No products in the cart.
டிசம்பர் 10 – முன் நோக்கி!
“ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (பிலி. 3:13,14).
எந்த ஒரு மனுஷன் அவ்வப்பொழுது தேவ சமுகத்தில் தன்னை நிலைநிறுத்தி, புதிய தீர்மானங்களையும், புதிய பிரதிஷ்டைகளையும் செய்கிறானோ, அவன் வெற்றியை நோக்கி நடந்துசெல்லுகிறான். கர்த்தரின் சமுகத்தின் ஆனந்தத்தை நோக்கி நடந்துசெல்லுகிறான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அப். பவுல், “பின்னானவைகளை மறக்கிறேன். முன்னானவைகளை நாடுகிறேன். இலக்கை நோக்கி தொடருகிறேன்” என்று எழுதுகிறார். அதுவே அவருடைய தீர்மானமாய் இருந்தது.
முதலாவது, பின்னானவைகளை மறந்து:- ஆம், பின்னானவைகள், கீழானவைகள், தேவன் விரும்பாதவைகள் அனைத்தும் மறக்கப்படவேண்டும். சோதோமைவிட்டு வெளியே வந்த நாம் சோதோமை திரும்பிப் பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது. எகிப்தைவிட்டு வெளியே வந்த நாம் எகிப்திலுள்ள கொம்மட்டி காய்களையும், பூண்டுகளையும், மச்சங்களையும் நினைத்துக்கொண்டிருக்கக்கூடாது.
அநேகர் கடந்த காலங்களிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். சிலருக்கு கடந்த கால நினைவுகள் உள்ளத்திலே துக்கத்தையும், வேதனையையும் கொண்டுவருகின்றன. இன்னும் சிலர் கடந்த காலத்தில் நடந்திருந்த பழைய அனுபவங்களையே பேசிப்பேசி புதிய நடத்துதலுக்கு தங்களை ஒப்புக்கொடுக்காமலிருக்கிறார்கள். ஒருமுறை பெர்னாட்ஷா சொன்னார்: “கடந்த கால நினைவுகள் மனுஷனை அறிவாளியாக்குவதில்லை. வரும் காலத்தைப்பற்றிய பொறுப்புணர்ச்சியே அறிவாளிக்கு அடையாளம்.”
இரண்டாவது, முன்னானவைகளை நாடி:- முன்னானவைகளை மேன்மையானவைகளை நாடுங்கள். புதிய காரியங்களை நாடுங்கள். கர்த்தர் சொல்லுகிறார்: “முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்” (ஏசா. 43:18,19).
ஆம், கர்த்தர் புதிய காரியத்தை நம்முடைய வாழ்க்கையில் செய்கிறார். கர்த்தர் கொடுக்கிற முன்னாவைகளை, மேன்மையானவைகளை பெற்றுக்கொள்ள முன்வாருங்கள். பரிசுத்த ஆவியின் புதிய நிரப்புதல், புதிய வல்லமை, புதிய கிருபை ஆகியவற்றை ஒவ்வொருநாளும் உங்கள்மேல் பொழிய அவர் விரும்புகிறார். அந்த முன்னானவைகளை நீங்கள் நாடுவீர்களா?
மூன்றாவது, இலக்கை நோக்கி:- தேவனுடைய பிள்ளைகளுக்கு ஒரு இலக்கு இருக்கவேண்டும். இலக்கு இருந்தால்தான் நாம் தீவிரமாக ஒரே நோக்கத்தோடு, ஒரே உறுதியோடு செல்லமுடியும். அன்று இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, அவர்கள் தங்கள் இலக்காகிய கானானை நோக்கி தீவிரித்துச் சென்றார்கள். நமக்கு ஒரு இலக்கு உண்டு. பூமியிலே கிறிஸ்துவின் பூரணம், நித்தியத்திலே பரம கானான் என்பதே அந்த இலக்கு.
தேவபிள்ளைகளே, நீங்கள் இலக்கை நோக்கி நடந்துகொண்டிருக்கிறீர்களா? உங்களுடைய நோக்கம் முன்னேறுகிறதாக இருக்கிறதா?
நினைவிற்கு:- “ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.” (எபி. 12:1).