AppamAppam - Tamil

Dec 12 – விசுவாசத்தினாலே ஏனோக்கு!

“விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்” (எபி. 11:5).

  விசுவாச வீரர்களின் பட்டியலிலே இடம் பெற்றவர்களில் ஏனோக்கும் ஒருவர். விசுவாசத்தினாலே மரணத்தைக் காணாதபடிக்கு பரலோகம் சென்றுவிட்ட பரிசுத்தவான்தான் ஏனோக்கு. ஏனோக்கின் விசுவாசம் கிறிஸ்துவோடு நடக்கும்படி உங்களை ஊக்கப்படுத்துகிறது.

ஒரு நாள் ஏனோக்கு கர்த்தர்தான் தன் விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமானவர் என்ற நிச்சயத்தோடு, கர்த்தருடைய பலமுள்ள கரத்தை பிடித்துக்கொண்டு அவரோடு சஞ்சரிக்க ஆரம்பித்தார். ‘இந்த தேவன் என்றென்றுமுள்ள சதாகாலமும் எனது தேவன். மரணத்தைக் காணாதபடி என்னை நடத்துவார்’ என்கிற விசுவாசம் அவருக்கு இருந்தது. “ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு” (சங். 68:20) என்று வேதம் சொல்லுகிறது.

இந்திய தேசம் யோகிகளுக்கும், சித்தர்களுக்கும், முனிவர்களுக்கும் பெயர்பெற்ற தேசம். இன்று அநேக யோகிகள் தங்கள் சரீரத்திலிருந்து விடுபட்டு சில நாட்கள் கழித்து மீண்டும் தங்கள் சரீரத்திற்குள் பிரவேசிப்பதாக சவால் விடுகிறார்கள். அப்படியே சிலர் சரீரத்திலிருந்து ஜீவனையும் பிரித்தார்கள். ஆனால் மறுபடியும் அந்த ஜீவன் சரீரத்திற்குள் திரும்பி வரவேயில்லை. பல நாட்கள், பல மாதக் கணக்கிலே அந்த யோகிகளின் சீடர்கள் சரீரத்தை வைத்து காத்திருந்து பார்த்தார்கள். ஜீவனோ மறுபடியும் திரும்பவில்லை.

இன்று அநேகருடைய விசுவாசம் மரணத்தில்தான் இருக்கிறது. தான் எங்கே அடக்கம் பண்ணப்பட வேண்டும், கல்லறை எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் முதலிலே தீர்மானிக்கிறார்கள். அதைக் குறித்து பிள்ளைகளுக்கும், உறவினர்களுக்கும் கட்டளையிடுகிறார்கள். ஆனால் ஏனோக்கின் விசுவாசத்தைப் பாருங்கள். நான் மரணத்தைக் காண்பதில்லை என்பதே அவருடைய விசுவாசம். இரண்டாவது வருகையில் ஒரு கூட்டத்தினர் மரணத்தைக் காணாதபடி மறுரூபமாகி எடுத்துக்கொள்ளப்படும்போது கர்த்தர் ஏன் என்னை எடுத்துக்கொள்ளமாட்டார் என்கிற விசுவாசம். அந்த விசுவாசத்தினாலே அவர் இரண்டாவது வருகையில் மரணத்தை ஜெயமாக விழுங்கும் பரிசுத்தவான்களுக்கு முன்னோடியானார்.

ஆதியாகமம் 5-ம் அதிகாரத்தை ‘முற்பிதாக்களின் கல்லறைக்கூடம்’ என்று சொல்லலாம். மரித்தான் என்ற வார்த்தை திரும்பத் திரும்ப அங்குதான் வந்து கொண்டிருக்கிறது. ஆதாம் உயிரோடிருந்த நாட்கள் 930 வருஷம். அவன் மரித்தான். சேத்தின் நாட்கள் 912 வருஷம். அவன் மரித்தான். இப்படியாக பலரைக் குறித்து ‘மரித்தான்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், அங்கே ஏனோக்கின் மரணத்தைக் குறித்தோ, கல்லறையைக் குறித்தோ ஒரு வார்த்தையையும் காணோம். ஏனென்றால் விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணவில்லை. தேவன் அவரை அப்படியே எடுத்துக்கொண்டார்.

தேவபிள்ளைகளே, ஏனோக்கின் விசுவாசம் உங்களுக்கும் இருந்தால் அது எத்தனை ஆசீர்வாதமாய் இருக்கும்! மரணத்தைக் காண்பதில்லை என்ற விசுவாசத்துடனே வாழத் தீர்மானம் செய்யுங்கள். உங்களுடைய கண்களே அவரைக்காணும்.

நினைவிற்கு:- ‘மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்” (நீதி. 18:21).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.