bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
Appam, Appam - Tamil

பெப்ருவரி 20 – விசுவாசத்தின் பரீட்சை!

“உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து” (யாக். 1:3).

பள்ளிக்கூடத்திலேயும் கல்லூரியிலேயும்தான் பரீட்சை இருக்கும் என்று நீங்கள் எண்ணிவிடக்கூடாது. ஆவிக்குரிய ஜீவியத்திலும் உங்களுக்கு பரீட்சை உண்டு. அதுதான் விசுவாசப்பரீட்சை. நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு விசுவாசப்பரீட்சையின் வழியாக செல்லுகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உங்களுடைய விசுவாசம் உறுதிப்படும். நீங்கள் விசுவாசத்தில் வல்லமையுள்ளவர்களாய் மாறுவீர்கள்.

ஆபிரகாமின் விசுவாசம் பரீட்சிக்கப்பட்டது. அவர் விசுவாசத்தில் வல்லவரானார். யோபுவின் விசுவாசம் பரீட்சிக்கப்பட்டது. இரட்டிப்பான ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார். இன்றைய விசுவாசிகள் விசுவாசப் பரீட்சைக்குச் செல்ல விரும்புவதில்லை. கர்த்தருடைய வார்த்தைகளை உட்கொள்வதோடு பேசாமலிருந்துவிடுகிறார்கள். அவர்களுடைய சாட்சி என்ன? உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது (எரே. 15:16) என்பதே. வார்த்தைகளை உட்கொள்ளுவது நல்லது. ஆனால் அவைகளைச் செயல்படுத்தவேண்டியது மிகவும் அவசியம் அல்லவா?

ஒருவன் ஏராளமாகச் சாப்பிட்டுவிட்டு போதுமான உடற்பயிற்சி செய்யாமலிருந்தால் நாளடைவில் அவனுடைய சரீரம் பெருத்து வியாதிகளுக்கு வழிவகுக்கும். அதைப்போல உங்களுடைய விசுவாசத்திற்கு நீங்கள் உடற்பயிற்சி கொடுத்து அப்பியாசம் செய்யாவிட்டால் உங்கள் விசுவாசத் தசைகள் பலனற்றுப்போய்விடும்.

கிறிஸ்தவ சபைகளில் பெரும் பகுதியினர் விசுவாசத்தைச் செயல்படுத்தக் கற்றுக்கொடுப்பதில்லை. கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களையும் விடுவதில்லை. விசுவாசிகளுடைய ஒரே கடமை மணிக்கணக்காக பிரசங்கங்களைக் கேட்டுக்கொண்டே இருப்பதாகும். அதிகமாக உண்டதன் காரணமாக, செரிமானமாகாமல் மந்தமாக இருப்பதுபோல இன்று விசுவாசிகளை ஆன்மீக நோய் பீடித்திருக்கிறது. பிரசங்கங்களைக் கேட்டுக்கேட்டு ஊழியர்களுக்கு மார்க் போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான வாக்குத்தத்தங்களை கர்த்தர் கொடுத்திருந்தும், ஜனங்கள் அவைகளை ஏட்டுச்சுரைக்காயாகவே வைத்திருக்கிறதினாலே, வாழ்க்கையிலே தோல்வியுற்றவர்களாய் காணப்படுகிறார்கள். போராட்ட நேரங்களில் சாத்தானை எப்படி எதிர்த்து நிற்பது? பிரச்சனை நேரங்களில் எப்படி விசுவாச வார்த்தைகளை அறிக்கைச்செய்யவேண்டும் என்பதை அறியவில்லை. எப்போதும் கண்ணீரையும், கவலைகளையும், துயரங்களையும், தோல்விகளையும் அறிக்கையிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், 1896-ம் ஆண்டு மிஷனரிகள் விசுவாசத்தோடும், கல்வாரி அன்போடும் அங்குள்ள ஜனங்களை அணுகி, அவர்களுக்குள்ளே விசுவாச விதைகளை ஊன்றினார்கள். அந்த விசுவாச விதைகளை ஊன்றியபோது அவர்கள் விசுவாசத்தை செயல்படுத்த ஆரம்பித்தார்கள். இதனால் இருண்டு கிடந்த அப்பிரதேசங்கள் இன்று வெளிச்சமாக மாறி இருக்கின்றன. இது விசுவாசத்திற்குக் கிடைத்த பெரிய வெற்றி அல்லவா?

தேவபிள்ளைகளே, உங்கள் விசுவாசத்தை அப்பியாசப்படுத்தாவிட்டால் அவை ஒன்றுக்கும் உதவாமல் துருப்பிடித்துப்போய்விடும். விசுவாசத்தை செயல்முறைக்குக் கொண்டுவாருங்கள். எப்போதும் நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் விசுவாசத்தோடு எதிர்பார்த்திருங்கள்.

நினைவிற்கு:- “நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்” (மாற். 9:23).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.