Appam, Appam - Tamil

டிசம்பர் 06 – தீர்க்கதரிசியிலும் பெரியவர்!

“இந்தப் பட்டணத்திலே தேவனுடைய மனுஷன் ஒருவர் இருக்கிறார்; அவர் பெரியவர்; அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும்; அங்கே போவோம்; ஒருவேளை அவர் நாம் போகவேண்டிய நம்முடைய வழியை நமக்குத் தெரிவிப்பார்” (1 சாமு. 9:6).

“அவர் பெரியவர்; அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும்” என்று சாமுவேலைக் குறித்து கொடுக்கப்பட்ட சாட்சியைதான் நாம் இங்கே வாசிக்கிறோம்.

சவுலின் கழுதை கிடைக்காமல் போனது. ஆகவே, சவுலின் வேலைக்காரன் சவுலைப் பார்த்து, இதோ, இந்தப் பட்டணத்திலே தேவனுடைய மனுஷன் ஒருவர் இருக்கிறார்; அவர் பெரியவர்; அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும்; அங்கே போவோம் என்றுச் சொல்லி சாமுவேலை அவருக்கு அறிமுகப்படுத்தினான். கர்த்தர் தம்முடைய தீர்க்கதரிசிகளின் மூலமாக திருவுளம் பற்றுகிறார். மறைபொருட்களை வெளிப்படுத்துகிறார், வெளிப்பாடுகளை கொடுக்கிறார்.

வேதம் முழுவதிலும் ஏராளமான தீர்க்கதரிசிகளை நாம் காணலாம். ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் போன்ற பெரிய தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள். ஓசியா, யோவேல், ஆமோஸ், யோனா, மீகா போன்ற சிறிய தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள்.

அவர்கள் கர்த்தருடைய வாயாக இருந்து வருங்காலத்தை முன்னறிவிக்கிறவர்களாக விளங்கினார்கள். இராஜாக்களுக்கும், சேனைகளின் அதிபதிகளுக்கும் கர்த்தருடைய ஆலோசனைகளை வழங்கினார்கள். ஏழை மக்களுக்கும் மறைபொருட்களை வெளிப்படுத்தினார்கள். தீர்க்கமான பார்வை உடையவர்களான இவர்களை தீர்க்கதரிசிகள் என்று அழைக்கிறோம்.

ஆனால், நம்முடைய ஆண்டவரை வேதம் மகாதீர்க்கதரிசி என்று அழைக்கிறது. அவர் எல்லாத் தீர்க்கதரிசிகளைப் பார்க்கிலும் பெரியவர். இயேசுவினுடைய அற்புதக் கிரியைகளை பார்த்த இஸ்ரவேலர் அவரை “மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்” (லூக். 7:16).

மாபெரும் தீர்க்கதரிசியான இயேசு கிறிஸ்துவைக் குறித்து மோசேயினிடத்தில் கர்த்தர் தீர்க்கதரிசனமாக உரைத்தார், “உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குள் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்” (உபா. 18:18) என்றார். பெரிய தீர்க்கதரிசி வரப்போகிறார் என்பதை பல தீர்க்கதரிசிகளின் மூலமாகவே தேவன் முன்னறிவித்தார்.

புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவை நாம் பெரிய தீர்க்கதரிசியாக மட்டுமல்ல, பெரிய இராஜாதி இராஜாவாகவும், பிரதான ஆசாரியனாகவும் கண்டுகொள்கிறோம். இயேசுவைப் பற்றி ஜனங்கள் “இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு” என்றார்கள் (மத். 21:11).

தேவபிள்ளைகளே, எல்லா தீர்க்கதரிசிகளிலும் பெரியவரான கர்த்தர் உங்களோடுகூட இருக்கிறார், நீங்கள் அவருக்கு செவி கொடுப்பீர்களானால், ஒருபோதும் இடறிப்போவதில்லை.

நினைவிற்கு:- “நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்” (வெளி. 19:5).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.