AppamAppam - Tamil

ஜூன் 30 – ஆசீர்வதிக்கப்பட்டவன்!

“நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீ பெரிய காரியங்களைச் செய்வாய்; மேன்மேலும் பலப்படுவாய்” (1 சாமு. 26:25).

வேதத்திலுள்ள இந்த அருமையான வசனத்திலே, அடுக்கடுக்கான வாக்குத்தத்தங்கள் இணைந்திருக்கின்றன. “நீ ஆசீர்வதிக்கப்பட்டவன், பெரிய காரியங்களைச் செய்வாய், மேன்மேலும் பலப்படுவாய்” என்று வேதம் சொல்லுவது எத்தனை மகிழ்ச்சியானவை!

இந்த ஆசீர்வாதத்தின் காரணம் என்ன என்பதையும், அடிப்படை முகாந்தரம் என்ன என்பதையும், நீங்கள் சிந்தித்துப் பார்ப்பீர்களானால், இந்த ஆசீர்வாதங்களை நீங்களும் சுதந்தரித்துக் கொள்ளலாம்.  தாவீதைத் துரத்தி வேட்டையாடும்படி ராஜாவாகிய சவுல் தீவிரமாய் இருந்தான். அப்படி ஒரு காட்டுக்கு வந்தபோது, சவுல் களைப்படைந்து இரதத்தின் அருகே நித்திரைப் பண்ணினான். தாவீதும், அவரது படைத்தலைவனாய் இருந்த அபிசாயும் அதைப் பார்த்தார்கள்.

அபிசாய் தாவீதைப் பார்த்து, ‘தேவன் உம்முடைய சத்துருவை உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார். ஒரே குத்தாக சவுலை உருவ குத்திவிடுகிறேன்’ என்று சொன்னபோது, தாவீது என்ன சொன்னார் தெரியுமா? “அவரைக் கொல்லாதே; கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமற் போகிறவன் யார்?” (1 சாமு. 26:9) என்று சொல்லி சவுலின் ஈட்டியையும், தண்ணீர் செம்பையும் எடுத்துக் கொண்டு போனார்கள். அதை ஒருவரும் காணவில்லை. அறியவுமில்லை, ஒருவரும் விழித்துக் கொள்ளவுமில்லை.

கர்த்தர் தன்னை தாவீதின் கையில் ஒப்புக் கொடுத்தும், தாவீது தன்னைக் கொல்லாமல் தப்புவித்த இந்தச் செயல் சவுலின் உள்ளத்தை உடைத்தது. ஆகவே சவுல் தாவீதை நோக்கி “நான் பாவம் செய்தேன்; என் குமாரனாகிய தாவீதே, திரும்பிவா; என் ஜீவன் இன்றைய தினம் உன் பார்வைக்கு அருமையாயிருந்தபடியால், இனி உனக்கு ஒரு பொல்லாப்பும் செய்யேன்; இதோ நான் மதியற்றவனாய் மகா பெரிய தப்பிதஞ் செய்தேன்” (1 சாமு. 26:21) என்றான்.

மட்டுமல்ல, சவுல் மனம் நெகிழ்ந்து தாவீதை “என் குமாரனாகிய தாவீதே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீ பெரிய காரியங்களைச் செய்வாய்; மேன்மேலும் பலப்படுவாய்” என்று சொல்லி ஆசீர்வதித்தார். தேவபிள்ளைகளே, கர்த்தர் இதே வார்த்தைகளைச் சொல்லி உங்களை ஆசீர்வதிக்க வேண்டுமானால், நீங்கள் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள்மேல் கைகளைப் போடாதிருங்கள். அவருக்கு விரோதமாய் பேசவோ, எழுதவோ செய்யாதிருங்கள். ஏனென்றால், அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் கர்த்தருக்கு விசேஷமானவர்கள்.

தேவபிள்ளைகளே, பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணத்தையும், பலவானிடத் திலிருந்து உத்தரவாதத்தையும் கொண்டு வருகிறவர், நம்முடைய ஆண்டவர். தீமைச் செய்கிற கைகளைக்கூட உங்களுக்கு உதவி செய்கிற கரமாய் மாற்றுவார். நீங்கள் இந்த உலகத்தின் வழியாக ஒரே ஒரு முறை கடந்து செல்லுகிறீர்கள். யாரிடமும் எந்த விரோதத்தையும் சம்பாதித்துக் கொள்ளாதிருங்கள். நீங்கள் எதிர்த்து நிற்கக்கூடிய ஒரே சத்துரு சாத்தான் மட்டுமே. உங்களுடைய யுத்தம் அவனோடுகூட மட்டுமே இருக்கட்டும்.

நினைவிற்கு:- “ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்” (நீதி. 16:7).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.