No products in the cart.
நவம்பர் 13 – ஏக சிந்தை
“கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள்; நற்சீர் பொருந்துங்கள்; ஆறுதலடையுங்கள்; ஏகசிந்தையாயிருங்கள்; சமாதானமாயிருங்கள்; அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்” (2 கொரி. 13:11).
சமாதானத்தைக் கெடுப்பது, சாத்தானும், அவன் காண்பிக்கிற பாவ சிற்றின்பங்களும்தான். உங்களுக்கு சமாதானத்தைக்கொடுக்க எண்ணிய கர்த்தர், சாத்தானின் தலையை நசுக்கி, சிலுவையிலே வெற்றி சிறந்தார். அவர் சமாதானக் கர்த்தர் (ஆதி. 49:10). வேதம் சொல்லுகிறது, “தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்” (1 கொரி. 14:33).
சாத்தான் உங்களுடைய வீட்டில் நுழையாதபடி குடும்ப சமாதானத்தைக் காத்துக்கொள்ளுங்கள். பிரிவினைகளும், கசப்புகளும், மன்னியாத தன்மைகளும் சாத்தானுக்கு வாசலைத் திறந்துகொடுப்பதைப்போன்ற காரியங்களாகும். “துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லை” (ஏசா. 48:22; 57:21). ஆனால் “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசா. 26:3).
குடும்பத்தில் ஒருமனமாயிருந்து, சாத்தானை எதிர்த்து நில்லுங்கள். நான்கு மாடுகள் ஒன்றாய் நின்றபோது, சிங்கத்தால் அவைகளை மேற்கொள்ள முடிவதில்லை. ஆனால் குள்ள நரியின் பேச்சுக்கு அவை இடங்கொடுக்குமாகில், அவைகளின் ஒற்றுமையும், ஐக்கியமும், ஏக சிந்தையும் சீர் குலைந்துபோய், யாரை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிந்த சிங்கத்திற்கு அவைகள் உணவாகிப்போய்விடும்.
“இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? …. அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்” (சங். 133:1,3). இந்த ஒரு வசனத்திலேதான் என்றென்றைக்கும் ஆசீர்வாதம், என்றென்றைக்கும் ஜீவன் என்று வாசிக்கிறோம். மட்டுமல்ல, என்றென்றைக்கும் சமாதானத்தையும் கர்த்தர் கட்டளையிடுகிறார்.
தனியாக இருக்கும் ஒரு குச்சியை முறித்துவிடலாம். ஆனால், நான்கு குச்சிகள் இணைந்திருக்குமானால் அவற்றை முறிப்பது மிகக்கடினம். ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான். இரண்டுபேர் பதினாயிரம்பேரைத் துரத்துவார்கள் (உபா. 32:30). நீங்கள் குடும்பத்தில் ஒருமனமாயிருந்தால், குடும்பத்துக்கு விரோதமாய் வருகிற சத்துருவினுடைய எல்லா சதி ஆலோசனைகள், அந்தகார வல்லமைகள், பில்லிசூனியங்கள், சதித்திட்டங்கள் ஆகியவற்றை எளிதாக முறியடித்துவிடலாம்.
புதிய ஏற்பாட்டிலே நூற்றிருபதுபேர் ஒருமனப்பட்டு ஏக சிந்தையோடு மேல்வீட்டறையிலே கூடியிருந்தபோது சமாதானத்தின் தேவனான ஆவியானவர் அவர்கள் மத்தியிலே இறங்கிவந்தார் (அப். 2:1-4). அவர்களெல்லாரும் உன்னதத்திலிருந்துவரும் பெலத்தினால் தரிப்பிக்கப்பட்டார்கள் (லூக். 24:49). பழைய ஏற்பாட்டில் நூற்று இருபதுபேர் ஏக சிந்தையோடு ஒருமனமாய் கர்த்தரை ஆராதித்தபோது, கர்த்தருடைய மகிமை ஆலயத்தில் இறங்கிவந்தது (2 நாளா. 5:12,13). தேவபிள்ளைகளே, ஒருமனப்பாட்டுக்காக ஜெபியுங்கள். அன்பின் ஐக்கியத்தைக் காத்துக்கொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “நீங்கள் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது” (1 யோவா. 1:3).