Appam, Appam - Tamil

ஜனவரி 10 – ஆசீர்வாதமான தொழில்!

“நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான்” (ஆதி. 9:20).

நோவாவின் வாழ்க்கை ஒரு ஆசீர்வாதமான வாழ்க்கையாகும். அவர் நீதிமானாயும், இருந்தார். உத்தமனாயுமிருந்தார். தேவனோடு சஞ்சரித்துக்கொண்டிருந்தார். கர்த்தர் நோவாவோடும், அவருடைய குடும்பத்தாரோடும் உடன்படிக்கை செய்தார். நோவாவையும், அவருடைய சந்ததியையும் ஆசீர்வதித்தார்.

நோவா மூன்று வேலைகளை மாறிமாறிச் செய்தார் என்பதை நாம் அறிகிறோம். முதலாவதாக, அவர் பேழையைக் கட்டினார். பேழையைக் கட்டுவது சாதாரணமான காரியம் அல்ல. அது முந்நூறு முழ நீளமும், ஐம்பது முழ அகலமும், முப்பது முழ உயரமுமானது. அது எவ்வளவு பெரியதாயிருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள். கி.பி. 1850-ம் ஆண்டுவரையிலும் அவ்வளவு பிரமாண்டமான ஒரு கப்பலை யாரும் கட்டினதில்லை.

நோவா அந்த பேழையைக் கட்டும்போது, பெருமழை பெய்வதற்கு எந்த அறிகுறியும் இருக்கவில்லை. அந்த நாட்களில் வாழ்ந்த ஜனங்கள் அவரை நம்பியிருக்கமாட்டார்கள். கப்பலை ஏன் வெட்டாந்தரையிலே கட்டுகிறீர், கடற்கரையிலே கட்டுவதுதானே என்று பரியாசம்பண்ணியிருந்திருப்பார்கள். அப்படிப்பட்ட பரியாசங்களின்மத்தியிலும் நோவா தன்னுடைய வேலையைக் கைவிடவில்லை. பொறுமையோடு கப்பலைக் கட்டி முடித்தார்.

இரண்டாவதாக, அவர் செய்த வேலை கர்த்தருடைய வார்த்தையை பிரசங்கித்ததாகும். “நீதியைப் பிரசங்கித்தவராகிய நோவா” (2 பேது. 2:5) என்று வேதத்திலே வாசிக்கிறோம். எத்தனை ஆண்டு அப்படிப் பிரசங்கித்தார் என்பது தெரியவில்லை. அதிகமான வேதபண்டிதர்கள் நூற்றிருபது வருடம் அவர் பிரசங்கித்தார் என்று சொல்லுகிறார்கள். அதற்கு ஆதாரமாக ஆதி. 6:3ம் வசனத்தையும் முன்வைக்கிறார்கள்.

ஆனால் வேதத்தை ஆராய்ந்துபார்க்கும்போது, குறைந்தது நூறு வருடங்களாவது நோவா பிரசங்கித்துவந்திருக்கக்கூடும் என்று எண்ணத்தோன்றுகிறது. நோவாவுக்கு ஐநூறு வயதானபோது சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றார். நோவாவுக்கு அறுநூறு வயதாகும்போது பூமியில் மழை பெய்தது (ஆதி. 7:11). ஆகவே, நூறு ஆண்டுகள் பிரசங்கித்திருந்திருக்கக்கூடும். ஆனாலும் யாரும் மனந்திரும்பவில்லை. ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, கப்பல் கட்டும் வேலையும் அவருக்கு இல்லை. பிரசங்கிக்கும் வேலையும் இல்லை. ஆகவே திராட்சத்தோட்டத்தை வெற்றிகரமாக நாட்டினார்.

இஸ்ரவேலர் திராட்சத்தோட்டங்களை பெரும் செல்வமாகக் கருதுவார்கள். ஒலிவமரம் அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கும், அத்திமரம் அரசியல் வாழ்க்கைக்கும் நிழலாட்டமாய் இருக்கிறதுபோல, திராட்சத்தோட்டம் அவர்களுடைய குடும்ப வாழ்க்கைக்கு அடையாளமாய் இருக்கிறது.

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்கு என்ன வேலையைக் கொடுத்தாலும் அதில் உண்மையும் உத்தமமுமாய் இருங்கள். அந்த வேலையிலே கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார். “நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” (மத். 25:21) என்றும், “உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்” (சங். 128:2) என்றும் கர்த்தர் சொல்லுகிறார்.

நினைவிற்கு:- “உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவ மரக்கன்றுகளைப்போல் இருப்பார்கள்” (சங். 128:3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.