Appam, Appam - Tamil

ஜூலை 24 – பின்பற்றாதவன்!

“தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல” (மத். 10:38).

சீஷத்துவம் என்றால் என்ன என்பதைப் பற்றி தியானித்துக்கொண்டே ஒருவன் அப்படியே படுத்துத் தூங்கிவிட்டான். சிறிது நேரத்திற்குள் அவனுக்கு ஒரு தரிசனம் கிடைத்தது. அந்த தரிசனத்தில் அவன் ஒரு பெரிய அறையை நோக்கிச்செல்லுவது போன்றும், அந்த அறைக்குள்ளே பலவிதமான பொருட்களால் செய்யப்பட்ட பெரியதும், சிறியதுமான சிலுவைகள் அடுக்கப்பட்டு இருப்பது போன்றும் கண்டான். அவன் அந்த அறையின் அருகே போனவுடனே ஒரு தேவதூதன் அவனை வரவேற்று, அவனுடைய முதுகிலே மரத்தினாலான ஒரு சிலுவையை ஏற்றி வைத்தான்.

அந்த மனிதனின் கண்கள், அங்கே ரோஜாச்செடிகளாலும், மலர்களினாலும் செய்யப்பட்ட இன்னொரு சிலுவையைக் கண்டது. அவன் தேவதூதனைப் பார்த்து: ஐயா, எனக்கு இந்த மரச்சிலுவை வேண்டாம், ரோஜா மலர்களாலான இந்த சிலுவையைத் தாருங்கள் என்றான். தேவதூதன் அந்த மரசிலுவையை அவன் முதுகிலிருந்து எடுத்துவிட்டு, ரோஜாமலர் சிலுவையை முதுகின்மேல் வைத்தான். ஆனால் கொஞ்ச தூரம் சென்றவுடனே அந்த சிலுவையிலுள்ள ரோஜா மலர்கள் வாடி வதங்கி கொட்டிப்போனது. மீதியாயிருந்த ரோஜாச்செடியின் முட்கள் அவனுடைய முதுகெல்லாம் குத்திக் கிழித்து புண்ணாக்கின. துயரத்தோடு அவன் திரும்பி வந்தான்.

‘ஐயா, அழகு என்று நம்பி, முதுகெல்லாம் இரத்தம் வழிகிற நிலைமைக்கு வந்தேன். இது எனக்கு வேண்டாம். அந்த அறைக்குள்ளே தங்க நிறமான பெரிய சிலுவை இருக்கிறதே, அதைக் கொடுங்கள். விலை மதிப்பில்லா அந்த தங்கச் சிலுவையை சுமப்பதே பாக்கியம்’ என்று கேட்டான். தேவ தூதனும் தங்கச் சிலுவையை அவனது முதுகிலே தூக்கி வைத்தான்.

தங்கச் சிலுவையின் சுமையோ தாங்க முடியாததாய் இருந்தது. கொஞ்ச தூரம் நடப்பதற்குள்ளாக ஆழமான சகதிக்குள்ளே அவனுடைய கால் புதையுண்டது. சிலுவையின் பாரம் அவனை அழுத்தினது. அதைத்தாண்டி அவனால் முன்னேறிச்செல்ல முடியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு அதிலிருந்து மீண்டும் திரும்பி தான் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தான்.

ஐயா, பொற்சிலுவை மிகவும் மதிப்புள்ளது. அதைச் சுமந்து மக்களுடைய மதிப்பையும், பாராட்டுதலையும் பெறலாம் என்று எண்ணினேன். அந்தோ! அந்த பாரத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆகவே இது எனக்கு வேண்டாம். தயவுசெய்து பழைய மரச்சிலுவையையே எனக்குக் கொடுத்துவிடுங்கள். அதை சந்தோஷமாய் ஏற்றுக்கொள்ளுகிறேன் என்றான். இப்படித்தான் சிலர் அழகை நாடுகிறார்கள். சிலர் பொன், வெள்ளியை நாடுகிறார்கள். தவறு செய்ததைப் பின்னர் உணருகிறார்கள்.

தேவபிள்ளைகளே, உலகப்பிரகாரமான காரியங்களை நோக்கிப்பாராதிருங்கள். பரலோகத்துக்கடுத்த மேன்மைகளையே உங்கள் கண்கள் ஏறெடுத்துப் பார்க்கட்டும். கிறிஸ்துவின் சிலுவையை எடுத்துக்கொண்டு அவரைப் பின்பற்றவேண்டும் என்பதே உங்களைக் குறித்த அவரது எதிர்பார்ப்பாய் இருக்கிறது. மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடலாமா?

நினைவிற்கு:- “அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி; ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன் என்றார்” (மத். 16:24).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.