No products in the cart.
நவம்பர் 30 – தொலைக்காட்சி!
“இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்” (1 கொரி. 13:12).
இன்று தொலைக்காட்சி பெட்டி இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். தொலைக்காட்சியினால் ஆசீர்வாதங்களும் உண்டு, சாபங்களும் உண்டு. ஆகவே, தங்கள் பிள்ளைகள் எப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள் என்பதைக்குறித்து பெற்றோர் அக்கறையுள்ளவர்களாய் இருக்கவேண்டும். இந்தத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இவ்வுலகத்தோடும், உலகத்தின் ஆசாபாசத்தோடும், உலக ஆசை இச்சைகளோடும் நெருக்கமான உறவு கொண்டாடிவருவதைப் பார்க்கிறோம்.
ஒருமுறை ஒரு சகோதரி தன்னுடைய கணவன் மிகவும் வியாதிப்பட்டு அவதிப்படுவதாகச் சொல்லி ஜெபம்பண்ண என்னை வருந்தி அழைத்தார்கள். அவர்களுடைய வீட்டிற்குச் சென்றபோது முன் அறையில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் ஒரு மோசமான நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது.
அந்த சகோதரியின் இரண்டு சிறு பிள்ளைகளும் அந்த மோசமான நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டே தூங்கியிருக்கிறார்கள். அந்தக் காட்சி பாகாலுக்கு முன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்குவதைப்போல இருந்தது. அதைத்தாண்டி ஜெபம்பண்ணுவதற்காக அவர்களுடைய கணவன் படுத்திருந்த அறைக்குச் சென்றேன். அங்கே வேறு ஒரு தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது. அதில் ஆபாச திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. அந்த சகோதரியின் கணவன் பயங்கரமான வியாதியோடு மரணத்தருவாயில் இருந்தபோதிலும், அந்த திரைப்படத்தை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். எங்களை ஒரு கண்ணால் பார்ப்பதும், தொலைக்காட்சி நிகழ்ச்சியை மற்றொரு கண்ணால் பார்ப்பதுமாக மாறி மாறி பார்த்துக்கொண்டே இருந்தார்.
முன்பு குடும்பங்களில் வேதவாசிப்பும், குடும்பஜெபமும், கர்த்தரைத் துதிக்கும் துதியும் இருந்தது. ஆனால் இப்பொழுதோ கொஞ்சம் கொஞ்சமாக அவை மறக்கப்பட்டு தொலைக்காட்சியின்மூலம் அருவருப்பான நடனங்களும், நாட்டியங்களும், கொடூரமான சாத்தானிய இசைகளும் நேரத்தை ஆக்கிரமித்துக்கொண்டன.
தொலைக்காட்சியில் செய்தியைத்தானே கேட்கிறேன். அதில் என்ன தப்பு என்று சொல்லுகிறவர்கள், செய்திக்கு அப்பாலும் தங்களுடைய கண்களை ஓடவிடுகிறார்கள். கர்த்தர் பூமியில் உங்களுக்குக் கொடுத்த பொன்னான நேரத்தை வீணடிக்காதபடி ஜாக்கிரதையாய் இருங்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் காரணமாக அநேக பிள்ளைகள் தங்களுடைய படிப்பில் பின்தங்கி, தோல்வியடைந்துபோகிறார்கள். கொலைகளையும், களவு செய்கிற குறுக்கு வழிகளையும் கற்றுக்கொள்ளுகிறார்கள். பயங்கரமான பாவ பழக்கங்களுக்கும், மதுபானங்களுக்கும், போதை வஸ்துக்களுக்கும் அடிமைகளாகிப்போகிறார்கள்.
தேவபிள்ளைகளே, நீங்கள் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். அருவருப்பான நிகழ்ச்சிகளையும், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியவற்றையும் நீங்கள் பார்க்கும்போது கர்த்தர் துக்கத்தோடு வெளியே நிற்பார் என்பதை மறந்துபோகாதிருங்கள். சீர்ப்படுத்தவேண்டியவைகளை சீர்ப்படுத்தி இன்றே கர்த்தரண்டை திரும்புங்கள்.
நினைவிற்கு:- “அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னை விட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது” (உபா. 23:14).