bandar togel situs toto togel bo togel situs toto musimtogel toto slot
Appam, Appam - Tamil

ஜூலை 18 – ஆவியானவரின் ஏவுதல்கள்!

“கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்” (நியா. 13:25).

இஸ்ரவேல் ஜனங்களை பெலிஸ்தியரின் அடிமைத்தனத்திலிருந்து மீட்பதற்கான விசேஷ பாத்திரமாக கர்த்தர் சிம்சோனைத் தெரிந்துகொண்டார். சிம்சோன் அந்த அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் எண்ணாமல், அசதியாய் இருந்தபோது ஆவியானவர் அவனை ஏவத்துவங்கினார்.

கர்த்தருக்காக பராக்கிரமம் செய்யும்படி, இன்றைக்கும் உங்களை ஆவியானவர் ஏவிக்கொண்டே இருக்கிறார். ஆவியானவருடைய ஏவுதலை உங்களுடைய வாழ்க்கையிலே அனுபவித்திருக்கிறீர்களா? உங்களை நீங்களே வழிநடத்திக்கொள்ளாமல், கர்த்தருடைய சித்தத்தின்படி உங்களை நடத்துவதற்கு ஆவியானவர் அந்த ஏவுதலைத் தந்தருளுகிறார்.

வேதம் சொல்லுகிறது, “எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்” (ரோமர் 8:14).

கர்த்தருடைய ஆவியானவர் என் வாழ்க்கையிலே அதிகமாய்க் கொடுக்கிற ஒரு ஏவுதல் விசுவாசிகளுக்காகவும், ஊழியர்களுக்காகவும் ஜெபிப்பதாகும். ஜெபிக்கையில், சிலருடைய முகங்களை என் மனக்கண்கள் முன்பாக நிறுத்துவார்.

சிலருடைய பெயர்களையும் ஞாபகப்படுத்துவார். இன்னும் அதிகமாக ஜெபிக்கும்படி தூண்டிவிடுவார். அந்த ஏவுதலினால் ஜெப பாரமும், ஆத்தும பாரமும் ஏற்படும். அப்பொழுது ஏற்ற வார்த்தைகளைச் சொல்லி ஜெபிக்கும்படியான மன்றாட்டின் ஆவியையும் ஆவியானவர் தந்தருளுவார்.

சில விசுவாசிகள் சபைகளிலே தேவ ஆவியானவருடைய ஏவுதலினால் வல்லமையாய் ஜெபிக்கும்போது, முழு சபையும் ஆவியினாலே நிரப்பப்படுகிறதைப் பார்த்திருக்கிறேன். தேவனுடைய அபிஷேகம் ஒவ்வொரு விசுவாசியையும் நிரம்பி வழியச்செய்யும்.

அப்படியே சூழ்நிலைக்குப் பொருத்தமான பாடல்களைப் பாடும்படியாகவும் ஆவியானவர் ஏவுதல் தருவார். அந்தப் பாடல்கள் உங்களுக்கு மட்டுமல்ல, முழு சபைக்கும் பக்திவிருத்திக்கு ஏதுவானவையாக மாறிவிடும்.

அப்படியே, நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஜெபமும், பாடும் பாடல்களும், கொடுக்கும் தேவ செய்திகளும் ஆவியானவருடைய ஏவுதலின்படி அமைந்திருக்குமானால், அதிலே நிச்சயமாகவே பெரிய ஆத்தும அறுவடை இருக்கும். பெரிய பலனை நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆவியானவரின் ஏவுதலின்படி நடக்க நீங்கள் உங்களை ஒப்புக்கொடுங்கள்.

எப்பொழுதும் உங்களுடைய உள்ளத்தை ஆவியானவரோடு இணைத்து அவர் சித்தம் என்ன என்பதையும், அவர் என்ன சொல்லுகிறார் என்பதையும், மிகுந்த ஜாக்கிரதையுடன் கவனிக்க முற்படுங்கள். அதற்கு ஆவிக்குரிய நுண் உணர்வு மிகவும் அவசியம்.

சில வேளைகளில் புதிய ஆத்துமாக்களை சந்திக்கும்படி ஏவுதல் தருவார். மருத்துவமனைக்குச் சென்று வியாதியஸ்தர்களோடு பேசும்படி ஏவுதல் தருவார்.

அப்படி ஆண்டவர் உங்களோடு பேசும்போது உடனடியாக கீழ்ப்படியுங்கள். கீழ்ப்படிந்தால் மேன்மேலும் தேவ இரகசியங்களைத் தந்து உங்களை வழிநடத்துவார். கீழ்ப்படியாமல் விட்டுவிட்டால் அவரும் உங்களை ஏவுவதை நிறுத்திவிடுவார்.

நினைவிற்கு:- “பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்” (மத். 10:20).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.