Appam, Appam - Tamil

ஏப்ரல் 25 – கர்த்தர் பேரில் எரிச்சல்!

“தேவன் யோனாவை நோக்கி: நீ ஆமணக்கினிமித்தம் எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார்; அதற்கு அவன்: நான் மரணபரியந்தமும் எரிச்சலாயிருக்கிறது நல்லதுதான் என்றான்” (யோனா 4:9).

கர்த்தர்பேரில் யோனாவுக்கு எரிச்சல் ஏற்பட்டது. இந்த எரிச்சலை அவரால் மாற்றிக்கொள்ளவே முடியவில்லை. ஆனால் ஆண்டவர் யோனாவின்மேல் அன்புகொண்டு அவருடைய எரிச்சல் நீங்கலாகும்படியாக ஒரு ஆமணக்குச்செடியை முளைக்கக் கட்டளையிட்டார். பின்பு, அன்போடு யோனாவைத் தேடி வந்து, “யோனாவே, நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ?” என்று கேட்டார்.

ஏன் யோனாவால் தன் எரிச்சலை மாற்றிக்கொள்ள முடியாமல் போனது? அவரது தீர்க்கதரிசனம் நிறைவேறாமல் போனதே அதன் காரணம். கர்த்தர் நினிவே மக்களுக்கு இரக்கம் பாராட்டிவிட்டார். கர்த்தர் இரக்கமும், மனதுருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவரென்பதால், நினிவே மக்கள் இரட்டுடுத்தி சாம்பலில் அமர்ந்ததைக் கண்டவுடன், அவர்களை மன்னித்துவிட்டார்.

கர்த்தர் ஆமணக்குச்செடியை முன்வைத்து யோனாவோடு இடைபட்டார். “நீ பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே. வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்” (யோனா 4:10,11).

பலவேளைகளில், நாம் தேவனுடைய அளவற்ற ஞானத்தையும், வழிகளையும் புரிந்துகொள்ள முடியாதபடியினாலே, கர்த்தரிடத்தில் பல கேள்விகளைக் கேட்கிறோம். தேவனுக்கு விரோதமாய் முறுமுறுக்கக்கூட செய்கிறோம். வேதம் சொல்லுகிறது, “மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, …. நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்” (உபா. 29:29).

இன்றைக்கும்கூட, ‘ஏன் என்னுடைய குடும்பத்தில் கஷ்டம்? ஏன் நல்ல வேலை கிடைக்கவில்லை? கர்த்தர் ஏன் என்னுடைய பிள்ளையை எடுத்துக்கொண்டார்?’ என்று பல கேள்விகள் உங்களுடைய உள்ளத்தில் எழலாம்.

ஆனால், குறிக்கப்பட்ட நேரத்தில் நீங்கள் பரலோகத்திற்குப் போகும்போது, மகா அன்புள்ள தேவன் எல்லாவற்றையும் உங்களுடைய நன்மைக்கு ஏதுவாகவே செய்துவந்திருக்கிறார் என்பதைத் தெளிவாய்ப் புரிந்துகொள்வீர்கள். வேதம் சொல்லுகிறது, “தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது” (ரோமர் 8:28).

அநேக காரியங்கள் உங்களுடைய குறைந்த அறிவுக்கு எட்டாதவையாய் இருப்பதனால் கர்த்தருடைய வழிகளைப் புரிந்துகொள்ள முடியாதபடி திகைக்கிறீர்கள். முறுமுறுக்கிறீர்கள். எரிச்சலடைகிறீர்கள். ஆனால் கர்த்தருடைய பாதத்தில் உட்கார்ந்து, ஜெபித்து, தியானித்துப் பார்ப்பீர்களென்றால், மறைவானவைகளை வெளிப்படுத்துகிறவர் தம்முடைய சித்தத்தையும் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.

தேவபிள்ளைகளே, தேவனுக்கு விரோதமாக உங்கள் உள்ளத்தில் எரிச்சல் ஏற்பட்டு, நாளுக்குநாள் வலுசர்ப்பத்தைப்போல வளர்ந்து, அவர் உங்களுக்கு அளித்திருக்கும் நன்மைகளை விழுங்க இடம் கொடுக்காதிருங்கள்.

நினைவிற்கு:- “இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்” (1 கொரி. 13:12).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.