No products in the cart.
ஜூன் 30 – .முடிவிலே ஆறுதல்!
“உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்” (சங். 73:24).
பல நேரங்களில், ஒரு காரியத்தின் ஆரம்பத்தைப் பார்க்கிலும் அதன் முடிவு சிறந்ததாய் இருக்கும். இக்கால நன்மைகளைப் பார்க்கிலும் நித்தியத்தின் மகிமையான பலன்கள் மிக மேன்மையானவை. இந்த உலகத்திலுள்ள அத்தனை ஆசீர்வாதங்களைப் பார்க்கிலும், நித்திய ஜீவனின் ஆசீர்வாதங்கள் மகா உன்னதமானவை.
ஆறுதலின் தேவன்தானே உங்களோடுகூட நித்திய நித்தியமாக கடந்துவந்து உங்களை ஆறுதல்படுத்துகிறார். இயேசு சொன்னார், “நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்” (மத். 28:20).
உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்பது அவருடைய வாக்குத்தத்தம் அல்லவா? அவர் எப்பொழுதும் உயிருள்ளவராயிருக்கிறபடியினால் உங்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.
இந்த உலகத்திலே அநேகர் தங்களுடைய முடிவைக் குறித்து எண்ணி கவலைப்படுகிறார்கள். அவர்களது விசுவாசக்குறைவானது அவர்களை பல வகையிலும் பயப்படவைக்கிறது. என் வாழ்க்கையின் முடிவு எப்படி இருக்குமோ, நான் பரலோக ராஜ்யத்துக்கு பங்குள்ளவனாய் இருப்பேனோ அல்லது கைவிடப்பட்டுவிடுவேனோ என்றெல்லாம் எண்ணி கலங்குகிறார்கள்.
வேதம் சொல்லுகிறது, “உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர். அவர் அப்படியே செய்வார்” (1 தெச. 5:24). கர்த்தர் உங்களை கடைசி பரியந்தம் வழிநடத்த வல்லமையுள்ளவராயிருக்கிறார்.
வேதம் சொல்கிறது: “இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவு பரியந்தமும் அவர்களிடத்தில் அன்பு வைத்தார்” (யோவான் 13:1).
சகலவிதமான ஆறுதலின் தேவன்தாமே முற்றுமுடிய உங்களை இரட்சித்து, முற்றுமுடிய உங்களைப் பாதுகாத்து, முற்றுமுடிய உங்களை ஆசீர்வதித்து, நன்மையினாலும், கிருபையினாலும் உங்களை முடிசூட்டி, முற்றுமுடிய உங்களிடத்தில் அன்பு செலுத்தி, உங்களை வழிநடத்துகிறவராயிருக்கிறார் என்பதை நீங்கள் ஒருபோதும் மறந்து போகாதிருங்கள்.
தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களை இறுதிவரை வழி நடத்தும்படி கர்த்தருடைய கரத்தில் உங்களை முழுமையாய் ஒப்புக்கொடுங்கள். கர்த்தர் உங்களை ஆறுதல்படுத்தி, முடிவு பரியந்தம் வழி நடத்துவார்.
நினைவிற்கு :- “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது; அங்கேயிருந்து கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்” (பிலி. 3:20).