Mar 17 – மிக மகி அதிகமாய்!

“நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே” (எபேசி.3:20).

கர்த்தர் நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கும், நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் உங்களை ஆசீர்வதிக்கிறவர். நீங்கள் நினைக்கிற காரியம் கொஞ்சம்தான். ஜெபத்தில் வேண்டிக்கொள்ளுகிற காரியம் குறைவுதான். ஆனால் தேவன் உங்களை ஆசீர்வதிக்க நினைத்திருப்பதோ மிக மேன்மையும் மகிமையுமாயிருக்கிறது.

ஒரு வல்லமையான தேவனுடைய ஊழியக்காரர் சொன்னார், “நான் சிறுவனாய் இருந்தபோது, நான் ஒரு பிரசங்கியாராக வேண்டும் என்று நினைத்தேன். அந்த சிறு வயதிலே ஊருக்கு வெளியே போய் அங்கே மேய்ந்து கொண்டிருக்கிற ஆடு மாடுகளை பார்த்து பிரசங்கம் செய்வேன். இயேசு உங்களை நேசிக்கிறார். உங்களுடைய இருதயத்தை கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பீர்களா? யார் யார் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுகிறீர்கள்? உங்களுடைய கைகளை உயர்த்துங்கள்” என்று பிரசங்கிப்பேன்.

ஆலயத்தில் ஒருவரும் இல்லாத நேரத்தில் மேடையில் ஏறி காலியாய் இருக்கிற மேஜை நாற்காலிகளுக்கெல்லாம் பிரசங்கிப்பேன். ஒருவரும் இதை கவனிக்காமலிருந்தாலும் என் அருமை ஆண்டவர் இதை கவனித்துக் கொண்டேயிருந்தார். இன்று கர்த்தர் என்னை வல்லமையான ஊழியக்காரனாக்கியிருக்கிறார். அநேக சபைகளைக் கட்டியெழுப்புவதற்கு உதவி செய்து வருகிறார். நான் நினைத்துப் பார்த்திராத அளவு, வேண்டிக்கொண்டிராத அளவு மகிமையாய் என்னை உயர்த்தி வருகிறார்” என்றார். இது எத்தனை உண்மை!

யோசேப்பை அவனுடைய சகோதரர்களெல்லாம் பிடித்து குழியிலே தள்ளினபோது, கர்த்தர் ஒரு நாள் தன்னை மிகமிக உயர்த்தி, எகிப்திலே பெரிய அதிகாரியாய் உயர்த்துவார் என்றும், அதே சகோதரர்கள் தனக்கு முன்பாக தாழ்ந்து பணிவார்கள் என்றும் நினைத்துக்கூட பார்த்திருப்பாரா? ஆனால் கர்த்தர் வேண்டிக் கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் அதிகமாய் ஆசீர்வதிப்பவர் என்பதால் யோசேப்பை அவ்வளவாய் உயர்த்தினார்.

தாவீது ஆடுகளை மேய்த்துக்கொண்டு ‘கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்’ என்று பாடின அந்த வேளையிலும், ஆண்டவர் தன்னை இஸ்ரவேலின் பெரிய ராஜாவாய் மாற்றுவார் என்று நினைத்துக்கூட பார்த்திருப்பாரா? ஆனால் கர்த்தர் தாவீதை எவ்வளவாய் உயர்த்தி ஆசீர்வதித்தார்!

தானியேல் சிறைப்பிடிக்கப்பட்டு கைதியாக பாபிலோன் தேசத்திற்கு சென்ற போது, அங்கே பாபிலோனிலே தான் பிரதான அதிபதியாக உயர்த்தப்படுவோம் என்பதை அவர் நினைத்துக்கூட பார்த்திருப்பாரா? ஆனால் அவ்வளவாய் உயர்த்த தேவன் வல்லமையுள்ளவராயிருந்தார்.

தேவபிள்ளைகளே, உங்களுக்கு கொஞ்ச பெலன் இருந்தும், நீங்கள் கர்த்தருக்காக நிற்பேன் என்று தீர்மானம் எடுத்தபடியினாலே, நீங்கள் நினைக்கிறதற்கும், வேண்டிக் கொள்வதற்கும், அதிகமாய் கர்த்தர் உங்களை உயர்த்த கிருபையுள்ளவராயிருக்கிறார். ‘வானத்தின் பலகணிகளைத் திறந்து உங்களை ஆசீர்வதிப்பார்’ (மல். 3:10). ஆயிரம் மடங்கு உங்களை ஆசீர்வதிப்பார் (உபா. 1:11). நினைவிற்கு:- “களங்கள் தானியத்தினால் நிரம்பும்; ஆலைகளில் திராட்சரசமும் எண்ணெயும் வழிந்தோடும்” (யோவேல் 2:24).

Article by elimchurchgospel

Leave a comment