Appam, Appam - Tamil

ஜனவரி 13 – பயப்படாத இருதயம்!

“கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானாவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்? எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன் (சங். 27:1,3).

பயப்படாத இருதயமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் சிங்கத்தைப்போல தைரியமுள்ளவர்களாயிருப்பார்கள். தோல்வியினால் துவண்டுவிடாத, சோதனையினால் சோர்ந்துபோகாத இருதயமுள்ளவர்கள் வேகமாய் முன்னேறுவார்கள்.

கர்த்தரைச் சார்ந்துகொண்ட தாவீதுக்கு அப்படிப்பட்ட ஒரு இருதயத்தைக் கர்த்தர் கொடுத்தபடியால், அவர் தைரியமாய் முழங்கிச் சொல்லுகிறார், “எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன்” (சங். 27:3).

அநேகர் தோல்வி உணர்வினால் பீடிக்கப்பட்டு, எப்பொழுதும் தோல்வியையே சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். தேர்வு எழுதும்போதே தோல்வியடைந்துவிடுவதைப்பற்றி எண்ணி கலங்குகிறார்கள். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ, தற்கொலைதான் முடிவோ என்று அவிசுவாசமான வார்த்தைகளை சிலர் பேசுகிறார்கள். அவர்களுடைய சிந்தனை கர்த்தர்பேரில் இல்லாமல் பயத்தின்மேல் இருப்பதே இதன் காரணம்.

தாவீதின் விசுவாச வார்த்தைகளைப் பாருங்கள், “கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?” (சங். 27:1). “உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்” (சங். 18:29). “கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை” (சங். 16:8).

ஒரு தேவனுடைய மனிதர், பதவி உயர்வுக்காக மிகவும் கடினமான ஒரு தேர்வை எழுதவேண்டியதிருந்தது. அந்த தேர்வுக்கு படிக்கும்போதெல்லாம், “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலி. 4:13) என்ற வாக்குத்தத்த வசனத்தை விசுவாசத்துடன் அறிக்கையிட்டுக்கொண்டேயிருந்தார்.

இந்த தேர்வில் தேர்வுபெற எனக்கு ஞானமும், வல்லமையும், சத்துவமும் உண்டு என்று சொல்லி ஜெபித்தார். கர்த்தர் அந்தத் தேர்விலே அவரை வெற்றிசிறக்கப்பண்ணி மகிமையாய் உயர்த்தினார். தேவபிள்ளைகள் தோல்வியை ஜெயமாய் மாற்றும் வழிமுறைகளை அறிந்திருக்கவேண்டும்.

ஒருமுறை எசேக்கியா இராஜாவிற்கு விரோதமாக பெரிய யுத்தம் வந்தபோது, அவர் கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்று, தன் உள்ளத்தை கர்த்தருக்கு முன்பாக விரித்து வைத்து, ஊக்கமாய் ஜெபித்தார். நடந்தது என்ன? கர்த்தர் அந்த ஜெபத்தைக் கேட்டு, ஒரு தேவதூதனை அசீரியரின் பாளயத்திற்குள் அனுப்பினார். அவன் புறப்பட்டுப்போய், ஒரு லட்சத்து எண்பத்தைந்தாயிரம்பேரைச் சங்கரித்தான்.

தேவபிள்ளைகளே, ஜெயகிறிஸ்து உங்கள் பட்சத்தில் இருக்கிறார். நீங்கள் பயப்படுகிற எந்த காரியமும் உங்களுக்கு நேரிடுகிறதில்லை. ஆகவே தலைநிமிர்ந்து நடந்து, கர்த்தரை ஸ்தோத்திரித்து, மகிமைப்படுத்துங்கள். அவர் உங்கள் துக்கத்தை சந்தோஷமாய் மாறப்பண்ணுகிறார். நிச்சயமாகவே இந்த வருடம் உங்களை வெற்றிசிறக்கப்பண்ணுகிற வருடமாயிருக்கும்.

நினைவிற்கு:- “அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்” (சங். 84:6).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.