No products in the cart.
டிசம்பர் 09 – பாக்கியவதி!
“அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்” (நீதி. 31:28).
பாக்கியவான் என்ற வார்த்தை வேதத்தில் எண்பத்து நான்கு இடங்களில் இடம்பெற்றுள்ளது. ஆனால், பாக்கியவதி என்ற வார்த்தை ஏழு இடங்களில்தான் இடம்பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டிலே லேயாள் தன்னைப் பாக்கியவதி என்று அழைக்கிறாள் (ஆதி. 30:13). புதிய ஏற்பாட்டில் மரியாளை நாம் பாக்கியவதியாகக் காண்கிறோம் (லூக். 1:48).
மரியாள் பாக்கியவதி என்று அழைக்கப்படுவதற்கு மூன்று முக்கியமான காரணங்கள் உண்டு. 1. மரியாளின் தாழ்மை, 2. மரியாளின் விசுவாசம், 3. மரியாள் கிறிஸ்துவை கர்ப்பம் தரித்தது. தேவபிள்ளைகளே, மரியாளின் சுபாவம் நமக்குள்ளே உருவாகும் என்றால் நாமும் பாக்கியவான்களாக, பாக்கியவதிகளாக காணப்படுவோம்.
“அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப் பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்” (லூக். 1:48). வேதம் முழுவதிலுமே மரியாளின் தாழ்மை நம்மை பிரமிக்கச்செய்கிறது. இயேசு கிறிஸ்து அற்புதங்களைச் செய்தபோது, என் மகன் மூலமாய் நடந்த அற்புதங்கள் என்று அவள் பெருமைப்பட்டுக்கொள்ளவில்லை. தேவாதி தேவனை கர்ப்பம் தரித்தோம் என்ற மனமேட்டிமை அவளுக்கு இல்லை. அவளைக்குறித்து உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்களைக்குறித்த பெருமை அவளுக்கில்லை.
மரியாள் தன்னை அடிமை என்றே அழைத்துக்கொள்ளுவதைப் பாருங்கள். அடிமையின் தாழ்மையை கர்த்தர் நோக்கிப்பார்த்தார் என்று சொல்லி கர்த்தரைத் துதித்தாள். ஆகவே, அவள் பாக்கியவதி என்று அழைக்கப்பட்டாள். “விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும்” (லூக். 1:45).
மரியாளின் வாழ்க்கையை வாசிக்கும்போது, அவள் கர்த்தரால் சொல்லப்பட்ட ஒவ்வொன்றையும் விசுவாசித்தாள். ஆகவே, விசுவாசித்த அவளை பாக்கியவதி என்று வேதம் அழைக்கிறது. தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்கு ஒரு வாக்குத்தத்தம் கொடுத்தால், கர்த்தர் உங்களோடு பேசி ஒரு காரியத்தைச் சொன்னால், அதை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும் அவருடைய வார்த்தைகள் ஒழிந்துபோவதில்லை.
ஒருமுறை இயேசுகிறிஸ்துவை ஒரு ஸ்திரீ நோக்கிப்பார்த்து: உம்மைச் சுமந்த கர்ப்பம் பாக்கியமுள்ளது என்று சத்தமிட்டுச் சொன்னாள். ஆம், உண்மையிலேயே மரியாள் பாக்கியமுள்ளவள். அந்தப் பாக்கியம் மரியாளுக்கு மட்டும்தான் வருமோ? இல்லை. ஆத்துமாக்களின் உள்ளத்திலே கிறிஸ்து உருவாகும்படி கர்ப்பவேதனைப்படுகிற ஒவ்வொருவரும் பாக்கியமுள்ளவர்களாகவே இருக்கிறார்கள். அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியருக்கு எழுதும்போது, கிறிஸ்து உங்களில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன் என்று குறிப்பிடுகிறார் (கலா. 4:19).
தேவபிள்ளைகளே, ஆத்துமாக்களுக்காக, கிராமங்களுக்காக, பட்டணங்களுக்காக, வாலிபர்களுக்காக கர்ப்ப வேதனையோடு ஜெபிப்பீர்களா? கிறிஸ்து ஒவ்வொருவருடைய உள்ளத்திலேயும் உருவாகவேண்டுமென்பதும், ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சாயலிலே பரிபூரணப்படவேண்டுமென்பதும் உங்களுடைய ஜெபத்தின் நோக்கமாக இருக்கட்டும்.
நினைவிற்கு:- “நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள்” (ஆதி. 30:13).