bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
Appam, Appam - Tamil

ஜூலை 21 – ஆவியானவரின் அக்கினி!

“பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்” (லூக். 12:49).

ஆவியானவரின் அடையாளங்களில் ஒன்று அக்கினியாகும். வேதத்தில் பல இடங்களில் பரிசுத்த ஆவியானவர் அக்கினிக்கு ஒப்பிடப்பட்டிருப்பதை வாசிக்கலாம்.

மேலே சொன்ன வசனத்தை வாசித்துப்பாருங்கள். கர்த்தருடைய விருப்பத்தை இது வெளிப்படுத்துகிறது. நான் பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன், பரிசுத்தாவியின் அபிஷேகத்தை ஊற்றும்படி வந்தேன். அந்த அக்கினி கொழுந்துவிட்டு எரியவேண்டுமென்று விரும்புகிறேன் என்று தன் இருதயத்துடிப்பையும், வாஞ்சையையும், தாகத்தையும் கர்த்தர் வெளிப்படுத்துகிறார்.

இயேசுகிறிஸ்து பாவிகளை இரட்சிக்க வந்தார் என்பதை நாம் அறிவோம். அவர் இழந்து போனதைத் தேடும்படியும், பிசாசின் கிரியைகளை அழிக்கும்படியும் உலகத்திற்கு வந்தார், ஆனால், எல்லா காரணங்களைப் பார்க்கிலும் இந்த இடத்தில் மிக முக்கியமான காரணத்தை இயேசு வெளிப்படுத்தியிருக்கிறார். “நான் இந்த உலகத்திற்கு அக்கினியைப் போட வந்தேன்”. இந்த அக்கினி பரிசுத்தாவியாகிய அக்கினி.

என்னுடைய ஜனங்கள் அக்கினியாய் ஜீவிக்க வேண்டும் என்பதும், பாவம் நெருங்காதபடி சோதனைகள் மேற்கொள்ளாதபடி அவர்கள் அக்கினியாய் வாழவேண்டும் என்பதும், சத்துருவினுடைய சகல வல்லமைகளையும் சுட்டெரிக்கிற பட்சிக்கிற அக்கினியாய் விளங்கவேண்டும் என்பதுமே கிறிஸ்துவின் வாஞ்சையாய் இருக்கிறது.

உங்களுடைய வாஞ்சை என்ன? ஆண்டவருக்காக எரிந்து பிரகாசிக்க விரும்புகிறீர்களா? ஆண்டவருடைய கரங்களிலே வல்லமையான பாத்திரங்களாக ஜொலிக்க விரும்புகிறீர்களா? கர்த்தருடைய ஊழியத்தில் தீவிரமாய்ச் செல்ல விரும்புகிறீர்களா? உங்கள்மேல் அக்கினியைப்போட வந்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

பழைய ஏற்பாட்டு, புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுடைய வாழ்க்கை வரலாறுகளை வாசித்துப்பாருங்கள். தங்கள் தங்கள் காலத்தில் அவர்கள் கர்த்தருக்காக அக்கினி ஜுவாலையாக பிரகாசித்திருக்கிறார்கள். எலியாவின் வாழ்க்கை முழுவதுமே அக்கினியால் நிரம்பின வாழ்க்கையாய் இருந்திருக்கிறது.

அவர் உள்ளத்தில் பக்தி வைராக்கியத்தின் அக்கினி எரிந்துகொண்டிருந்தபடியால் தனியாக பாகால் தீர்க்கதரிசிகளை எதிர்த்து நிற்க முடிந்தது. அக்கினியால் உத்தரவு அருளுகிற தேவனே தேவன் என்று முழங்கி, வானத்திலிருந்து அக்கினியை இறங்கப்பண்ண முடிந்தது. அக்கினி அபிஷேகத்தால், எல்லா இஸ்ரவேலருடைய இருதயத்தையும் கர்த்தருடைய பக்கமாய் திருப்பிவிட முடிந்தது.

யோவான் ஸ்நானகனைக் குறித்து “அவர் எரிந்து பிரகாசிக்கிற விளக்கைப்போல இருந்தார்” என்று வேதம் சொல்லுகிறது. அவருடைய வெளிச்சத்தண்டை அநேக ஜாதிகள் ஓடி வந்தார்கள். தேவபிள்ளைகளே, கிறிஸ்துவின் இரண்டாவது வருகைக்கு முன்பாக நீங்களும்கூட அக்கினியாய் ஜீவித்து, வழியை ஆயத்தம்பண்ணவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.

நினைவிற்கு:- “என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்” (லூக். 24:49).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.