No products in the cart.
ஆகஸ்ட் 11 – ஒழிந்து போகாதபடி..!
“நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்” (லூக். 22:32).
அன்றாட வாழ்க்கையில் ஆங்காங்கே விசுவாச சோதனைகள் வரத்தான் செய்யும்! சத்துரு கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோல புடைப்பதற்கு உத்தரவு வாங்கத்தான் செய்வான். ஆனாலும், ‘நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்’ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சாத்தான் புடைக்க விரும்புவது பதறையோ அல்லது தவிட்டையோ அல்ல. கோதுமை மணி போன்ற உங்களைப் புடைக்க உத்தரவு கேட்கிறான். கிறிஸ்து உங்களுக்குள் ஜீவனாய் இருக்கிறதினாலே நீங்களும் கோதுமை மணியாய் விளங்குகிறீர்கள். நீங்கள் கர்த்தருடைய பார்வையிலே விலையேறப்பெற்றவர்களாய் இருக்கிறீர்கள்.
திருடன் திருட வரும்போது உதவாத கந்தல் துணிகளையோ, உடைந்துபோன மண் சட்டிகளையோ எடுக்கமாட்டான். விலையேறப்பெற்ற பொன் ஆபரணங்களையும், பணத்தையும், விலை உயர்ந்த வஸ்திரங்களையுந்தான் கொள்ளையடிக்க முயற்சிப்பான். அதுபோல சாத்தானின் தேவையும் விலையேறப்பெற்ற கோதுமை மணிகளே தவிர பதறுகள் அல்ல.
நீங்கள் விலையேறப்பெற்றவர்கள். கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிற இரட்சிப்பு, அபிஷேகம், நித்தியஜீவன் ஆகிய அனைத்தும் விலையேறப்பெற்றவை. எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் விசுவாசம் விலையேறப்பெற்றது. சாத்தான் உங்களைச் சோதிக்க வரும்போது விலையேறப்பெற்ற விசுவாசத்தை பறித்துக்கொண்டுபோகத்தான் வருகிறான். அதே நேரத்தில் விசுவாசத்தைக் காக்கிறவர் ஒருவர் உண்டு. அவர்தான் விசுவாசத்தை உங்களிலே துவக்குகிற இயேசு கிறிஸ்து! முடிவு வரையிலும் பாதுகாத்துக்கொள்ள வல்லமையுள்ளவர். நீங்கள் விசுவாசத்தில் நிலைநிற்க வேண்டும் என்பதில் அவர் அதிக வைராக்கியம் உடையவராய் இருக்கிறார்.
அப். பவுலுக்கு விரோதமாய் எத்தனையோ போராட்டங்கள் வந்தன. சாத்தானுடைய சோதனைகள் வந்தன. அவர் பசியையும், பட்டினியையும், அவமானத்தையும், நிந்தையையும், நாச மோசங்களையும், உபத்திரவங்களையும், வியாகுலங்களையும் கடந்து செல்லவேண்டியிருந்தது. சாத்தானிடமிருந்து வருகிற சோதனைகள் பெரிய போராட்டங்களாக இருந்தாலும் ‘நல்லப் போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்’ என்று முடிவில் அவர் சொல்லுவதைப் பாருங்கள்.
எத்தகைய சோதனைகள் வந்தாலும், எத்தகைய போராட்டங்கள் வந்தாலும் நீங்கள் விசுவாசத்தைக் காத்துக்கொள்ளுவீர்களாக. விசுவாசம் உங்களில் பெருகவும், விசுவாசத்தில் நீங்கள் உறுதியாய் இருக்கவும் வேத வசனத்தில் நிலைநிற்க வேண்டியது அவசியம். விசுவாசம் எப்படி வருகிறது? வேதம் சொல்லுகிறது: “விசுவாசம் கேள்வியினாலே வரும். கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்” (ரோமர் 10:17). தேவபிள்ளைகளே, சாத்தான் பாடுகளையும், உபத்திரவங்களையும் கொண்டுவந்து, உங்களை வழிவிலகிப் போகும்படி கண்ணிகளை வைக்கிறானா? வேத வசனங்களைப் பற்றிக்கொள்ளுங்கள். வேதவசனங்களை அறிக்கையிடும்போது உங்களுடைய விசுவாசம் விருத்தியாகும்.
End11:- “விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” (எபி. 12:1).