AppamAppam - Tamil

ஜூன் 27 – அறியாய், அறிவாய்!

“நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார்” (யோவான் 13:7).

கர்த்தர் செய்கிற காரியங்களை நீங்கள் அறிய வேண்டுமென்றால், உங்களுக்கு ஆவிக்குரிய கண்கள் தேவை. அவருடைய சத்தத்திற்கு திறந்திருக்கிற செவிகள் தேவை.

ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு சபையின் மூப்பர் திடீரென்று மரித்துப்போனார். அவர் மிகுந்த பக்தியுள்ளவர். ஆண்டவரை நேசிக்கிறவர். எதிர்பாராதவிதமாக இருதய நோய் அவரைத் தாக்கியது. அவருடைய மனைவி பிள்ளைகள் எல்லோரும் அழுது புலம்பினார்கள். ஏன் ஆண்டவர் எங்களுக்கு இப்படி செய்தார், ஏன் எங்கள் தகப்பனாரை எடுத்துக் கொண்டார், என்றெல்லாம் ஆறுதலற்று அங்கலாய்த்தார்கள்.

சில நாட்கள் சென்றன. உறவினர்களோடு சேர்ந்து மனைவியும், பிள்ளைகளும் அழுது கொண்டிருந்தபோது, திடீரென்று அந்த அறையில் மகிமையின் பிரகாசம் வீசியது. மரித்த அந்த சகோதரன், எண்ணற்ற தேவதூதர்களோடுகூட வந்தார். அதே தோற்றம். அதே கனிவான பார்வை. வந்ததும் மனைவி, பிள்ளைகளைப் பார்த்து புன்சிரிப்போடு ‘ஏன் அழுகிறீர்கள்? கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள். அவரை ஸ்தோத்தரியுங்கள். கர்த்தர் நல்லவர் அவருடைய கிருபை என்றும் உள்ளது’ என்று சொன்னார். பின்பு, தேவதூதர்கள் புறப்பட்டபோது, அவரும் அவர்களோடு சென்று விட்டார். அந்த சம்பவம் அவர்களுடைய வாழ்க்கையையே மாற்றியது. மிகுந்த ஆறுதல் அடைந்தார்கள். கர்த்தரைத் துதித்து மகிமைப்படுத்த ஆரம்பித்தார்கள்.

அப். பவுல் எழுதுகிறார், “அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்துப் பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே. அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டு வருவார் (1 தெச. 4:13,14). மரணம் ஒரு முடிவல்ல. அது ஒரு இளைப்பாறுதல். நம் தேவன் உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார். அவரை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் (யோவான் 11:25).

நீங்கள் மரணத்திற்கு பிறகு உள்ள நிலைமையைக்குறித்து, வேதத்திலுள்ள உபதேசங்களையும், கர்த்தருடைய வாக்குத்தத்தங்களையும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். இயேசு கிறிஸ்துவை மரணமோ, பாதாளமோ, கல்லறையோ அடக்கி வைக்க முடியவில்லை. யூத போர் சேவகர்களாலும், ரோம போர் சேவகர்களாலும் கல்லறையை முத்திரையிட்டு பாதுகாக்க முடியவில்லை. இயேசுகிறிஸ்து உயிரோடு எழுந்தார். ஆகவே உங்களுக்கும் உயிர்த்தெழுதலின் நம்பிக்கை உண்டு.

தேவபிள்ளைகளே, எதிர்பாராத ஆபத்துக்கள் நேரிடலாம், விபத்துக்கள் வரலாம். மரணங்கள் நேரிடலாம். ஏன் கர்த்தர் இப்படி செய்கிறார் என்று உங்களுடைய உள்ளம் அங்கலாய்க்கும்போது, கர்த்தருடைய பதில் என்ன? ‘நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய்’ என்பதே அவரது பதில்.

நினைவிற்கு:- “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோமர் 8:28).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.