Appam, Appam - Tamil

பிப்ரவரி 18 – ஞானத்தினால் பிரியம்!

“ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு. அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; அதின் மேல் பிரியமாயிரு” (நீதி.4:5,6).

ஞானியாகிய சாலொமோன் இராஜா, இளம் வயதுடையவராயிருந்தபோது அவரது உள்ளம் கர்த்தரோடு இசைந்திருந்தது. தேவனுக்குப் பிரியமானதைச் செய்ய அவர் மிகவும் விரும்பினார். கர்த்தருக்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டினால், கர்த்தர் அந்த ஆலயத்தில் வாசம் செய்வார் என்பதையும், அவருடைய முழு பிரியமும் தன் மேலிருக்கும் என்பதையும் அவர் அறிந்துகொண்டார். ஆகவே, “என் தேவனாகிய கர்த்தர் பெரியவர், நான் அவருக்குக் கட்டும் ஆலயமும் பெரிதாயிருக்கும்” என்று சொல்லி கர்த்தருக்கென்று மகிமையான ஆலயத்தைக் கட்டியெழுப்பினார்.

ஆலயப் பிரதிஷ்டையின்போது ஆயிரமாயிரமான தகன பலிகளைக் கர்த்தருக்குச் செலுத்தி கர்த்தருடைய இருதயத்தை மகிழ்வித்தார். கர்த்தரும் சாலொமோன்மேல் மிகவும் பிரியமுள்ளவரானார். ஆகவே தம்முடைய மகிமையின் பிரசன்னத்தோடு பிரதிஷ்டை செய்யப்பட்ட அந்த ஆலயத்தில் வந்து இறங்கி, அந்த ஆலயத்தைத் தன் மகிமையால் நிரப்பிவிட்டார். மட்டுமல்ல, “இந்த இடத்தில் ஏறெடுக்கப்படுகிற எல்லா ஜெபங்களுக்கும் என் கண்கள் திறந்ததாயும், என் செவிகள் கவனிக்கிறதாயும் இருக்கும்” என்று வாக்களித்தார்.

சாலொமோனின் இருதயம் தேவனுடைய இருதயத்தோடு இணைந்து எப்பொழுதும் தேவனை பிரியப்படுத்தினதினாலே கர்த்தர் சாலொமோனுக்கு அளவற்ற ஞானத்தைக் கொடுத்தார். புத்தியையும், விவேகத்தையும் தந்தார். இதுவரை உலகத்தில் பிறந்த ஒருவருக்கும் இல்லாத விசேஷித்த அறிவு அவருக்கு இருந்தது. கர்த்தர் தந்த அந்த விசேஷித்த ஞானத்தைக்கொண்டு அவர் நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு ஆகிய புத்தகங்களையெல்லாம் எழுதினார். கர்த்தருக்குப் பிரியமாய் நடந்துகொள்ளுவதற்கேதுவான பல இரகசியங்களை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். இப்பொழுது சாலொமோன் இராஜா, தன் அனுபவத்திலிருந்து எவற்றையெல்லாம் கர்த்தருக்குப் பிரியமானவைகள் என்று சொல்லுகிறார் என்பதைப் பார்ப்போம்.

1. “கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது; சுமுத்திரையான நிறைகல்லோ அவருக்குப் பிரியம்” (நீதி. 11:1). வியாபாரிகள் வியாபாரத்தில் அதிகமாக சம்பாதிக்கவேண்டுமென்ற குறிக்கோளோடு கலப்படம் செய்வதையும், கள்ளத் தராசைப் பயன்படுத்துவதையும், அநியாய விலைக்கு விற்பதையும் காணலாம். ஆனால் கர்த்தரோ, சுமுத்திரையான நிறைகல்லை வைத்து உண்மையாய் வியாபாரம் செய்கிறவர்களின்மேலேயே பிரியப்படுகிறார்.

2. “பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்” (நீதி. 12:22). “பொய்யர் அனைவரும் அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே தள்ளப்படுவார்கள்” என்று வெளிப்படுத்தின விசேஷத்தில் நாம் வாசிக்கிறோம். ஆனால் உண்மையாய் வாழுகிறவர்கள்மேலோ கர்த்தர் பிரியமாயிருக்கிறார்!

3. “துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்” (நீதி. 15:8). தேவபிள்ளைகளே, உங்களை தேவ சமுகத்தில் நருங்குண்ட நொறுங்குண்ட ஜீவபலியாக அர்ப்பணித்து ஜெபிக்க முற்படுங்கள். கர்த்தர் உங்கள்மேல் பிரியமாயிருப்பார்.

நினைவிற்கு:- “நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்” (நீதி. 16:13).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.