No products in the cart.
ஜனவரி 11 – இனிமையான சந்ததி!
“சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; …. யாப்பேத்தை தேவன் விருத்தியாக்குவார்” (ஆதி. 9:26,27).
ஆதாம் ஜீவனுள்ளோர் எல்லாருக்கும் தகப்பன். ஆனால் நோவாவின் ஜலப்பிரளயத்திற்கு பிறகு, அவரே புதிய சந்ததிக்கு தகப்பனானார். வேதம் சொல்லுகிறது, “இவர்களே தங்கள் தேசங்களிலும், தங்கள் ஜாதிகளிலுமுள்ள தங்கள் வம்சங்களின்படியேயும், தங்கள் பாஷைகளின்படியேயும் சேமுடைய சந்ததியார். தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இவைகளே; ஜலப்பிரளயத்துக்குப்பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன” (ஆதி. 10:31,32).
மாம்சப்பிரகாரமான சந்ததியும் உண்டு. ஆவிக்குரிய சந்ததியும் உண்டு. மாம்சமானவன் மாம்சத்திற்குரிய சந்ததியைப் பெறுகிறான். ஆவிக்குரியவன் ஆவிக்குரிய சந்ததியைப் பெறுகிறான். ஆதாம் மாம்சமான யாவருக்கும் தகப்பன். கர்த்தர் சபைகளிலே ஆவிக்குரிய தகப்பன்மாரை ஊழியக்காரர்களாக நமக்குத் எழுப்பித் தருகிறார்.
தாவீதுக்கு உலகப்பிரகாரமான தகப்பனாக ஈசாய் இருந்தாலும், தீர்க்கதரிசியான சாமுவேலை ஆவிக்குரிய தகப்பனாகக்கொண்டு, தகப்பனே என்று அழைத்தார். அதுபோலவே எலிசாவும் எலியாவை தகப்பனே என்று அழைத்தார். தீமோத்தேயுவுக்கு அப். பவுல் ஆவிக்குரிய தகப்பனாக இருந்தார்.
நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு மாம்சத்தின்படிமட்டும் தகப்பனாக இராமல், ஆவிக்குரிய தகப்பனாகவும் விளங்கவேண்டும். உங்களோடு உங்களுடைய பிள்ளைகளையும் ஆவிக்குரிய வழியிலே நடத்திச்செல்லுகிற பெரிய பொறுப்பை கர்த்தர் உங்களுக்குத் தந்திருக்கிறார். நீங்கள் அவருடைய வழியிலே உத்தமமாய் நடக்கும்போது, தலைமுறை தலைமுறையாக கர்த்தர் உங்களை ஆசீர்வதித்தருளுவார். “இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்” (ஏசா. 43:21) என்று கர்த்தர் உங்கள் சந்ததிகுறித்து எதிர்பார்க்கிறார்.
ஆபிரகாமின் தேவனாக இருந்தவர், ஈசாக்கின் தேவனாக இருந்தவர், யாக்கோபின் தேவனாக இருந்தவர், யோசேப்பின் தேவனாக இருந்தவர் உங்களுடைய தேவனாகவும், உங்களுடைய பிள்ளைகளின் தேவனாகவும், பிள்ளைகளின் பிள்ளைகளுடைய தேவனாகவும், தலைமுறை தலைமுறையாக இருந்து, உங்களை அன்பாய் வழிநடத்துவார்.
ஆபிரகாமின் சந்ததியை ஆண்டவர் மூன்று காரியங்களுக்கு ஒப்பிட்டுச் சொன்னார். ‘உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும், வானத்தின் நட்சத்திரங்களைப்போலவும் பெருகப்பண்ணுவேன்’ என்றார் (ஆதி. 13:16, 22:17). அன்றைக்கு ஆபிரகாமின் சந்ததியார் பாலும் தேனும் ஓடுகிற கானானைச் சுதந்தரித்தார்கள். இன்று நாம் ஆவிக்குரிய இஸ்ரவேலராக பரமக்கானானை சுதந்தரிப்போம். புதிய எருசலேமை சுதந்தரிப்போம்.
“இந்த சந்ததியிலே உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்” என்று கர்த்தர் நோவாவைக்குறித்து சாட்சி கொடுத்ததுபோல, உங்களைக்குறித்தும் சாட்சி கொடுப்பாராக! தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தருக்கென்று நின்று, இந்த சந்ததியாருக்கு அவருடைய சுவிசேஷத்தை அறிவிப்பீர்களேயானால் உங்கள் சந்ததியை கர்த்தர் நிச்சயம் ஆசீர்வதித்தருளுவார்.
நினைவிற்கு:- “ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்” (சங். 22:30).
