No products in the cart.
ஜூலை 24 – ஆவியானவர் பேசுவார்!
“பரியாச உதடுகளினாலும், அந்நியபாஷைகளினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்” (ஏசாயா 28:11).
நம் அருமை ஆண்டவர் நம்மோடுகூட மனந்திறந்து பேசுகிறவர். நாம் அவருடைய உருவத்தை நேரிலே பார்க்க முடியாது. அவர் ஆவியாய் இருக்கிறதினாலே வெவ்வேறு விதங்களில் நம்மோடுகூட பேசுகிறார். இயற்கையின் மூலமாக, வேத வசனங்களின் மூலமாக, சொப்பனங்கள், தரிசனங்கள் மூலமாக பேசுவதல்லாமல் அந்நிய பாஷையின் மூலமாகவும் பேசுகிறார்.
ஒரு மனுஷனுடைய வாழ்க்கையைத் திருப்ப நினைக்கும்போது கர்த்தர் அவனுடைய நாவையும் திருப்புகிறார். அவனுடைய நாவைத் திருப்பிவிட்டால் அவனுடைய வாழ்க்கையின் திசையை திருப்பிவிடலாம் என்பது கர்த்தருக்கு தெரியும். குதிரைகளுக்கு கடிவாளம் இருக்கிறதுபோல, கப்பல்களுக்கு சுக்கான் இருக்கிறதுபோல, கார்களுக்கு ஸ்டியரிங் இருக்கிறதுபோல மனுஷனுக்கு நாக்கு இருக்கிறது.
பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை ஒரு மனுஷன் பெறும்போது, அவர் அவனுடைய நாவின் மூலமாக அந்நிய பாஷையைப் பேசுகிறார், விசுவாச வார்த்தையைப் பேசுகிறார், பரலோக பாஷையைப் பேசுகிறார். கிறிஸ்து இந்த உலகத்தைவிட்டு கடந்துசெல்லும்போது நம்மோடுகூட பேசி, நம்மைத் தேற்றி ஆறுதல்படுத்துகிறார். தேவன் கொடுக்கிற அந்த தேற்றரவாளன் என்றென்றைக்கும் நம்மோடுகூட தங்கியிருக்கிறவர் என்பதை யோவா. 14:26 மூலமாக அறிந்துகொள்ளுகிறோம்.
பெந்தெகொஸ்தே நாள் வந்தபோது, “அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்” (அப். 2:4) என்றும், கிறிஸ்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்போது, “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்” (மாற். 16:17) என்றும் வேதம் சொல்லுகிறது.
நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும், அந்நிய பாஷையின் வரங்களையும் கர்த்தரிடத்தில் ஆவலோடு கேட்டுப் பெற்றுக்கொள்வீர்களாக. “கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்” என்று வேதம் சொல்லுகிறது.
ஒருமுறை ஒரு பக்தன், “நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மை செய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்” (அப். 10:38) என்ற வசனத்தை வாசித்தார். அதை வாசித்ததும் அவருக்கு பெரிய மகிழ்ச்சி. உடனே தேவ சமுகத்தில் காத்திருந்து, “ஆண்டவரே அந்த பரிசுத்த ஆவியால் என்னையும் நிரப்பும். அந்நிய பாஷையின் வரங்களை எனக்கும் தாரும்” என்று கேட்டார். கர்த்தரும் அவரை ஆவியின் வரங்களினாலும், வல்லமையினாலும் நிரப்ப சித்தமானார்.
தேவபிள்ளைகளே, அந்நியபாஷை பேசுகிறதோடு நின்றுவிடாதேயுங்கள். அந்நியபாஷையின்மூலமாக கர்த்தர் மற்றவர்களிடம் என்ன பேசுகிறார் என்று அறிந்துகொள்ளும்படி பாஷையை வியாக்கியானம் பண்ணுகிற வரத்தையும் கேளுங்கள். அந்த வரத்தின் மூலமாக கர்த்தர் சபையின் பக்தி விருத்திக்கு உங்களைப் பயன்படுத்துவார்.
நினைவிற்கு:- “தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது” (ரோம. 14:17).