத்திலே வந்து, ‘போதகரே, நியாயப்பிரமாணத்திலுள்ள கற்பனைகளிலேயே எந்த கற்பனை பிரதானமானது’ என்று பத்து கற்பனைகளையும் நினைவுபடுத்திக் கேட்டான். அன்றைக்கு இஸ்ரவேல் ஜனங்களுக்கு பத்து கட்டளைகள் மட்டுமல்லாமல், யூத ரபிமார் மொத்தம் 3,600 சட்டதிட்டங்களை எழுதிக்கொடுந்திருந்தார்கள். யூதர்களுடைய புனித நூலாகிய தல்மெந்து என்ற புத்தகத்திலே இது காணப்படுகிறது.

இந்தக் கேள்விக்கு உடனே இயேசுவானவர், “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே” என்று பதிலளித்தார் (மத். 22:37,39). “இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது” (மத். 22:40) என்றும் அவர் சொன்னார்.

கிறிஸ்து நம்மில் மட்டுமல்ல, சபையிலும் அன்புகூர்ந்தார் என்று எபே. 5:25ல் வாசிக்கிறோம். சபை என்பது, இரட்சிக்கப்பட்ட விசுவாசிகளின் ஐக்கியம் ஆகும். கர்த்தர் தம்முடைய சுயஇரத்தத்தினாலே சபையை சம்பாதித்திருக்கிறார் (அப். 20:28). ஆகவே, மணவாளன் மணவாட்டியில் அன்புகூருவதுபோல கிறிஸ்து சபையிலே அன்புகூருகிறார். மட்டுமல்ல, சபையின்மூலமாக புறஜாதி மக்களுக்கும் தன்னுடைய அன்பை விளங்கப்பண்ண அவர் வைராக்கியமாய் இருக்கிறார்.

ஒரு கிறிஸ்தவ பத்திரிக்கையிலே ஒருமுறை ஒரு ஜெபத்தை வாசித்தேன். “அன்புள்ள தேவரீர்! நீர் எங்கள்மேல் எவ்வளவு அன்பு வைத்தீர்! நாங்கள் ஒருவரோடொருவர் அன்பாயிருக்கவேண்டும் என்று போதித்தருளினீர். ஆனால், உம்முடைய பிள்ளைகளாகிய நாங்களோ அன்புக்குப்பதிலாக பகையையும், பாசத்துக்குப்பதிலாகப் பிரிவினையையும், விட்டுக்கொடுத்தலுக்குப்பதிலாக பிடிவாதத்தையும், மனதுருக்கத்துக்குப்பதிலாக பொறாமையையும், எரிச்சலையும் கைக்கொண்டுவருகிறோம். தேவனே இந்த நிலைமையை மாற்றி உம்முடைய மகத்துவ அன்பினால் எங்களை நிரப்பியருளும். அன்பு என்னும் கயிற்றினால் எங்களைக் கட்டி இழுத்தருளும்” என்று எழுதப்பட்டிருந்தது. தேவபிள்ளைகளே, எத்தனை அருமையான ஜெபம் இது!

நினைவிற்கு:- “அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்” (எபே. 4:2,3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.