No products in the cart.
நவம்பர் 12 – சாரோனின் ரோஜா!
“நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்” (உன். 2:1).
நம் அருமை ஆண்டவர் சாரோனின் ரோஜாவாகவும், பள்ளத்தாக்கின் லீலியாகவும், எங்கேதியிலுள்ள மருதோன்றிப் பூங்கொத்தாகவும் இருக்கிறார். அவர் அத்தனை இனிமையானவர். நம்முடைய இருதயத்தைக் அவ்வளவாய் கவர்ந்துகொண்டவர்.
பாரதத்தின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு ரோஜா புஷ்பம் என்றால் மிக மிக விருப்பம். ஒவ்வொருநாளும் காலை எழுந்ததும் தனக்குப் பிரியமான ரோஜா மலர் ஒன்றைப் பறித்து தன்னுடைய கோட்டில் அணிந்துகொள்ளுவார். சாரோன் என்று சொல்லப்படுவது ஒரு மலையிலுள்ள மேட்டுப்பகுதி. மிகவும் செழிப்பான ஒரு பகுதி. அதிலே மலர்கிற சிவந்த ரோஜாவை எல்லா திசைகளில் உள்ள மக்களும் காணலாம். அந்த ரோஜா புஷ்பவகை மிகவும் பெரியது, அழகானது, வாசனையானது. அந்த ரகம் மகா விலையுயர்ந்ததும்கூட.
“அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவரே என் சிநேகிதர்” (உன். 5:16) என்று நாம் அவரைப் புகழ்ந்து பேசும்படி இயேசுவே விசேஷமுள்ளவர். விலையேறப் பெற்றவர். ரோஜாவின் ஒவ்வொரு இதழும் சிறப்பானது. ஒவ்வொரு இதழும் சுகந்த வாசனையுள்ளது. அதுபோலவே நம் அருமை ஆண்டவருடைய ஒவ்வொரு குணாதிசயமும் அத்தனை இனிமையானதாயிருக்கிறது.
ஆனாலும், சாரோனின் மேட்டிலுள்ள செந்நிறமான மலரின் இதழ்கள் கல்வாரி மேட்டிலே சிந்திய இயேசுவின் இரத்தத்தையே நமக்கு நினைப்பூட்டுகிறது. சரித்திரத்தின் எந்த பகுதியிலே நாம் நின்று பார்த்தாலும், இயேசுவின் அன்பும் தியாகமும் நம்முடைய உள்ளத்தை உருக்குகிறது. எனக்காக தம் முழு இரத்தத்தையும் சிந்தி இவ்வளவாய் என்னில் அன்பு கூர்ந்தாரே, என்று கண்ணீருடன் அவரைத் துதிக்க ஏவி எழுப்புகிறது.
பள்ளத்தாக்கின் லீலி புஷ்பத்தைப் பாருங்கள். அதன் நிறம் வெண்மையாய் இருந்து இயேசுகிறிஸ்துவினுடைய பரிசுத்தத்தை நமக்கு உணர்த்திக்காண்பிக்கிறது. அவர் முற்றிலும் பரிசுத்தமுள்ளவர்.
அவருடைய ஆவி, ஆத்துமா, சரீரம் என அனைத்துமே பரிசுத்தமானவை. அவருடைய எண்ணங்கள், சிந்தனைகள், செயல்கள் எல்லாமே பரிசுத்தமானவை. அந்த வெண்மை நிறமான லீலி புஷ்பம் நம்மையும் பரிசுத்த வாழ்க்கைக்காக அறைகூவி அழைத்துக்கொண்டே இருக்கிறது.
அந்த லீலி புஷ்பமும், ரோஜா புஷ்பமும் எப்பொழுதும் முட்களின் நடுவிலே இருக்கின்றன. இயேசு கிறிஸ்து பரிசேயர், சதுசேயர் ஆகிய முட்களின் நடுவிலே வாழ்ந்தார். எங்கும் குறை சொல்லுகிற கூட்டமும், குற்றம் கண்டுபிடிக்கிற மனிதர்களுமே இருந்தனர்.
இன்று ஒருவேளை நீங்களும் முட்களின் நடுவிலே இருக்கக்கூடும். பொல்லாத மனுஷர் நடுவிலே, வீணாக தொல்லை தருகிற மக்கள் நடுவிலே நிற்கக்கூடும். அப்பொழுது சாரோனின் ரோஜாவையும் முட்களின் நடுவே நிற்கிற லீலி புஷ்பத்தையும் நோக்கிப்பாருங்கள். அதன் மத்தியிலே அந்த மலர்கள் மணம் வீசுவதுபோல, தேவபிள்ளைகளே, நீங்களும் கிறிஸ்துவுக்காக சுகந்த வாசனையாக மணம் வீசுவீர்கள்.
நினைவிற்கு:- “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்” (யோவா. 16:33).