AppamAppam - Tamil

Jan 27 – சுகம் அளிக்கும் மனதுருக்கம்!

“இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார்” (மத். 14:14).

இயேசுகிறிஸ்து சுகமளித்த பல சம்பவங்களை சுவிசேஷ புஸ்தகங்களிலே வாசிக்கலாம். அவருடைய சுகமளிக்கிற வல்லமை வெளிப்படுவதற்கு முன்பாக அவருடைய மனதுருக்கம் செயல்பட்டதைக் காணலாம்.

வேதம் சொல்லுகிறது, “இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேல் மனதுருகினார்” (மத். 14:14). “இயேசு கரையில் வந்து, அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலிருந்தபடியால், அவர்கள் மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்” (மாற்கு 6:34).

இயேசுவினுடைய உள்ளம் இளகிய உள்ளம். மனமிரங்கும் உள்ளம். இரக்கத்திலே ஐசுவரியமுள்ள உள்ளம். உண்மையான அன்பு இருக்கிறபடியினால்தான் அவரால் மனதுருக முடிகிறது. இயேசு, லாசருவின் கல்லறையண்டை வந்து நின்றபோது, அநேகர் அழுகிறதைக் கண்டார். அதை பார்த்துக்கொண்டு அவர் நின்றுவிடவில்லை. அவரும் மனதுருகி அழுதார். “இயேசு கண்ணீர் விட்டார்” (யோவான் 11:35) என்று வேதம் சொல்லுகிறது. அவர் உங்களை உண்மையாய் நேசிக்கிறதினாலே உங்களுக்காக கண்ணீர் சிந்துகிறார்.

மட்டுமல்ல, உங்களுடைய துயரத்தை அவர் உணர்ந்து கொள்ளுகிறவராகவும் இருக்கிறார். லாசருவின் கல்லறையில் நின்று கண்ணீர் சிந்தினவர் அப்படியே போய்விடவில்லை. “லாசருவே வெளியே வா” என்று சொல்லி மனதுருகி அவனை உயிர்ப்பித்துக் கொடுத்தார். அவருடைய மனதுருக்கமே அற்புதங்களைச் செய்கிறது.

இயேசு கிறிஸ்து ஒரு முறை கலிலேயா நாடெங்கும் சென்று பிரசங்கம் பண்ணி பிசாசுகளை துரத்தியபோது, ஒரு குஷ்டரோகி அவருக்கு முன்பாக வந்து, முழங்கால்படியிட்டு, “உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும்” என்று வேண்டிக்கொண்டான். வேதம் சொல்லுகிறது, “இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான்” (மாற்கு 1:41,42).

 மனதுருக்கம் இல்லாதவர்களால் குஷ்டரோகியைத் தொடவே முடியாது. ஜனங்கள் குஷ்டரோகத்தை கண்டு பயப்படுவதுண்டு. தொட்டால் வியாதி தொற்றிவிடுமே என்று பயப்படுவார்கள். குஷ்டரோகியைத் தொட்டுவிட்டால் அவர்கள் தீட்டாக கருதப்படுவார்கள். ஒரு நாள் முழுவதும் அவர்கள் அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும்.

குஷ்டரோகம் ஒரு அருவருப்பான வியாதி. சமுதாயத்தினால் புறக்கணித்து தள்ளப்படும் வியாதி. ஆனால் இயேசுவோ, அதை பொருட்படுத்தவில்லை. மனதுருக்கத்துடன் இரங்கினார். தேவபிள்ளைகளே, அந்த மனதுருக்கமுடைய இயேசு உங்கள்மேல் மனமிரங்காமல் இருப்பாரோ?

நினைவிற்கு:- “யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்” (யாக். 1:5).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.