No products in the cart.
ஏப்ரல் 02 – செந்நிறமான ரோஜா!
“நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்” (உன். 2:1).
பாரதத்தின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு ஒரு சிறுமி ஒவ்வொருநாளும் அழகான ரோஜாவை கொண்டுவந்து தருவாள். அவரும் அவளைப் பிரியப்படுத்த விரும்பி அந்த ரோஜா மலரை அன்போடு பெற்றுக்கொண்டு, தன்னுடைய உடையில் அதை அணிந்துகொள்வார். போகப்போக அவருக்கு ரோஜாவின்மேல் அளவற்ற பற்று உண்டாயிற்று. ஆகவே தன் வீட்டிற்குப்பின் உள்ள பகுதியில் ஒரு அழகிய ரோஜா தோட்டத்தை உருவாக்கி, ஒவ்வொருநாளும் தமக்குப் பிரியமான ரோஜாவைப் பறித்து அணிந்துகொள்வார்.
அவர் இறந்தபோது அந்தத் தோட்டக்காரன் ஒரு ரோஜாப்பூவைப் பறித்துக்கொண்டு ஓடி வந்தான். ‘பாபுஜி, நீங்கள் விரும்பும் பூவைக் கொண்டுவந்திருக்கிறேன், கண்ணைத் திறந்துபாருங்கள், இதை வாங்கி அணிந்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லி கதறியழுதான். அந்தோ! நித்திய மேன்மையைத் தரும் பரலோக சாரோனின் ரோஜாவை அவர் அணிந்திருக்கவில்லை.
ரோஜா புஷ்பத்தின் நிறம் சிவப்பாக இருக்கிறது. அது இயேசுவின் இரத்தத்தையும், தியாகத்தையும், கல்வாரி மரணத்தையும் அன்போடு ஞாபகப்படுத்துகிறது. லீலி புஷ்பம் வெண்மையாக இயேசுகிறிஸ்துவின் பரிசுத்தத்தையும், தூய வாழ்க்கையையும் வெளிப்படுத்துகிறது. ஆம்! அவர் வெண்மையும் சிவப்புமானவர் அல்லவா!
நான் ஒரு முறை எருசலேமிலுள்ள கெத்செமனே தோட்டத்திற்குச் சென்றிருந்தபோது இயேசு இரத்த வியர்வை சிந்தின இடத்திலே செந்நிறமுள்ள அழகான பூக்கள் பூத்து, கிறிஸ்துவினுடைய இரத்தம்தான் தெளிக்கப்பட்டிருக்கிறதோ என்று எண்ணும்படி காட்சியளித்தன. அங்கே ஆண்டவருடைய அன்பையும், கல்வாரி நேசத்தையும் அதிகமாக தியானித்தேன்.
அவர் கல்வாரிமேட்டிலே அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு விலையேறப்பெற்ற தம் இரத்தத்தையெல்லாம் சிந்திக்கொடுத்தார். நம்மை விலையேறப்பெற்றவர்களாய் மாற்றவேண்டுமென்பதற்காக அவர் செய்த தியாகம் எவ்வளவு விசேஷமானது! தாங்கொணா பாடுகளை சகித்தாலும், அநேகம் பிள்ளைகளை மகிமையிலே கூட்டிச்சேர்ப்பேன் என்கிற உறுதியினால் அவர் முகம் சாரோனின் ரோஜாவைப்போல மலர்ந்திருந்தது. அவர் கலங்கவுமில்லை, பயப்படவுமில்லை.
நாம் எந்த இடத்திற்குச் சென்றாலும் சாரோனின் ரோஜாவை நம்மோடு எடுத்துச்செல்வோமாக! கிறிஸ்துவின் குணாதிசயங்களை நம்மோடு எடுத்துச்செல்வோமாக! நம்முடைய ஜீவியத்தை அவருக்காக சுகந்த வாசனையாக நற்கந்தமாக மாற்றுவோமாக! அப்பொழுதுதான் சந்தோஷம் நிறைந்தவர்களாக, சகலவித நன்மைகளினால் நிரப்பப்பட்டவர்களாக நாம் காணப்படுவோம்.
நீங்கள் ஒரு ரோஜாப்பூவை எடுத்து அதை கைகளினால் கசக்கினாலும், கால்களினால் நசுக்கினாலும் அது பதிலுக்கு உங்கள் கைகளையும் கால்களையும் மணக்கச்செய்கிறது. தேவபிள்ளைகளே, எங்கே பகையும் வெறுப்பும் இருக்கிறதோ, அங்கே அன்பையும், எங்கே கசப்பும் காயங்களும் இருக்கிறதோ, அங்கே மன்னிப்பையும், எங்கே சந்தேகம் இருக்கிறதோ அங்கே விசுவாசத்தையும் நாம் வெளிக்காட்டவேண்டும்.
நினைவிற்கு:- “எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்” (2 கொரி. 2:14,15).
