bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
Appam, Appam - Tamil

ஆகஸ்ட் 11 – அழைத்துவரச் சொன்னார்!

“இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார்” (மாற். 10:49).

ஒருபக்கம் இயேசு நிற்கிறார். மறுபக்கம் பர்திமேயு நிற்கிறார். இரண்டு பேருக்கும் இடையே ஒரு இடைவெளி இருக்கிறது. இந்த இடைவெளி எதைக் காண்பிக்கிறது. பாவம் ஒன்றுதான் தேவனுக்கும், நமக்கும் இடைவெளியை ஏற்படுத்துகிறது.

வேதம் சொல்லுகிறது, “உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது” (ஏசா. 59:2). ஆதாம் ஏவாள் பாவம் செய்தபோது, கர்த்தருக்கும், அவர்களுக்குமிடையே ஒரு பெரிய இடைவெளி உண்டானது.

யூதாஸ்காரியோத்துக்குள் வந்த பாவம் என்றென்றுமாய் இடைவெளியாகி அவனை அன்புள்ள கர்த்தரிடத்திலிருந்து பிரித்துவிட்டது. இந்த இடைவெளியை நீக்கக்கூடிய இரண்டு காரியங்கள் உண்டு. முதலாவது, இயேசுவின் இரத்தம். ஒருவன் இயேசுவினுடைய இரத்தத்தால் கழுவப்படும்போது அவன் கிறிஸ்துவண்டை நெருங்கி வருகிறான்.

வேதம் சொல்லுகிறது, “முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து இப்படிச் சமாதானம்பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார்” (எபே. 2:13-16).

இரண்டாவது, ஊழியர்கள். கிறிஸ்துவையும், ஜனங்களையும் ஒப்புரவாக்கி, “இதோ, உங்கள் ஆண்டவர்” என்று மனுகுலத்தையும், “இதோ, உங்களுடைய பிள்ளை” என்று சொல்லி ஆண்டவரையும் இணைக்க ஊழியர்கள் தேவை. ஒப்புரவாக்கக்கூடியவர்கள் தேவை.

அதற்காகவே இயேசு அன்றைக்கு தம்முடைய சீஷர்களைத் தெரிந்துகொண்டார். அவர் ஐந்து அப்பத்தையும், இரண்டு மீன்களையும் கையில் ஏந்தி ஆசீர்வதித்தபோது, அவைகளைக்கொண்டுபோய் ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்தளிக்க ஊழியர்கள் தேவையாயிருந்தனர். ஆசீர்வதிக்கப்பட்ட வசனமாகிய அப்பங்களையும், ஆழமான வெளிப்பாடுகளையும் ஜனங்களிடத்திலே கொண்டுசெல்ல ஊழியர் தேவை.

லாசருவை உயிரோடு எழுப்ப கர்த்தர் ஆயத்தமாயிருந்தார். ஆனால் வாசலிலிருந்த கல்லைப் புரட்டித்தள்ள அவருக்கு ஆட்கள் தேவைப்பட்டது. லாசருவின் கட்டுகளையெல்லாம் அவிழ்த்துவிட அவருக்கு உடன்ஊழியர்கள் தேவை. ஒரு திமிர்வாதக்காரனை இயேசுவண்டை கொண்டுவர நான்குபேர் தேவைப்பட்டார்கள்.

அப். பவுல் இரட்சிக்கப்படுவதற்கு முன்பு சவுலாய் இருந்த வேளையிலே, தமஸ்கு வீதியில் அற்புதமாய் கிறிஸ்துவால் சந்திக்கப்பட்டார். பரலோகத்தின் ஒளி அவர்மேல் விழுந்தது. கண்கள் குருடாய்ப் போய்விட்டது. ஆனாலும், அந்த சவுலைப் பவுலாக உருவாக்கக்கூடிய ஒரு அனனியா அவருக்குத் தேவைப்பட்டார்.

இன்றைக்கு மாம்சத்தின்படியுள்ள கிறிஸ்து நம்முடைய மத்தியிலே இல்லை. நன்மை செய்த அவருடைய கரங்கள் சிலுவை மரத்தோடு அறையப்பட்டது. கிராமம் எங்கும் சுற்றி நடந்த அவருடைய பாதங்கள் சிலுவையிலே அறையப்பட்டு இரத்தம் சொரிந்தன.

தேவபிள்ளைகளே, இன்றைக்கு நீங்களே அவருக்கு கையும் காலுமாக இருக்கிறீர்கள். இந்த பூமியிலே அவர் விட்டுச்சென்ற ஊழியத்தை நீங்கள்தான் தொடர்ந்து செய்யவேண்டும்.

நினைவிற்கு:- “அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்” (2 கொரி. 5:18).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.