Appam, Appam - Tamil

நவம்பர் 05 – அன்றன்றுள்ள ஆகாரம்!

“எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும் (மத். 6:11).

மேலே குறிப்பிட்டுள்ள இதே வசனம் லூக். 11:3லே “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்” என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் நாம் வழக்கத்தின்படி, “அன்றன்றுள்ள அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும்” என்று சொல்லி ஜெபிக்கிறோம்.

நமக்கு வேண்டிய ஆவிக்குரிய மற்றும் சரீரத் தேவைகள் என அனைத்தையும் கர்த்தர் அன்றன்று நமக்குத் தந்தருளுகிறவர். நல்ல ஈவுகளை நமக்குக் கொடுக்க அறிந்திருக்கிற பரமபிதாவின் பாதத்தண்டை ஒவ்வொருநாளும் அதிகாலை வேளை ஓடி வந்து அதைப் பெற்றுக்கொள்ளவேண்டியது நம்முடைய கடமை.

வேதம் சொல்லுகிறது, “ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள். அவைகள் விதைக்கிறதுமில்லை. அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை. அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார். அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா” (மத். 6:26).

“ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள். இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்” (மத். 6:31,32).

நம்மை உருவாக்கினவர் நம்மேல் கரிசனையுள்ளவராயிருக்கிறார். ஒவ்வொரு நாளும் நிச்சயமாகவே போஷித்து வழி நடத்துவார். “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” (மத். 4:4) என்று வாக்களித்த கர்த்தர், நிச்சயமாகவே உங்களுடைய அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உங்களைவிட்டு விலக்குவார் (யாத். 23:25).

கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை வனாந்திரத்திலே வழிநடத்திவந்தபோது ஒவ்வொரு நாளும் வானத்தின் மன்னாவினால் தம்முடைய ஜனங்களைப் போஷித்தார். தேவதூதர்களின் உணவை அவர்களுக்குக் கொடுத்தார். தேனிட்ட பணியாரம்போல இருந்த மன்னா ஒவ்வொருநாளும் பாளையத்திலே விழுந்து கிடந்தது. இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தர் வழிநடத்தின நாற்பது வருடங்களும் மன்னா அவர்களுக்கு கிடைத்துக்கொண்டேயிருந்தது. அந்த தேவன் நம்முடைய தேவன். ஒவ்வொரு நாளும் நம்மை போஷித்து வழிநடத்துகிறவர்.

சரீரத்திற்கு அப்பம் எப்படி தேவையாயிருக்கிறதோ, அதுபோல நம்முடைய ஆன்மாவிற்கு கர்த்தருடைய வார்த்தை மன்னாவாயிருக்கிறது. அவருடைய வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையினாலும், நம்முடைய ஆன்மா பிழைத்திருக்கிறது.  கர்த்தருடைய வார்த்தையின்படி உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள். அவருடைய வார்த்தை சொல்லுகிறதைக் கேட்டு அதன்படி செய்யக் கவனமாயிருங்கள்.

வேதம் சொல்லுகிறது, “நீ நடக்கும்போது அது (வார்த்தை) உனக்கு வழி காட்டும். நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும், நீ விழிக்கும்போது அது உன்னுடனே சம்பாஷிக்கும்” (நீதி. 6:22).

ஒவ்வொரு நாளும் அதிகாலை வேளை கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து வேதத்தை தியானியுங்கள். வேதத்தை விரும்பி வாசிக்கும்பொழுது, கர்த்தர் வேதவசனங்கள் மூலமாக உங்களோடு பேசுவார். தமது சித்தத்தை உங்களுக்கு வெளிப்படுத்துவார். வேதவசனங்களை தியானிக்கும்பொழுது, அந்த தியானமே உங்களுக்கு ஆத்துமாவின் உணவாக விளங்கும்.

நினைவிற்கு:- “அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் (1 இரா. 17:4).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.