No products in the cart.
நவம்பர் 17 – பொன்னாக, பசும்பொன்னாக!
“விதைக்கப்படாத தேசமாகிய வனாந்திரத்திலே நீ என்னைப் பின்பற்றிவந்த உன் இளவயதின் பக்தியையும், நீ வாழ்க்கைப்பட்டபோது உனக்கிருந்த நேசத்தையும் நினைத்திருக்கிறேன்” (எரே. 2:2).
‘நான் எப்பொழுதெல்லாம் ஆண்டவரைக் கிட்டிச்சேரவேண்டும் என்று நினைக்கிறேனோ, அப்பொழுதெல்லாம் என் வாழ்க்கையில் போராட்டம் அதிகமதிகமாய் பெருகுகிறது. சோதனைகளையெல்லாம் தாங்கமுடியாமல் போதும் கர்த்தாவே என்று சொல்லவேண்டியதிருக்கிறது’ என்று பலர் உலகப்பிரகாரமாக துயரத்தோடு சொல்லுவதைக் கேட்டிருக்கிறேன்.
போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும் என்று சொல்லிப் புலம்புவது இயற்கையானதுதான். சோதனைகளும், சிட்சைகளும், இளம் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமின்றி முதிர்ந்த கிறிஸ்தவர்களுக்கும்கூட வருவது உண்மைதான். ஆனால் இந்த சோதனைகளும், சிட்சைகளும் உங்களை துயரத்தில் அமிழ்ந்துபோகச்செய்வதற்காக அல்ல, பொன்னை புடமிட்டு பசும்பொன்னாக மாற்றுவதற்காகவே என்பதை மறந்துவிடக்கூடாது.
இந்த சோதனை நேரங்களில்தான் அதிகமாகக் கர்த்தரைப் பற்றிக்கொள்ளவேண்டும். அவருடைய கிருபையில் சார்ந்துகொள்ளவேண்டும். அவரில் அன்புகூர உங்களுடைய இருதயத்தைத் திருப்பவேண்டும். யோபு பக்தனை அதிகமதிகமான சோதனைகளும், தாங்கமுடியாத சோதனைகளும் எல்லாப் பக்கங்களிலேயுமிருந்து புயல்போலத் தாக்கியது.
அந்த நேரத்தில் அந்த பக்தன் சொன்னார், “இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை; பின்னாகப்போனாலும் அவரைக் காணேன். இடதுபுறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன்; வலதுபுறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார். ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தப்பின் பொன்னாக விளங்குவேன்” (யோபு 23:8-10). யோபுவின் அந்த நம்பிக்கை சிட்சைகளைத் தாங்கவும், சோதனைகளை மேற்கொள்ளவும் உதவியாயிருந்தது.
ஒரு பொற்கொல்லன் எதுவரையிலும் பொன்னைப் புடமிடுவான்? முதலாவது, அந்த பொன்னிலுள்ள அசுத்தங்கள், களிம்புகள் முற்றிலும் நீங்கப் புடமிடுவான். இரண்டாவது, அந்த பொற்கொல்லனுடைய முகம் அந்த பொன்னில் தெரியும்வரைக்கும் புடமிடுவான். அதுபோலத்தான் கர்த்தர் நம்மை விலையேறப்பெற்றவர்களாகக் கண்டு, அவருடைய சாயலில் மறுரூபமாகுகிறவரையிலும் புடமிட்டுக்கொண்டே இருப்பார்.
கர்த்தருக்கும் நமக்கும் இருக்கவேண்டிய உறவுமுறை வேதத்தில் பல்வேறு உதாரணங்கள்மூலமாக சொல்லப்பட்டிருக்கிறது. குயவனுக்கும், களிமண்ணுக்கும் உள்ள உறவு, மேய்ப்பனுக்கும், ஆட்டுக்குட்டிக்கும் உள்ள உறவு, மூலைக்கல்லுக்கும், அதன் மேல் கட்டப்பட்ட ஜீவனுள்ள கற்களுக்குமிடையே உள்ள உறவு என பல உறவுமுறைகள் இருந்தாலும், மணவாளனுக்கு ஏற்ற மணவாட்டியாக விளங்க வேண்டும் என்ற உறவுமுறைதான் மகா உன்னதமான உறவுமுறையாயிருக்கிறது.
தேவபிள்ளைகளே, இக்காலத்துப் பாடுகள் இனி நம்மில் வெளிப்படுகிற மகிமைக்கு ஒப்பானதல்ல. நீங்கள் பரிசுத்தவானாய் அந்த ஒளிமயமான தேசத்தில் பிரவேசிக்கும்பொழுது தேவ தூதர்கள் உங்களை எவ்வளவாய் உற்சாகத்துடன் வரவேற்பார்கள்!
நினைவிற்கு:- “சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே” (வெளி. 19:8).