ஜூன் 3 – அன்பு கூருகிறவர்களுக்கு!

“தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோம. 8:28).

கர்த்தரிடத்தில் அன்பு கூருகிறவர்கள் எப்பொழுதும் கர்த்தரில் மகிழ்ச்சியாய் இருப்பார்கள். எப்பொழுதும் கர்த்தரைத் துதிப்பார்கள். மாத்திரமல்ல, கர்த்தரில் அன்பு கூருகிறவர்களுக்கு அவர் சகலத்தையும் நன்மைக்கேதுவாகவே செய்து முடிப்பார் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். சங்கீதக்காரன் சொல்லுகிறான், “கர்த்தரிடத்தில் மன மகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார்” (சங். 37:4).

பழங்காலத்து சீனக்கதை ஒன்று உண்டு. ஒரு பக்தியுள்ள கிறிஸ்தவன் ஒரு அருமையான குதிரையை வளர்த்து வந்தான். அது மிகவும் விலை மதிப்புள்ள ஒரு குதிரை. ஆனால் ஒரு நாள் அந்தக் குதிரை வீட்டைவிட்டு ஓடிப்போயிற்று. அவனுடைய மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், எல்லோரும் அதைக் குறித்து மிகவும் கவலையுற்றனர்.

ஆனால் அந்த பக்திமானோ, அதைக் குறித்து சிறிதும் கவலைப்படாமல், கர்த்தர் எல்லாவற்றையும் நன்மைக்காகவே செய்தருளுவார் என்று சொல்லி தன்னைத் தேற்றிக் கொண்டார். என்ன ஆச்சரியம்! ஒரு வாரத்திற்குப் பிறகு அந்தக் குதிரை பல காட்டுக் குதிரைகளுடன் சேர்ந்து திரும்பி வந்தது. அந்த பக்தன் அந்தக் காட்டுக் குதிரைகளையெல்லாம் கூட தனக்காக சேர்த்துக் கொண்டான். அவனுடைய சந்தோஷம் பல மடங்கு அதிகமானது.

அதைத் தொடர்ந்து, ஒரு சில நாட்களுக்குள் அந்தக் குதிரை எஜமானுடைய வாலிப மகனை மிதித்து, அவனுடைய காலை ஒடித்துவிட்டது. “ஐயோ, பக்திமானே, ஏன் உனக்கு இந்த துயரம்? ஏன் இந்த கஷ்டம்” என்று அக்கம்  பக்கத்திலுள்ளவர்கள் துக்கம் விசாரிக்க வந்தார்கள். ஆனால் அந்த பக்திமானோ, கர்த்தரில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது என்று சொல்லி, தன்னைத் தேற்றிக் கொண்டான்.

ஒரு சில நாட்களுக்குள் தேசத்தில் ஒரு பெரிய யுத்தம் வந்தது. வாலிபர்கள் கட்டாயமாய் யுத்தத்திற்கு செல்ல வேண்டியதிருந்தது. பெரும்பாலான வாலிபர்கள் யுத்தத்தில் மரித்தார்கள். ஆனால், இந்த பக்திமானுடைய மகனுக்கோ, கால் ஒடிந்த காரணத்தால் யுத்தத்திற்கு உடல் தகுதி பெற முடியாமல் வீட்டிலேயே இருக்க நேர்ந்தது. அதனால் அவன் ஜீவன் தப்பிற்று.

உங்களுடைய வாழ்க்கையிலும் பல வேளைகளில் துயரங்கள் சூழ்ந்து கொள்ளும்போது, அதன் காரணத்தை அறிய முடியாதவர்களாய் “ஏன்? ஏன்? ஏன்?” என்று பல கேள்விகளை எழுப்பக்கூடும். ஆனால் கர்த்தர் சகலவற்றையும் நன்மைக்கேதுவாகவே செய்வார் என்பதை நித்தியத்திற்குள் பிரவேசிக்கும் போது அறிந்துகொண்டு, அவருடைய அனந்த ஞானம், கிருபை, வல்லமை ஆகியவற்றுக்காக அவரைத் துதிப்பீர்கள்.

தேவபிள்ளைகளே, அவர் எல்லாவற்றையும் உங்கள் நன்மைக்காகவே செய்கிறார் என்பதை மறந்து போகாதீர்கள்.

நினைவிற்கு:- “காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது” (2 கொரி. 4:17).

Article by elimchurchgospel

Leave a comment