No products in the cart.
நவம்பர் 28 – எழுந்திருக்கும் வேளை!
“நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்” (ரோம. 13:11).
உலகப்பிரகாரமான நித்திரை நமக்கு மிகவும் அவசியமானதாயிருக்கிறது. நாம் நித்திரை செய்து ஓய்ந்திருக்கவேண்டும் என்பதற்காகவே கர்த்தர் இரவு வேளையை வைத்திருக்கிறார். கர்த்தர் தாம் நேசிக்கிறவனுக்கு நித்திரையை அளிக்கிறார்.
ஆனால் ஆவிக்குரிய தூக்கம் ஆபத்தானது. காலத்தின் அருமையை அறியாமல் நிர்விசார தூக்கத்திலிருப்பது மகாஆபத்தானது. ஆவிக்குரிய விழிப்புணர்வும், ஆவிக்குரிய முன்னேற்றமும் இந்த நேரத்தில் நமக்கு மிகவும் அவசியமாய் இருக்கிறது. நமக்கு விரோதமாய்ப் போராடிக்கொண்டிருக்கிற அந்தகார வல்லமைகளுக்கு எதிராக நாம் நின்று யுத்தம் செய்யவேண்டியது அவசியம் (ரோம. 13:12).
நோவாவின் காலத்திற்கு முன்பாக மனிதர்களுடைய பொல்லாத வாழ்க்கையையும் அக்கிரமங்களையும் கண்ட கர்த்தர் ஆதி உலகத்தை ஜலப்பிரளயத்தினால் முழுவதும் அழித்துவிட்டு புதிய உலகத்திற்குள் நோவாவைக் கொண்டுவந்தார். நோவாவுடைய குடும்பத்தின்மூலமாகத்தான் இனி ஒரு ஆசீர்வாதமான உலகம் அமையவேண்டும் என்று எதிர்பார்த்தார். ஆனால், “நோவா திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான்” (ஆதி. 9:21).
தூங்குகிற நோவாவே, திராட்சரசத்தினால் வெறிகொண்ட நோவாவே எழுந்திருக்கமாட்டீரா? நிர்வாணம் காணாதபடிக்கு ஆவிக்குரிய வஸ்திரத்தை பாதுகாத்துக்கொள்ளும்படி எழும்பமாட்டீரா? உன் பிள்ளைகள்மேலும், சந்ததியின் மேலும் வரப்போகிற சாபத்தை முறிப்பதற்கு எழுந்திருக்கமாட்டீரா? நோவாவின் திராட்சரச வெறியினிமித்தம் கானானும் அவனுடைய சந்ததியும் வீணாக சபிக்கப்பட்டார்களே.
சிம்சோனே, தேவனுடைய பராக்கிரமசாலியே, கர்த்தருடைய ஜனத்திற்காய் யுத்தம் செய்ய வேண்டிய நீர் தெலீலாளின் மடியில் நித்திரையாயிருப்பது என்ன? உமது கண்கள் பிடுங்கப்படுவதற்கு முன்பு, கைகள் வெண்கல விலங்குகள் இடப்படுவதற்கு முன்பு, பகைவர்கள் பார்வையில் நீர் வேடிக்கைப் பொருளாக மாறுவதற்கு முன்பு தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பீரா? நீங்கள் கர்த்தருக்காக எழும்ப வேண்டிய அளவுக்கு இன்னும் எழும்பவில்லையே, ஆண்டவருக்காக பிரகாசிக்கவேண்டிய அளவுக்கு பிரகாசிக்கவில்லையே.
அக்கினி ஜுவாலையான எலியாவே, அக்கினியால் உத்தரவு அருளுகிற தேவனே தேவன் என்று கர்மேல் பர்வதத்திலே எழுப்புதலை ஏற்படுத்திய எலியாவே, நீர் சூரைச்செடியின்கீழ் சோர்வோடு தூங்குவது என்ன? யேசபேலின் ஆவியை எதிர்த்து நிற்காமல் மனம் மடிந்துபோனது என்ன? உமது கடமை முடிந்துபோகவில்லை. நீர் போகவேண்டிய தூரம் வெகுதூரம். உம் கையால் அபிஷேகம் பண்ணப்படுவதற்கு ஏராளமானவர்கள் காத்திருக்கிறார்கள். எலிசாக்களை எழுப்பவேண்டிய நீர் தூங்கிக்கிடக்கலாமா?
யோனாவே, ஆமணக்குச் செடியின்கீழ் நீர் தூங்கிக்கொண்டிருக்கிறது என்ன? பூச்சியரித்தது உமக்குத் தெரியவில்லையே? அழிந்துபோகிற ஆத்துமாக்களைக்குறித்து அக்கறையில்லையா? கர்த்தருக்காக எழும்பிப் பிரகாசிக்கமாட்டீரா? உம் செய்தியைக் கேட்டு மனம்திரும்ப கோடி கோடியான மக்கள் காத்திருக்கிறார்களே!
தேவபிள்ளைகளே, ஆவிக்குரிய தூக்கத்தை உங்களைவிட்டு அகற்றிவிடுங்கள்.
நினைவிற்கு:- “இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்” (ஏசா. 60:2).