AppamAppam - Tamil

ஜூலை 9 – எசேக்கியாவின் உண்மை!

“ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான்” (2 இராஜா. 20:3).

இன்றைய தியானத்திலே எசேக்கியா ராஜாவின் உண்மையைக் குறித்து நாம் தியானிக்கப் போகிறோம். எசேக்கியா, யூதாவை அரசாண்ட பதிமூன்றாவது ராஜா. இவர் தம்முடைய இருபத்தி ஐந்தாவது வயதில் ராஜாவானார். இவர் யூதாவின் மூன்று உண்மையும் உத்தமுமான ராஜாக்களில் ஒருவராய் விளங்கினார். எசேக்கியா என்ற பெயருக்கு “யெகோவாவே என் பெலன்” என்பது அர்த்தமாகும்!

எசேக்கியாவின் உண்மை என்ன? அவர் விக்கிரக ஆராதனையை அடியோடு தகர்த்து, விக்கிரகங்களுக்கு பலி செலுத்தும் மேடைகளை அகற்றினார். அன்றிருந்த இஸ்ரவேல் ஜனங்கள் மோசே உண்டு பண்ணி வைத்திருந்த வெண்கல சர்ப்பத்தைத் தொழுது கொண்டதினாலே அதை உடைத்தார். தேவ ஆராதனையை ஒழுங்குப்படுத்தி ஜனங்கள் ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க வழி செய்தார்.

மட்டுமல்ல, சிதறிப் போயிருந்த சகல இஸ்ரவேல் ஜனங்களையும் ஒன்று கூட்டி விசேஷித்த பஸ்கா பண்டிகையை பதினான்கு நாட்கள் நடத்தினார். இவர் எவ்வளவு உண்மையுள்ளவராய்க் கர்த்தரை நேசித்தார் என்பதை 2 நாளாகமம் 30-ம் அதிகாரத்தில் வாசிக்கலாம்.

வேதம் சொல்லுகிறது, “இந்தப்பிரகாரமாக எசேக்கியா யூதாவெங்கும் நடப்பித்து, தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நன்மையும் செம்மையும் உண்மையுமானதைச் செய்தார்” (2 நாளா. 31:20). ஆனாலும் எசேக்கியாவின் வாழ்க்கையில் ஒரு போராட்டம் வந்தது. கொடிய வியாதி அவரைத் தாக்கிற்று. அவர் வியாதிப்பட்டு மரணத்திற்கேதுவாயிருந்தார். அவரைப் பார்க்க வந்த ஏசாயா தீர்க்கதரிசி, “நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும், நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர்” (2 இராஜா. 20:1) என்று சொல்லி விட்டார்.

அதைக்கேட்ட எசேக்கியா ராஜாவின் மனம் உடைந்தது. “ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதார்” (ஏசாயா. 38:3).

எசேக்கியா ராஜாவின் உண்மை கர்த்தருடைய இருதயத்தை தொட்டது. எசேக்கியா உண்மையும், உத்தமமுமாய் நடந்து வந்த ஒவ்வொரு பாதையையும் கர்த்தர் நினைவு கூர்ந்தார், “உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்” (ஏசா. 38:5) என்று சொல்லி ஆயுசு நாட்களை நீடித்துக் கொடுத்தார்.

தேவபிள்ளைகளே, கர்த்தருக்கு முன்பாக உண்மையும், உத்தமுமாய் இருக்கும்போது கர்த்தர் உங்களுடைய ஜெபத்தைக் கேட்கிறார். உங்களுடைய கண்ணீரைத் துடைக்கிறார். உங்களுடைய ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணுகிறார். வேதம் சொல்லுகிறது, “அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவு கூர்ந்தார்; பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய இரட்சிப்பைக் கண்டது” (சங். 98:3).

நினைவிற்கு:- “என் கிருபையை அவனைவிட்டு விலக்காமலும், என் உண்மையில் பிசகாமலும் இருப்பேன்” (சங். 89:33).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.