Appam, Appam - Tamil

ஜனவரி 18 – இருதயம் தொய்யும்போது!

“என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும் (சங். 61:2).

பல வேளைகளிலே நம்முடைய இருதயம் தொய்ந்துபோகிறது. சோர்வடைந்துவிடுகிறோம். “போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்” என்று அங்கலாய்க்கிறோம். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தாவீது இராஜா தன்னுடைய இருதய தொய்வையும், வேதனையையும் நேரடியாக கர்த்தரிடத்திலே அறிவித்தார். அவர் அநேகம்பேருக்கு ஆறுதலின் பாத்திரமாய் இருந்தபோதிலும் தன் பிரச்சனைகளை தனக்குக் கீழே இருந்த மக்களிடம் சொல்லமுடியாமல் கர்த்தரிடத்தில் சொல்லுகிறதைப் பார்க்கிறோம்.

அப்பொழுது கர்த்தர் செய்த காரியம் என்ன? பூமியின் கடையாந்தரத்தில் இருந்த தாவீதை கர்த்தர் எடுத்து உயர்த்தி கன்மலையின்மேல் நிலைநிறுத்தினார். பூமியின் கடையாந்தரம் என்று சொல்லுவது, வாழ்க்கையிலே நம்பிக்கை இழந்த நிலைமையைக் குறிக்கிறது. அதல பாதாளத்தில் சிக்குண்ட நிலைமையைக்குறிக்கிறது. அங்கே தேவனுடைய கரத்தைப் பற்றிப்பிடிக்கும்போது, அவர் நம்மைத் தூக்கியெடுத்து, உயர்த்தி, கன்மலையின் உச்சிக்குக் கொண்டுபோய்விடுகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு துறைமுகத்தின் அருகே கடற்கரையில் நின்றுகொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு மின்தூக்கி (Crane) கப்பலிலிருந்த பெரிய பளுவை தன்னுடைய கொக்கியிலே தூக்கி, மிகவும் உயரமாய் உயர்த்தி, கரையிலே கொண்டுபோய் வைத்தது. எந்த மனுஷனாலும் அவ்வளவு பெரிய பளுவை தூக்கவோ, கரைசேர்க்கவோ முடியாது. ஆனால், அந்த மின்தூக்கி இயந்திரம் சர்வ சாதாரணமாய் அதைச் செய்கிறதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.

பாருங்கள், சிலுவையிலே கிறிஸ்துவோடு தொங்கிக்கொண்டிருந்த ஒரு கள்ளனுடைய வாழ்க்கை தொய்ந்துபோயிருந்தது. சில நிமிடங்களுக்குள் அவன் மரித்து, பாதாளத்துக்குள் இறங்கியிருந்திருக்கக்கூடும். அவனுடைய இரத்தம் எல்லாம் வற்றிப்போய், பெலனெல்லாம் அற்றுப்போய், இருதயம் தொய்ந்தபோது அவன் இயேசு கிறிஸ்துவை நோக்கி, “ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” (லூக். 23:42) என்று ஜெபித்தான்.

உடனே கிறிஸ்துவினுடைய காருண்யம் ஒரு மின்தூக்கி தூக்குவதைப்போல பாதாளத்தின் வல்லமையிலிருந்து அவனை விடுவித்து, உயர்த்தி, பரதீசுக்கு செல்லும் பாக்கியத்தைத் தந்தது. “இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன்” (லூக். 23:43) என்று கிறிஸ்து வாக்களித்தார்.

இப்பொழுதெல்லாம் அறுபது அல்லது எழுபது மாடிகளைக்கொண்ட உயரமான கட்டிடங்களைக் காண்கிறோம். மிக உயரத்திலுள்ள மாடிகளுக்கு படியேறிச் செல்ல முயன்றால் இருதயம் தொய்ந்துபோகும். மூச்சு வாங்கும், இருதய நோய் உள்ளவர்கள் மரித்து விடக்கூடும். அதற்காகத்தான் அங்கெல்லாம் மின்தூக்கி வைத்திருக்கிறார்கள். அது நம்மை அருமையாக தூக்கிச் சுமந்துகொண்டுபோய் நாம் விரும்பும் மாடியில் விட்டுவிடுகிறது. கர்த்தருடைய கரமும் அப்படித்தான் பூமியின் கடையாந்தரத்திலிருந்து உங்களைத் தூக்கியெடுத்து உயர்த்துகிறது.

தேவபிள்ளைகளே, கர்த்தர் இந்த புதிய ஆண்டிலே, நீங்கள் நினைத்ததைவிட, வேண்டிக்கொண்டதைவிட பெரிய உயர்வை உங்களுக்காக வைத்திருக்கிறார்.

நினைவிற்கு:- “ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள் (1 பேது. 5:6).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.