Appam, Appam - Tamil

பிப்ரவரி 18 – என் சபையை!

“நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை (மத். 16:18).

கர்த்தருடைய பிள்ளைகளுக்கு கர்த்தர் கொடுக்கிற ஒரு பெரிய ஆசீர்வாதம் தேவனுடைய சபையாகும். அதுவே கர்த்தருடைய ஆலயம். கர்த்தருடைய ஆலயத்தை ஒருபோதும் பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்ளவே முடியாது. சபையோடும், விசுவாசிகளோடும், தேவ ஊழியர்களோடும் ஐக்கியம் வைத்திருக்கிறவர்கள் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை.

சபையைக்குறித்து கர்த்தர் மூன்று வாக்குத்தத்தங்களைக் கொடுத்தார். நான் என் சபையைக் கட்டுவேன், சபைக்கு பரிசுத்த ஆவியை அனுப்புவேன், சபைக்காக திரும்ப வருவேன் என்பதே அவை. சபையை தேவனுடைய நகரம் என்றும் அழைக்கலாம். சபையை உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலம் என்றும் கூறலாம். வேதம் சொல்லுகிறது, “ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும். தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம்பண்ணுவார்” (சங். 46:4,5).

தேவன் அனுப்புகிற நதிதான் பரிசுத்த ஆவியாகிய நதி. ஆலய ஆராதனையிலே ஆவியில் நிரம்பிப் பாடுகிற பாடல்கள், ஆவியில் நிரம்பித் துதிக்கிற ஆராதனை, ஆவியில் நிரம்பிப் பிரசங்கிக்கிற வேத வசனங்கள் என அனைத்துமே ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையையும் ஆவிக்குள்ளே பெலப்படுத்தி காத்துக்கொள்கிறது.

வேதம் சொல்லுகிறது, “பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருவதை எனக்குக் காண்பித்தான்” (வெளி. 22:1). பரலோகத்தின் தேவன் அங்கிருந்த பரலோக நதியை தேவனுடைய ஆலயத்தின் வழியாக அனுப்பித் தருகிறார். தேவ ஜனங்களின் தாகத்தை தீர்க்கும்படியாக தேவ ஜனங்களை சுத்திகரிக்கும்படியாக அந்த நதி புறப்பட்டு வருகிறது.

நீங்கள் ஒருபோதும் சபை கூடுதலை அசட்டை செய்யாதேயுங்கள். கர்த்தருடைய பிள்ளைகளின் ஐக்கியம் உங்களுக்கு மிகுந்த வல்லமையாக இருக்கட்டும். “சபை கூடிவருதலை சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்” (எபி. 10:25).

சபை அல்லது ஆலயம் என்று சொல்லும்போது, அதை இரண்டு பெரும்பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று காணப்படுகிற ஆலயம். இன்னொன்று காணப்படாத ஆலயம். நாம் காணக்கூடிய வகையிலே கல்லினாலும் மண்ணினாலும் கட்டப்பட்ட கட்டிடம் தேவனுடைய ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. அதே நேரத்தில் காணப்படாத ஆலயம் அதரிசனமான கிறிஸ்துவின் சரீரம். அது பரலோகத்தில் பெயர் எழுதப்பட்டிருக்கிற சர்வ சங்கமாகிய சபை. உலகம் எங்கும் இருக்கிற பரிசுத்தவான்களையெல்லாம் ஆவியினாலே ஒன்றாய்க்கூட்டி இணைக்கும் தேவனுடைய மாளிகை.

தேவபிள்ளைகளே, பூமிக்குரிய ஆலயத்திலும் நீங்கள் கலந்துகொண்டு தேவனை ஆராதிக்கவேண்டும். அதே நேரத்தில் அதரிசனமான பரலோக குடும்பமாகிய சபையிலும் நீங்கள் மகிழ்ந்து களிகூரவேண்டும். ஆலயத்தின் ஆசீர்வாதங்கள் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன.

நினைவிற்கு:- “உம்முடைய பிரகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்” (சங். 65:4).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.