AppamAppam - Tamil

Nov 29 – தரிசனத்திற்கு வல்லமையுண்டு!

“அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்; புசியும், பானம்பண்ணும் என்று அவன் உன்னோடே சொன்னாலும், அவன் இருதயம் உன்னோடே இராது”(நீதி.23.7).

தரிசனத்துக்கு ஒரு வல்லமையுண்டு. நீங்கள் ஒரு காரியத்தை செய்ய ஜெபத்துடன் தீர்மானிக்கும்போது, கர்த்தர் நிச்சயமாகவே அதை நிறைவேற்றுவார். உங்களுடைய சிந்தனைகள் பொல்லாதவைகளாயிருக்குமென்றால், உங்களுடைய செயல்பாடுகளும் பொல்லாதவைகளாய் மாறிவிடும்.

உங்களுடைய சிந்தனைகள் நன்மையானதையே சிந்தித்துக்கொண்டிருக்குமானால், உங்களுடைய வாழ்க்கையிலே நீங்கள் நன்மையான காரியங்களைச் செய்வீர்கள். ஆகவேதான் இயேசு சொன்னார், ‘ஒரு மனிதனுடைய இருதயத்தின் நினைவு எப்படியோ அப்படியே அவன் இருக்கிறான்.’

நோவாவின் காலத்திலே இருந்த ஜனங்கள் மிகவும் பொல்லாதவர்களா யிருந்தார்கள். அவர்கள் அக்கிரமம் பூமியிலே பெருகினது. “அவர் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும் கர்த்தர் கண்டார்” (ஆதி. 6:5). இதன் விளைவாக, “பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது” (ஆதி. 6:11) என்று வேதத்தில் வாசிக்கிறோம். அவர்களுடைய இருதயத்தின் நினைவுகள் எப்படியிருந்ததோ, அதற்கேற்றவாறே அவர்களுடைய முடிவும் அமைந்தது.

நோவாவின் ஜலப்பிரளயத்துக்குப் பிறகு மீண்டுமாய் பூமியிலே ஜனங்கள் பெருகினார்கள். பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சும் இருந்தது. அவர்கள் ‘நாம் பூமியெங்கும் சிதறிப் போகாதபடிக்கு நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி நமக்கு பேர் உண்டாக்குவோம் வாருங்கள்’ என்றார்கள்.

ஜனங்கள் தங்கள் விருப்பம்போல வாழுவதற்கு தடையாயிருந்த காரியம். கர்த்தருடைய நியாயத்தீர்ப்புதான். ஆகவே அவர்கள் கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு வந்தால், அந்த கோபுரத்தில் ஏறி தப்பிவிடலாம் என்று எண்ணி, அந்த கோபுரத்தை கட்ட எண்ணினார்கள். அப்போது மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும், கோபுரத்தையும் பார்ப்பதற்கு கர்த்தர் இறங்கி வந்தார்.

“இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்ய தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபட மாட்டாது என்று இருக்கிறார்கள்” (ஆதி. 11.6) என்று கர்த்தர் சொன்னார்.

இந்த ஜனங்களுக்கு ஒரே பாஷையிருந்தது. ஒரே தரிசனமிருந்தது. ஆகவே யாரும் அவர்களை தடை செய்ய முடியாது. தாங்கள் ஒரு காரியத்தை குறித்து ஒருமனப்பட்டு சிந்தித்தால் கண்டிப்பாக நிறைவேற்றிவிடலாம் என்ற தரிசனம் அவர்களுக்கு இருந்தது. கிறிஸ்தவர்களல்லாத இந்த மக்களுக்கே ஒரு காரியத்தைச் செய்யும்போது இத்தகைய ஒருமைப்பாடும், தரிசனமும் இருந்தது என்றால் ஆண்டவரின் பிள்ளைகளாகிய உங்களுக்கு ஒருமைப்பாடும், தரிசனமும் எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதைப்பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.

தேவபிள்ளைகளே, உங்களுடைய தரிசனங்களுக்கும், கற்பனைகளுக்கும் வல்லமையுண்டு.

நினைவிற்கு:- “என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன்” (யாத். 9:16).  

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.