Oct – 27 – பின்மாற்றம் வேண்டாம்!

“நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்” (எபி. 10:39).

இந்த கடைசி நாட்களில் அநேக விசுவாசிகள் கர்த்தருக்காக வைராக்கியமாய் முன்னேறிச் செல்கிறவர்களாய் இருக்கிறார்கள். சிலரோ சோதனைகளை தாங்கக்கூடாமல் பின்மாற்றத்தில் செல்லுகிறவர்களாய் இருக்கிறார்கள். பின்வாங்கும்போது தேவபிரசன்னத்தையும் சமுகத்தையும் இழந்து கெட்டுப் போகிறவர்களாய் இருப்பார்கள். ஆனால் நீங்கள் முன்னேறிச் செல்லும்போதோ உங்களுடைய ஆத்துமா ஈடேறுகிறதாய் விளங்கும்.

ஒரு முறை தூக்குக்கு எத்தனமாய் இருந்த ஒரு கைதிக்காக விசுவாசிகள் இரவும் பகலும் போராடி ஜெபித்து, பல நாட்கள் உபவாசித்து அவனை விடுவித்து கொண்டு வந்தார்கள். ஆனால் அவனோ விடுதலையடைந்தவுடன் கிறிஸ்துவையும் மறந்து விட்டான். அவனுக்காக ஜெபித்த மக்களையும் மறந்து விட்டான். முழுவதுமான பின்மாற்ற அனுபவத்திற்குள் சென்று விட்டான். அவனுக்காக ஜெபித்த சகோதரர் மிகவும் துக்கத்தோடு, “அவன் தான் விடுதலையானால் ஒரு கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதாக வாக்களித்தான். ஆனால் இப்பொழுதோ, ஒரு இந்து கோவில் கட்டிக் கொண்டிருக்கிறான்” என்று சொன்னார்.

இந்த பின்மாற்றத்திற்கு காரணம் என்ன? முதல் முக்கிய காரணம் இப்படிப்பட்டவர்களுக்கு ஆழமான மனம் திரும்புதலும், ஆழமான கல்வாரி அன்பும் இல்லாததுதான். இயேசு சொன்னார்: “கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலமாத்திரம் விசுவாசித்து, சோதனை காலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள்” (லூக். 8:13).

இன்னும் சிலர் மண்ணாசை, பொன்னாசை, புகழாசை காரணமாக தெய்வீக அன்பை விட்டுவிட்டு உலகத்திற்கடுத்த வழிகளில் சென்று விடுகிறார்கள். கிறிஸ்துவண்டை வந்து அருமையாய் சாட்சி சொன்ன ஒரு சகோதரன் குடும்பத்தின் சொத்துக்கு ஆசைப்பட்டு பழையபடியே பழைய மார்க்கத்திற்குள் சென்றபோது, அவர் சொன்னார்: “நான் தற்காலிகமாகத்தான் இயேசுவை விட்டு பின்வாங்கியிருக்கிறேன். நான்கு வருடங்கள் கழித்து நான் மீண்டும் கிறிஸ்துவுக்குள் வந்து விடுவேன்”. இது எத்தனை ஆபத்தானது! நான்கு வருட இறுதிக்குள்ளாக அவருடைய மரணம் இருக்குமென்றால் அவர் பாதாளத்திற்குள் அல்லவா இறங்குவார்? அக்கினி ஜுவாலை அல்லவா அவருடைய முடிவு?

 வேதம் சொல்லுகிறது: “வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார். விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப் போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்” (எபி. 10:37,38). பின்வாங்கிப் போவானானால் அவன் கர்த்தருடைய சமுகத்தை இழக்கிறான், ஆதி அன்பை இழக்கிறான். கர்த்தரும் அவன்மேல் பிரியமாய் இருப்பதில்லை.

தேவபிள்ளைகளே, கிறிஸ்துவை விட்டு பின்வாங்கினால் வேறு யாரிடத்தில் போக முடியும்? சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒவ்வொரு நாளும் ஜெபத்திலும் வேத வாசிப்பிலுமிருந்து கர்த்தருடைய அன்பிலே கட்டப்பட்டு எழுப்பப்படுங்கள்.

நினைவிற்கு:- “…அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப் போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம்” (எபி. 4:1).

Article by elimadmin

Leave a comment