Appam, Appam - Tamil

அக்டோபர் 31 – மரியாள்!

“இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது (லூக். 1:38).

வேதாகமத்திலுள்ள ஸ்திரிகளுக்குள் மரியாள் தேவனிடத்தில் கிருபைபெற்றவளும் ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் இருந்தாள். மரியாளின் குணாதிசயங்களையெல்லாம் வாசித்து தியானிக்கும்போது, உண்மையாகவே அந்த நன்மையான சம்பவங்கள் ஒவ்வொன்றும் நமது இருதயத்தை மகிழ்விப்பதுடன், நம்முடைய ஜீவியத்தைப் பக்திவிருத்தியடையச் செய்கிறது.

மரியாள் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு கிருபையின் பாத்திரம். ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்ட ஆசீர்வாதத்தின் பாத்திரம். ஆண்டவருக்கு அடிமையாகத் தன்னை ஒப்புக்கொடுத்த தாழ்மையின் பாத்திரம். பரிசுத்த ஆவியானவரின் நிரப்புதலுக்காக ஏங்கி எதிர்பார்த்த வாஞ்சையின் பாத்திரம். விசுவாசத்தினால் தன்னை தியாகத்திற்கு ஒப்புக்கொடுத்த அர்ப்பணிப்பின் பாத்திரம். மகிழ்ச்சியோடு தேவனை மகிமைப்படுத்தும் துதியின் பாத்திரம். எல்லாவற்றையும் தனக்குள்ளே அடக்கி சிந்திக்கும் தியானத்தின் பாத்திரம். அல்லேலூயா!

பழைய ஏற்பாட்டின் ஆரம்பத்தில் ஏவாள் என்னும் ஒரு ஸ்திரீயின்மூலம் பாவமும், சாபமும் மனுக்குலத்திற்குள் வந்தது. அதே நேரத்தில் புதிய ஏற்பாட்டில் சாத்தானின் தலையை நசுக்கும் ஸ்திரீயின் வித்தை மரியாள் கொண்டுவந்தாள். இந்த ஸ்திரியின்மூலம் உலகத்திற்கெல்லாம் ஆசீர்வாதமான எம்பெருமான் இயேசு தோன்றினார். மரியாளின் வாழ்க்கையும்கூட, நமக்கு கிருபையையும், ஆசீர்வாதத்தையும் வெளிப்படுத்துகிறதாய் இருக்கிறது.

உலகத்தில் கோடானகோடி மக்கள் இருந்தபோதிலும் மரியாளுக்குக் கர்த்தருடைய கண்களில் தயவுகிடைக்கக் காரணம் என்ன? சற்று சிந்தித்துப்பாருங்கள். வேதம் சொல்லுகிறது: “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது” (2 நாளா. 16:9). “கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது” (நீதி. 15:3) என்றும், “அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது; அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது” (சங். 11:4) என்றும்கூட வேதத்தில் வாசிக்கிறோம்.

கர்த்தருடைய கண்கள் மரியாளை நோக்கிப்பார்த்தபோது அவளுடைய தாழ்மையும், அவளுடைய பக்தியும், தேவனுக்குத் தன்னை தியாகமாக அர்ப்பணிக்கிற சுபாவமும் அவரை மிகவும் கவர்ந்தது. தாழ்மையுள்ளவர்களுக்குக் கர்த்தர் கிருபை அளிக்கிறார் அல்லவா! “கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்” என்று வேதம் சொல்லுகிறது அல்லவா! (யாக். 4:10). அப்படியே கர்த்தர் மரியாளின் தாழ்மையினால் அவளை உயர்த்த சித்தங்கொண்டார்.

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களை உயர்த்தவேண்டுமென்றால் உங்களுக்குத் தாழ்மை அவசியம். தேவனுக்கு முன்பாக நீங்கள் எப்படிக் காணப்படுகிறீர்கள்? கர்த்தருக்கு முன்பாக நீங்கள் எப்போதும் தாழ்மைப்படுவீர்களென்றால் நருங்குண்ட இருதயத்தோடு தேவசமுகத்தில் உங்களைத் தாழ்த்துவீர்களென்றால், கர்த்தர் நிச்சயமாகவே உங்களையும் உயர்த்துவார்.

நினைவிற்கு:- “பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்” (ஏசா. 57:15).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.