ஏப்ரல் 01 – சிலுவைக்குமுன் கெத்செமனே!

“அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக். 22:44).

வேதத்திலே, அநேக பரிசுத்தவான்கள் தங்களுக்கென்று ஒரு ஜெப ஸ்தலத்தை வைத்திருந்தார்கள். தானியேல் எப்போதும் மேல்வீட்டு அறைக்குச் சென்று, அங்கே தன்னுடைய பலகணிகளைத் திறந்து, எருசலேமுக்கு நேராய் ஜெபிப்பது வழக்கம். யாபேசுக்கு மிஸ்பா ஒரு ஜெபஸ்தலமாயிருந்தது. அன்னாளுக்கு தேவாலயத்தின் பலிபீடம் ஒரு ஜெபஸ்தலமாயிருந்தது. இயேசுகிறிஸ்துவுக்கோ, கெத்செமனே தோட்டம் ஒரு ஜெப ஸ்தலமாயிருந்தது.

ஏன் கர்த்தர் கெத்செமனேயை தன்னுடைய ஜெபஸ்தலமாக தெரிந்து கொண்டார்? ஏனென்றால், கெத்செமனே என்ற வார்த்தைக்கு “எண்ணெய் செக்கு” என்பது அர்த்தம். இந்த எண்ணெ செக்கிலே ஒலிவ விதைகள் நொறுங்குண்டு, நருங்குண்டு பிழிவதைப் பார்க்கும்போதெல்லாம், தானும் உள்ளம் உடைந்து ஜெபிக்க வேண்டுமென்கிற உணர்வு அவருக்குள் வந்தது. நொறுங்குண்ட, நருங்குண்ட இருதயத்தை பிதாவாகிய தேவன் ஒருபோதும் புறக்கணிப்பதில்லை அல்லவா? (சங். 51:17).

கெத்செமனே தோட்டத்தை இயேசு தம்முடைய ஜெபஸ்தலமாக தெரிந்து கொண்டதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அது அங்கேயிருந்த ஏராளமான ஒலிவ மரங்கள்தான். ஒலிவ மரங்கள் குளிர்ச்சியைக் கொடுக்கின்றன. மட்டுமல்ல, ஒலிவ எண்ணெய் ஆவியானவருக்கு அடையாளமாக இருந்தது. இஸ்ரவேல் ஜனங்களின் ஆவிக்குரிய வாழ்க்கையை வேதம் ஒலிவ மரத்திற்கு ஒப்பிட்டு கூறுவதைக் காணலாம். ஒலிவ மரத்தின் அடியிலிருந்து இயேசு ஜெபிக்கும் போதெல்லாம், ஆவியானவரோடு இணைந்து ஜெபிக்கிறதை உணர்ந்தார்.

அடுத்ததாக, கெத்செமனே தோட்டத்திலிருந்து அவர் ஜெபிப்பதற்கு இன்னொரு காரணமுமுண்டு. அந்த தோட்டம் ஒலிவ மலையின் உச்சியிலிருக்கிறது. அங்கேயிருந்து கீழே பார்க்கும்போது, எருசலேமின் முழு தோற்றத்தையும் காண முடியும். அங்கிருந்து எண்ணற்ற தேவ ஜனங்களைப் பார்த்து கண்ணீர் விட்டு ஜெபிக்க முடியும்.

இயேசுகிறிஸ்துவை மனிதன் சிலுவையில் அறைந்து, இரத்தம் சிந்த வைப்பதற்கு முன்பாக அவர் தாமாகவே இரத்தம் சிந்திய இடமே கெத்செமனே தோட்டமாகும். அவர் ஜெபிக்கும்போது, அவருடைய இரத்த நாளங்கள் வெடித்து வியர்வை இரத்தத்தோடு கலந்து சொட்டு சொட்டா கீழே விழுந்தது. இரத்தத்திற்கு தேவனை நோக்கிக் கூப்பிடக்கூடிய குணாதிசயமுண்டு (ஆதி. 4:10).

தேவபிள்ளைகளே, இயேசுகிறிஸ்து இந்த உலகத்தைவிட்டு சென்றுவிட்ட போதும்கூட அவர் கெத்செமனே தோட்டத்திலே சிந்தின இரத்தம் உங்களுக்காக பரிந்து பேசிக் கொண்டேயிருக்கிறது. ‘பிதாவே இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே. கிருபையின் தருணத்தை இன்னுமாக இவர்களுக்குத் தாரும்’ என்று ஜெபித்துக் கொண்டேயிருக்கிறது.

நினைவிற்கு:- “மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்” (லேவி. 17:11).

Article by elimchurchgospel

Leave a comment