No products in the cart.
நவம்பர் 05 – தீர்மானியுங்கள்!
“என் வாய் மீறாதபடிக்குத், தீர்மானம்பண்ணினேன்” (சங். 17:3).
வாழ்க்கையே பல தீர்மானங்களாலானதுதான். ஒவ்வொருநாளும் நாம் பல தீர்மானங்களை எடுக்கிறோம். உடுப்பது மற்றும் சமைப்பது போன்ற சாதாரண காரியங்களுக்கான தீர்மானங்களுமுண்டு. பிள்ளைகளுடைய மேற்படிப்பு, வேலை வாய்ப்புகள், திருமண காரியங்கள் போன்ற மிக முக்கிய தீர்மானங்களுமுண்டு.
சிலருக்கு தீர்மானங்கள் என்ற உடனே புத்தாண்டு தீர்மானங்கள்தான் ஞாபகத்திற்கு வரும். பழைய ஆண்டை முடிப்பதற்கு முன்பு அவசர அவசரமாக, “ஆண்டவரே, புத்தாண்டில் நீர் என்னை ஆசீர்வதிக்கும்படி நான் ஒழுங்காக வேதம் வாசிப்பேன், ஒழுங்காக ஜெபம் செய்வேன், ஒழுங்காக ஆலயத்திற்குச் செல்லுவேன்” என்றெல்லாம் சொல்லிவிட்டு சில நாட்களில் அதை காற்றில் பறக்கவிட்டுவிடுகிறார்கள். நீங்கள் கர்த்தருக்காக வைராக்கியத்தோடு தீர்மானம் செய்யும்போது, கர்த்தரும் வைராக்கியத்தோடு உங்களோடு இருந்து உங்களை மேன்மைப்படுத்தி உயர்த்துகிறார்.
வேதத்திலே முக்கியமான தீர்மானங்களைச் செய்த மூன்று நபர்களை உங்களுக்கு முன்பாக நிறுத்த விரும்புகிறேன். முதலாவதாக, யாக்கோபின் தீர்மானம். அது தசமபாகம் செலுத்துவேன் என்று அவர் சொல்லுகிற தீர்மானம். இந்த தீர்மானம் எடுப்பதற்கு முன்பாக கர்த்தரிடத்தில் ஒரு நிபந்தனை விதித்துவிட்டு இதை யாக்கோபு சொல்லுகிறதைப் பார்க்கிறோம்.
“தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து, என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்; நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்” (ஆதி. 28:20-22).
ஆனால், நாம் கர்த்தருக்குக் காணிக்கை தரத்தீர்மானிக்கும்பொழுது நிபந்தனை ஏதும் இல்லாமலேயே தேவ அன்பினால் ஈர்க்கப்பட்டு அவருக்குத் தசமபாகம் கொடுக்கவேண்டும். அப்படிக் கொடுக்கும்பொழுது மல்கியா 3:10லே வாக்களித்தபடி வானத்தின் பலகணிகளைத் திறந்து இடங்கொள்ளாமற்போகுமட்டும் கர்த்தர் ஆசீர்வதிப்பார்.
இரண்டாவதாக, தாவீதைப்போல வேத வசனங்களை வாசிப்பேன், தியானிப்பேன், செயல்படுத்துவேன் என்று தீர்மானியுங்கள். “உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன். உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்” (சங். 119:15,16). வேதத்தை வாசித்து, தியானித்து, அதன்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் நிச்சயமாகவே பாக்கியவான்களாய் விளங்குவார்கள். வேத வசனங்களை தியானிக்கவேண்டியது நம்முடைய கடமை.
மூன்றாவது தீர்மானம் தானியேலின் தீர்மானம். பரிசுத்த வாழ்க்கைக்கான தீர்மானம். “ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டான்” (தானி. 1:8). தேவபிள்ளைகளே, உங்களுடைய தீர்மானங்கள் என்ன? கிறிஸ்துவை நேசிப்பதைக்குறித்தும், அவருக்கு ஊழியம் செய்வதைக்குறித்தும் தீர்மானம் எடுத்து கர்த்தரோடு நெருங்கி வாழுங்கள்.
நினைவிற்கு:- “நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்துகொண்டதைச் செய்” (பிர. 5:4).