No products in the cart.
ஜூலை 07 – கர்த்தருடையவன்!
“பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்” (ஏசா. 43:1).
“நீ என்னுடையவன்” என்று அன்போடு கர்த்தர் உங்களை அழைக்கிறார். கோடிக்கணக்கான மக்கள் மத்தியிலே, “நீ என்னுடையவன்” என்று தேவன் உரிமை பாராட்டி அழைப்பது உங்கள் உள்ளத்தைப் பரவசப்படுத்தட்டும்.
அநேக பரிசுத்தவான்களை என்னுடையவன் என்று கர்த்தர் உரிமையோடு அழைக்கிறதையும், அவர்களுக்காக வழக்காடுகிறதையும், யுத்தம் செய்கிறதையும் வேதத்திலே வாசிக்கிறோம். மோசேயை அழைக்கும்போது, “என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்” (எண். 12:7) என்று சாட்சி கொடுத்தார். அவர்மேல் அன்பு பாராட்டினார். மோசேயை எதிர்த்து ஜனங்கள் பேசினபோது அவரால் அதைக் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அதுபோலவே இன்று உங்களையும், “மகனே, நீ என்னுடையவன்” என்று அழைக்கிறார். அவர் உங்களை சிருஷ்டித்ததினாலும், அவர் உங்களுக்காக இரத்தக்கிரயம் செலுத்தி மீட்டதினாலும் நீங்கள் அவருடையவர்களாகிறீர்கள். அவருக்கு உங்களுடைய உள்ளத்தை முற்றிலுமாய்க் கொடுத்ததினால் நீங்கள் அவருடையவர்கள்.
அதுபோலவே தாவீதையும் என் தாசனாகிய தாவீது என்று கர்த்தர் அன்போடு அழைத்தார். வனாந்தரத்திலே ஆடுகளை மேய்த்த தாவீதின் பக்தியைக் கர்த்தர் கண்டார். தாழ்மையைக் கண்டார். தேவன்பேரில் வைத்த அன்பைக் கண்டார். கர்த்தரைப் பசிதாகத்தோடு தேடினதைக் கண்டார். என் தாசனாகிய தாவீது என்று சொல்லி, “தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான்” (அப். 13:22) என்று அவரைக் குறித்துச் சாட்சியும் கொடுத்தார். நீங்கள் கர்த்தருடையவர்களானால் கர்த்தர் நிச்சயமாகவே உங்களைக் குறித்தும் சாட்சி கொடுப்பார்.
அதுபோலவே கர்த்தர் யோபுவைக்குறித்தும்கூட என்னுடையவன் என்று உரிமைபாராட்டி சாத்தானிடம் பேசுகிறதைக் காணலாம். “என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ?” (யோபு 1:8) என்றார். நீங்கள் கர்த்தருடைய சொத்தும், சுதந்தரமுமாய் இருக்கிறீர்கள். உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்.
உன்னதப்பாட்டிலே அவர் மணவாட்டியை “நீ என்னுடையவள்” என்று அழகாகச் சொல்லி அழைக்கிறதைப் பார்க்கிறோம். “என் பிரியமே” “என் ரூபவதியே” “என் புறாவே” “என் மணவாளியே” என்று பல வார்த்தைகளால் அன்போடு அழைக்கிறார். நீ என்னுடையவள் என்று சொல்லுகிற அவர், அவருடைய நாமத்தினாலே உங்களை முத்திரையிட்டுமிருக்கிறார். அவருடைய இரத்தத்தினாலே உங்களை மீட்டிருக்கிறார். அவருடைய அபிஷேக தைலத்தினாலே நிரம்பி வழியும்படி அபிஷேகம் பண்ணியிருக்கிறார்.
தேவபிள்ளைகளே, நீங்கள் அவருடையவர்களாய் இருக்கிறீர்களா? என் நேசரே நீர் என்னுடையவர், நான் உம்முடையவன், உமக்கே சொந்தமானவன். உம்மையே பிரியப்படுத்துவேன். என் முதல் அன்பையும், முழு அன்பையும் உமக்கே செலுத்துவேன் என்று சொல்லி உங்களைப் பிரதிஷ்டை செய்திருக்கிறீர்களா?
நினைவிற்கு:- “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்” (சங். 23:1).