Appam, Appam - Tamil

ஜனவரி 24 – என் இருதயத்தை!

“என் பிரியமே! என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய் (உன். 4:7,9).

நாம் கர்த்தருடைய சமுகத்திலே வாஞ்சையோடு அமர்ந்திருக்கும்போது, கர்த்தர் நம்மைப் பார்த்து, “என் பிரியமே” என்று அன்புடன் அழைக்கிறார். உன்னதப்பாட்டில் ஆத்தும நேசர் தன் மணவாட்டியைப் பல வார்த்தைகளைச் சொல்லி அழைக்கிறார். “மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே!” (உன். 7:6) என்று நேசர் கூப்பிடுவதை வேதத்தில் வாசிக்கிறோம்.

உங்களுடைய வாழ்க்கையின் நோக்கமே நீங்கள் தேவனில் மகிழ்வதும் தேவன் உங்களில் மகிழ்வதுமாகவே இருக்கட்டும். உங்கள் பார்வை, எண்ணம், செயல் ஆகிய அனைத்துமே தேவனை மகிழப்பண்ணுகிறதாக இருக்கட்டும். மட்டுமல்ல, உங்களுடைய வாழ்நாளெல்லாம் கிறிஸ்துவிலே சார்ந்து, அவருடைய நேசத்திலே நிரம்பி மனமகிழ்ச்சியாய் நடந்துகொள்ளமுற்படுங்கள். அவருக்குப் பிரியமானவைகளைச் செய்ய நீங்கள் முற்படும்போது கர்த்தர் தலைமுறை தலைமுறையாக உங்களை ஆசீர்வதிப்பார்.

சங்கீதக்காரர் சொல்கிறார்: “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்” (சங். 37:4). தேவனிடத்தில் மனமகிழ்ச்சியாயிருந்த சங்கீதக்காரர், “உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்” (சங். 119:16) என்றும், “உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி” (சங்.119:77) என்றும், “உம்முடைய கற்பனைகள் என் மனமகிழ்ச்சி” (சங்.119:143) என்றும் சொல்லுகிறார். “மனமகிழ்ச்சி நல்ல ஔஷதம்” (நீதி.17:22) என்றும், “மன மகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்” (நீதி. 15:13) என்றும் சாலொமோன் சொல்லுவதை வேதத்தில் பார்க்கிறோம்.

நீங்கள் தேவனில் மனமகிழ்ச்சியாய் இருப்பதுமட்டுமல்லாமல் தேவனை எப்பொழுதும் மகிழ்ச்சிக்குட்படுத்தவேண்டும். உலகத்திலோ இந்த உலகத்திலுள்ளவைகளிலோ அன்புகூராமல் இருக்கவேண்டும். உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை (யாக். 4:4) என்று வேதம் சொல்கிறது.

உலகப்பிரகாரமான இச்சைகளிலும், உலகப்பிரகாரமான ஜீவியங்களிலும், உலக சிற்றின்பங்களிலும் ஜீவித்துக்கொண்டிருந்தால், கர்த்தரை கடுகளவுகூட மகிழப்பண்ணமுடியாது. வேதம் சொல்லுகிறது, “உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்” (1 யோவா. 2:15). உலகத்தையும் அந்த உலகத்தின் ஆசை இச்சைகளையும் நான் சிலுவையில் அறைந்து கர்த்தரையே பிரியப்படுத்துவேன் என்று தீர்மானியுங்கள் (கலா. 5:24).

ஒவ்வொருநாளும் நேரம் கிடைக்கும்போதெல்லாம், கர்த்தருக்குப் பிரியமில்லாத ஏதாவது காரியம் உங்களுடைய வாழ்க்கையில் வந்திருக்கிறதா, வேதனை உண்டாக்கும் வழிகள் ஏதாகிலும் உட்பிரவேசித்திருக்கிறதா என்று உங்களை நீங்களே ஆராய்ந்தறிந்து சீர்ப்படுத்துங்கள். அப்பொழுது கர்த்தர் நிச்சயமாகவே உங்களில் மகிழ்ந்து களிகூருவார்.

ஆத்தும நேசரில் உங்களுடைய உள்ளம் மனமகிழ்ச்சியாய் இருப்பதோடல்லாமல், அவருடைய நேசத்தை நினைத்து அது பொங்கிக்கொண்டேயிருக்கட்டும். “என் உள்ளம் அவர் நிமித்தம் பொங்கினது” என்பதே மணவாட்டியின் சாட்சியாய் இருக்கிறது (உன். 5:4). தேவபிள்ளைகளே, கல்வாரியின் காருண்யங்களை நினைக்கும்போதெல்லாம் உங்கள் உள்ளம் பொங்கிக்கொண்டேயிருக்கட்டும். “என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது” (சங். 45:1).

நினைவிற்கு:- “உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு (சங். 16:11).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.