Oct-13 – உபவாசத்தின் இனிமை!

“நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது” (தானி. 10:12).

தானியேலுக்கு உபவாசம் ஒரு மகிழ்ச்சியாயிருந்தது. உபவாச நாட்கள் என்பவை, தேவனை மகிழ்ச்சியோடு கிட்டிச்சேருகிற நாட்களாகவும், பிதாவின் மறைபொருட்களை அறிந்துகொள்கிற நாட்களாகவும் இருந்தன. உபவாசத்திலே அவர் தன் சரீரத்தை சிறுமைப்படுத்தினாலும்கூட அவருடைய ஆவி தேவாதி தேவனைக் கண்டு களிகூர்ந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, இமயமலையிலுள்ள ஒரு கிராமத்தின் அருகில் ஒரு புலி மனிதர்களை வேட்டையாடுவதாக அரசாங்கத்திற்கு தகவல் வந்தது. அது மனுஷர்களை மாத்திரமே கொன்று தின்றதற்கான காரணத்தை அரசாங்கம் ஆராய்ந்தபோது, முடிவாக ஒன்றை கண்டுபிடித்தனர். அது என்ன தெரியுமா? அந்த ஊர் ஜனங்கள் ஒரு பிணத்தை எரித்தும் எரியாமலும் மயானத்திலே விட்டுவிட்டு வந்தபடியினால், அதை அந்த வழியாக வந்த புலி தின்ன நேர்ந்தது. மற்ற எல்லா மிருகங்களின் மாம்சத்தைப் பார்க்கிலும், மனிதனுடைய மாம்சத்தின் ருசி அதிகமாக இருந்ததினாலே, அதுமுதல் மனித ருசியை விரும்பி அது மனிதர்களை கொன்று உண்ணும் பழக்கத்திற்குள் வந்துவிட்டது.

எந்தக் காரியத்திலானாலும் சரி, ஒருவன் ருசியைக் கண்டுவிட்டால் அவன் அதையே பின்பற்றிச் செல்ல விருப்பப்படுவான். அப்படியே உபவாசத்தின் ருசியை அனுபவிக்கிற தேவனுடைய பிள்ளைகளுக்கு கர்த்தருடைய பிரசன்னம் மிக இனிமையானது. அந்த ஆனந்தத்தை விரும்பி மீண்டும் மீண்டும் கர்த்தருடைய சமுகத்திலே உபவாசிக்க ஓடி வருவார்கள். உபவாசத்தின் ருசி அத்தனை மதுரமானது. உபவாசிக்க, உபவாசிக்க உள்ளம் ஆனந்த பரவசமடைந்து வாரத்தில் ஒரு நாள், மாதத்தில் மூன்று நாட்கள் என்று உபவாசிக்கும்படி ஆரம்பித்து விடுவார்கள். அநேக மக்களுக்கு உபவாசத்தின் இனிமை புரியாததாக இருக்கிறதைக் கண்டு மிகுந்த வேதனையடைகிறேன். ஒரு வேளை போஜனத்தைக்கூட கர்த்தருக்காக விட்டுவிட அவர்களுக்கு பிரியமில்லை.

ஆனால் சரித்திரத்தைப் பாருங்கள். கர்த்தரால் வல்லமையாய் உபயோகிக்கப்பட்ட ஒவ்வொரு தேவனுடைய ஊழியக்காரரும் உபவாசித்து ஜெபிக்கிறதின் இனிமையையும் மகிமையையும் அறிந்திருந்தார்கள். ஐரோப்பாவில் பெரிய மார்க்க சீர்திருத்தங்களை கொண்டுவந்த மார்ட்டின் லூத்தர் பல நாட்களாய் இரவும் பகலும் உபவாசித்துக்கொண்டே இருந்தார். அவர் உடல்நிலை சீர்குலைந்து மறுபடியும் தன்னுடைய ஆரோக்கியத்தை அடைவது சந்தேகம் என்ற நிலையை அடைந்தும்கூட உபவாசத்தை அவர் விட்டுவிடவில்லை.

பதினான்காம் நூற்றாண்டில் இத்தாலி தேசத்தில் செவனரோலா என்ற பக்தன் பெரிய எழுப்புதலை உண்டாக்கினார். அவருடைய பிரசங்கங்களெல்லாம் அக்கினிப்பொறியைப் போன்று ஜனங்களைத் தாக்கின. அவருடைய ஊழியத்தின் வெற்றிக்குக் காரணம் அவருடைய உபவாச ஜெபம்தான். உபவாசமில்லாமல் அவர் பிரசங்க பீடத்திற்கு ஏறினதேயில்லை என்று சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

தேவபிள்ளைகளே, இந்தத் தலைமுறையினரை கர்த்தரிடத்தில் கொண்டு வருவதற்கு உங்களுடைய உபவாச ஜெபத்தைக் கர்த்தர் எதிர்பார்க்கிறார்.

 நினைவிற்கு:- “இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்” (மத். 17:21).

Article by elimadmin

Leave a comment