No products in the cart.
நவம்பர் 07 – பாடுங்கள்!
“கர்த்தரைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரித்து, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்” (சங். 96:2).
நம்முடைய தேவன் நம்முடைய ஆராதனைக்கும், ஸ்தோத்திரத்திற்கும் பாத்திரரானவர். நம்மை அன்போடு உருவாக்கினவர், அன்போடு தேடிவந்தவர், அளவில்லாமல் நேசிக்கிறவர். நாம் அவரைப் பாடித் துதித்து ஆராதனை செய்யும்பொழுது அவருடைய பிரசன்னமும், மகிமையும் நம்முடைய மத்தியிலே இறங்கிவருகிறது.
ஒரு காலத்தில் கர்த்தருக்கு ஆராதனை செய்துகொண்டிருந்த லூசிபர், ஆராதனையைத் தனக்கெனத் தேட ஆரம்பித்தான். ஆகவே அவன் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டு பிசாசாய் மாறினான். இன்றைக்கு அவன் இளைஞர்களையும், வாலிபர்களையும் கவரும்படியான இசைகளை உருவாக்கிவருகிறான்.
நம்முடைய சமுதாயத்தின் இளைஞர்கள் புதிய புதிய பாடல்களினால் கவரப்பட்டு பற்பல இசைக்கலைஞர்களைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள். பாடக்கூடிய, நடனமாடக்கூடிய, இசையமைக்கக்கூடிய கலைஞர்களுடைய கீழ்த்தரமான நிகழ்ச்சிகளுக்கு திரளாகக் கூடிவந்து கூக்குரலிடுகிறார்கள்.
தற்காலத்தில் வெளிவரும் அநேக இசைகளும் பாடல்களும் அசுத்த ஆவிகளை வரவழைக்கிறதும் சாத்தானை மகிமைப்படுத்துகிறதுமாய்தான் அமைந்திருக்கிறன்றன. இது இன்றைய சமுதாயத்தைக் கவர்ந்திழுத்து தன்னுடைய கோரப்பிடிக்குள் வைத்திருக்கிறது.
வெளிதேசத்தில் ஒயாசிஸ் என்ற இசைக்குழு பிரபலமாக இருந்தது. இதன் தலைவராய் இருந்த லீயம் கல்லாகர் என்பவர் பேசும்பொழுது, “நாங்கள் இயேசுவைவிட பிரபலமாக இருக்கிறோம். இயேசுநாதருக்கு வந்த கூட்டத்தைவிட எங்களுக்கு அதிகமான கூட்டம் வருகிறது. எங்கள் ரசிகர்கள் எங்களை தேவனைவிட முக்கியத்துவப்படுத்துகிறார்கள்” என்று சொன்னார்.
தங்களை உருவாக்கி, தங்களை நேசிக்கிற கர்த்தரை அவர்கள் புறக்கணித்துவிட்டார்கள். அவரே நித்திய நியாயாதிபதி என்றும், அவரது நியாயத்தீர்ப்புக்குமுன்பாக ஒருநாள் நிற்கவேண்டியது வரும் என்பதையும் உணராமல்போனார்கள். “தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும் அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ….. கர்த்தர் வருகிறார்” (யூதா 1:15).
ஆகையால் கடைசி காலத்திற்குள் வந்திருக்கிற தேவபிள்ளைகளாகிய நாம் கர்த்தரைத் துதித்து ஆராதித்து அவருடைய வருகைக்கு ஆயத்தமாவோமாக. கர்த்தரைத் துதிப்பதற்கும், பாடுவதற்கும், ஆராதிப்பதற்கும் தெய்வீகமான ராகங்களை அவர் தந்திருக்கிறார். நாம் தினசரி தியானம் செய்யும்பொழுது வேத வசனங்களோடுகூட சில பாடல்களையும் பாடி மகிழுவோமாக!
சில பழங்காலத்து கீர்த்தனைப் பாடல்கள் எத்தனை ஆழமான அர்த்தம் பொதிந்தவைகளாக இருக்கின்றன! கிறிஸ்தவ அனுபவத்திலிருந்து ரசித்து ருசித்து எழுதப்பட்ட தேவதாசர்களின் பாடல்கள் அவை. நிச்சயமாகவே அப்பாடல்கள் நம்முடைய உள்ளத்திலே தேவமகிமையைக் கொண்டுவரக்கூடும். தேவபிள்ளைகளே, நாம் தேவனைத் துதித்துப் பாடுவோமா!
நினைவிற்கு:- “கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்” (ஏசா. 35:10).