No products in the cart.
ஜனவரி 31 – இருதயத்தின் வேண்டுதல்!
“கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்” (சங். 37:4).
கர்த்தர் உங்கள் இருதயத்தின் வேண்டுதல்களையெல்லாம் நிறைவேற்றி உங்களை ஆசீர்வதிப்பார். அழுது கேட்டால்தான் கர்த்தர் கொடுப்பார் என்று சிலர் எண்ணி, எப்போது பார்த்தாலும் அழுதுகொண்டேயிருக்கிறார்கள். சிறு குழந்தையாய் இருக்கும்போது குழந்தை தன் தாயின் கவனத்தை ஈர்ப்பதற்கு எதற்கெடுத்தாலும் அழுகிறது. உண்மைதான். ஆனால் அந்த குழந்தை வளர்ந்து பெரிய பிள்ளையான பின்பும் அழுதுகொண்டேயிருந்தால் பெற்றோருக்கு கோபம்தான் வரும்.
நாம் சில காரியங்களுக்காக நம்மையுமறியாமல் கண்ணீர் சிந்தி ஜெபிப்பதுண்டு. ஆனால் கர்த்தரிடத்தில் அழுது கேட்டால்தான் பதில் கிடைக்கும் என்று எதற்கெடுத்தாலும் அழுவது தவறாகும். ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ந்த தேவனுடைய பிள்ளைகள் கர்த்தரைத் துதித்தே எல்லா நன்மைகளையும் பெற்றுக்கொள்ளுவார்கள்.
அன்னாள் குழந்தை இல்லாததால் பல ஆண்டுகள் அழுதாள். அந்தத் துயர நாட்களில் அவளுக்கு பிள்ளைகள் பிறக்கவேயில்லை. ஆனால் ஒரு நாள் தன் இருதயத்தை கர்த்தருடைய பாதத்தில் ஊற்றிவிட்டு தன் பாரம் முழுவதையும் கர்த்தருடைய கைகளில் ஒப்புவித்துவிட்டு மகிழ்ச்சியாயிருந்தாள். “அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை” (1 சாமு. 1:18) என்றும், “கர்த்தர் அவளை நினைத்தருளினார். …. அவள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்றாள்” (1 சாமு. 1:19:20) என்றும் வேதம் சொல்லுகிறது.
கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள். அது உங்களுடைய விசுவாசத்தையும், கர்த்தர்மேலுள்ள நம்பிக்கையையும் காண்பிக்கிறது. மகிழ்ச்சியாய் இருங்கள்; அது உங்களுடைய பாரங்கள் கவலைகள் எல்லாவற்றையும் கர்த்தர்மேல் வைத்துவிட்டீர்கள் என்பதை காண்பிக்கிறது. வெறுமையிலிருந்து சகலவற்றையும் சிருஷ்டித்த கர்த்தர் உங்களுக்குப் புதிய அற்புதத்தைச் செய்வார். இல்லாதவைகளை இருக்கிறவைகளாக அழைக்கிற தேவன் உங்களுடைய வாழ்க்கையில் புதிய காரியத்தைக் கட்டளையிடுவார்.
பழைய ஏற்பாட்டை வாசித்துப்பாருங்கள். கர்த்தருடைய ஆலயத்தை பிரதிஷ்டைபண்ணுகிற நேரத்தில், “அவர்கள் (நூற்றியிருபது ஆசாரியர்கள்) ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஏகசத்தமாய்க் கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள்; …. கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது என்று அவரை ஸ்தோத்திரிக்கையிலும், கர்த்தருடைய வீடாகிய தேவாலயம் மேகத்தினால் நிறையப்பட்டது. …. கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று” (2 நாளா. 5:13,14).
புதிய ஏற்பாட்டிலே மரியாளைப் பாருங்கள். ஏழைக்குடும்பத்தில் பிறந்த கன்னிப்பெண் அவள். எத்தனை மகிழ்ச்சியோடு கர்த்தரைத் துதித்தாள்! “என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது” (லூக். 1:46,47) என்று துதித்தாள். அவளது ஆவி, ஆத்துமா, சரீரம் எல்லாம் தெய்வீக மகிழ்ச்சியினால் நிரம்பியது. கர்த்தரைத் துதித்துப் பாடினாள். அந்த மகிழ்ச்சியின் துதியானது எலிசபெத்தின் வயிற்றில் உள்ள பிள்ளையை களிப்புடன் துள்ளப்பண்ணிற்று. தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தரைத் துதிக்கும்போது இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உங்கள் கூடாரத்தை நிரப்பும். அல்லேலூயா!
நினைவிற்கு:- “அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, …. தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள்” (அப். 2:46,47).
