No products in the cart.
அக்டோபர் 03 – ஆபிரகாம்!
“இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்” (ஆதி. 17:5).
இன்றைக்கு நாம் சந்திக்கிற பரிசுத்தவான் ஆபிரகாம். அவருடைய தகப்பனார் அவருக்கு ஆபிராம் என்ற பெயரைச் சூட்டினார். ஆபிராம் என்பதற்கு, “உயர்வான தகப்பன்” என்று அர்த்தம். ஆனால் கர்த்தர் அந்தப் பெயரை மாற்றி, திரள் ஜனத்தின் தகப்பன் என்று அர்த்தம் கொள்ளும்வகையில் ஆபிரகாம் என்று பெயரிட்டார். வேதத்தில் முதன்முதலிலே பெயர்மாற்றம் செய்யப்பட்டது இவருக்கே!
ஆபிரகாம் மூன்று முற்பிதாக்களிலே முதலானவர். இன்றைக்கு யூதர்களும், ஆபிரகாமை எங்கள் தகப்பன், தீர்க்கதரிசி, எபிரெய வம்சத்தைத் தோற்றுவித்தவர் என்று சொல்லி மேன்மைப்படுத்துகிறார்கள். இஸ்லாமியர்கள், இப்ராஹிம் நபி என்று அவரைப் புகழுகிறார்கள். புதிய ஏற்பாட்டிலே கிறிஸ்தவர்களும் அவரை முக்கியமானவராகக் கருதுகிறார்கள். மத்தேயு சுவிசேஷம் “ஆபிரகாமின் குமாரனாகிய, தாவீதின் குமாரனாகிய, இயேசு கிறிஸ்து” என்றே துவங்குகிறது.
சிலரைக் கர்த்தர் சொப்பனங்கள்மூலமாயும், தரிசனங்கள்மூலமாயும் வழிநடத்துகிறார். சிலரை ஊழியர்கள்மூலமாயும், போதகர்கள்மூலமாயும் வழிநடத்துகிறார். சிலரை வேதவசனங்கள்மூலமாய் நடத்துகிறார். ஆனால் ஆபிரகாமைக் கர்த்தர் நேரடியாகவே நடத்தத் தீர்மானித்தார். பத்துமுறை ஆபிரகாமுக்குக் கர்த்தர் தரிசனமானார்.
முதல்முறை, “கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ” (ஆதி. 12:1,2) என்றார்.
ஆபிரகாமுக்கு ஒரு பெரிய விசுவாசமிருந்தது. தன்னை அழைத்த தேவன் தன்னை கடைசிவரை வழிநடத்துவார் என்பதே அந்த விசுவாசம். ஆகவே ஆபிரகாம், தான் போகுமிடம் இன்னதென்று அறியாமல், கர்த்தரைப்பின்பற்றி விசுவாசத்தோடு சென்றார் (எபி. 11:8). நாமும்கூட, அதே விசுவாசத்துடன் அழைத்தவர் உண்மையுள்ளவர் என்று நம்பி, இந்த கிறிஸ்தவப்பாதையிலே பரலோக இராஜ்யத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்.
கர்த்தர் ஆபிரகாமை ஆசீர்வதித்ததினால், அவர் செல்வச்சீமானாக விளங்கினார். திரளான ஆடுமாடுகள், ஒட்டகங்கள் போன்றவை அவருக்கிருந்தும், அவர் தாழ்மையோடு கூடாரங்களிலே குடியிருந்துகொண்டிருந்தார். அவருடைய கண்கள் உலகப்பிரகாரமான கானானைக் கண்டதுடன், பரலோக இராஜ்யத்தின் கானானையும் கண்டது.
வேதம் சொல்லுகிறது, “விசுவாசத்தினாலே அவன் (ஆபிரகாம்) வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான். ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்” (எபி. 11:9,10).
தேவபிள்ளைகளே, இப்படிப்பட்ட விசுவாசம் உங்களுக்கு இருக்கிறதா? கர்த்தர் என்னை நடத்துவார், வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர், அவர் என் ஓட்டத்தை வெற்றியோடு முடிக்கச்செய்வார், நான் ஆபிரகாமுக்குள் ஆசீர்வதிக்கப்படுவேன் என்றும் நீங்கள் விவாசிக்கிறீர்களா?
நினைவிற்கு:- “தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்” (ரோம. 4:21).