No products in the cart.
ஜனவரி 22 – இருதயத்தின் கவலை!
“மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்” (நீதி. 12:25).
இருதயத்தின் கவலை என்பதே விசுவாசத்தின் பரம எதிரியாயிருக்கிறது. கவலையும் விசுவாசமும் போராடி ஒன்றையொன்று மேற்கொள்ள முயற்சிக்கின்றன.
சீஷர்கள் கவலைப்பட்டு இருதயம் கலங்கியிருந்த வேளையில் ஆண்டவர் அவர்களை அன்போடு தேற்றி, “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்” (யோவா. 14:1) என்றார். ஆம், கவலைக்கு மாற்றுமருந்து விசுவாசம்தான். கர்த்தருடைய வாக்குத்தத்த வசனங்களை விசுவாசத்தோடு மீண்டும் மீண்டும் அறிக்கைசெய்தால் இருதயத்தின் கவலை உங்களை விட்டு பறந்தோடிப்போகும்.
கவலைகள் உங்களைவிட்டு நீங்குவதற்கு முதலாவதாக, நீங்கள் அவைகளை தேவனுக்குத் தெரியப்படுத்தவேண்டும். இரண்டாவதாக, கவலைகளையும் பாரங்களையும் அவர் பாதத்தில் வைத்துவிடவேண்டும். இதைக்குறித்து வேதம் சொல்லுகிற நான்கு வசனங்கள் உண்டு. 1. “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடேகூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (பிலி. 4:6). 2. “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” (1 பேது. 5:7). 3. “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்” (சங். 55:22). 4. “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத். 11:28).
உதாரணமாக, உங்களுடைய மகளின் திருமணத்தை நடத்தி முடிக்க ஒரு இலட்சம் ரூபாய் தேவை என வைத்துக்கொள்வோம். உங்களிடம் ஆயிரம் ரூபாய்கூட இல்லை. எனவே உள்ளம் கலங்குகிறீர்கள். திடீரென்று அமெரிக்காவில் உள்ள உங்கள் உறவினர் ஞாபகம் வரவே அவருக்குத் தெரிவிக்கிறீர்கள். அவர் அதைக் கேட்டதும் சந்தோஷப்பட்டு, உங்கள் மகளுடைய திருமணச் செலவை தானே பொறுப்பெடுத்துக்கொள்கிறேன் என்று சொல்வாராகில் உங்கள் கலக்கம் அகன்றுவிடும். காரணம், உங்கள் நம்பிக்கையை உறவினர்மேல் வைத்திருக்கிறீர்கள். அப்படியானால், உங்களுக்காக யாவையும் செய்து முடிக்கிற கர்த்தர்மேல் எவ்வளவு அதிகமாக நீங்கள் விசுவாசம் வைக்கவேண்டும்!
இயேசுகிறிஸ்துவின் நல்வார்த்தைகளும், வாக்குத்தத்தங்களும் உங்களது சகல கவலைகளையும் நீக்கி உங்களை மகிழ்ச்சிப்படுத்தும். தன் பிள்ளையைக்குறித்த கவலையோடு ஒரு தகப்பன் இயேசுவண்டை ஓடிவந்தபோது, “நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான்” (யோவா. 4:50) என்று இயேசு சொன்னதை வேதத்தில் வாசிக்கிறோம்.
அந்த நிமிடமே அவனுடைய கவலை நீங்கியது, நம்பிக்கையோடு வீட்டுக்கு வந்தான். கர்த்தர் சொன்னபடியே அந்த நாழிகையிலே மகன் பிழைத்திருக்கிறதைக் கண்டான். தேவபிள்ளைகளே, கவலைகள் உங்களைத் தாக்கும்போது, அருமை இரட்சகரின் அன்பு வார்த்தைகள் உங்களை ஆறுதல்படுத்தி, தேறுதல்படுத்தும்.
நினைவிற்கு:- “ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்” (மத். 6:31,32).
