Feb 13. பிரியமான பிள்ளைகள்!

“நீங்கள் பிரியமான பிள்ளைகளைப் போல, தேவனைப் பின்பற்றுகிறவர்களா யிருங்கள்” (எபே. 5:1).

நீங்கள் கர்த்தருடைய பிள்ளைகள். அவருடைய நாமத்தை முற்றிலுமாக அறிந்து அவரை ஏற்றுக்கொள்ளும்போதே அவருடைய பிள்ளைகளாகி விடுகிறீர்கள். இப்படியிருக்க நீங்கள் அவருடைய பிரியமான பிள்ளைகளாய் இருப்பது எப்படி? ஆம், அவருக்குப் பிரியமாய் நடந்து கொள்ளும்போது, அவருக்கு பிரியமானதைச் செய்யும்போது, நீங்கள் “பிள்ளைகள்” என்ற ஸ்தானத்திலிருந்து, “பிரியமான பிள்ளைகள்” என்ற ஸ்தானத்திற்கு முன்னேறுகிறீர்கள். அவரை ‘அப்பா, பிதாவே’ என்று புத்திர சுவிகார ஆவியோடும் அன்போடும் அழைக்கிறீர்கள்.

 பிதாவாகிய தேவனுக்கு இயேசு கிறிஸ்து குமாரனாயிருந்தார். அவருக்கு மிகவும் பிரியமான பிள்ளை. அநேகம் பிள்ளைகளை மகிமையிலே கூட்டிச் சேர்க்கும்படியாக உலகத்திற்கு வந்த இரட்சிப்பின் அதிபதி அவர்தான். அவர் யோர்தானில் ஞானஸ்தானம் பெற்று கரையேறினபோதுதான் முதன் முதலாக அவருக்கு “பிரியமான பிள்ளை” என்ற அங்கீகாரம் கிடைத்தது. வேதம் சொல்லுகிறது, “வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது” (மத். 3:17).

அவர் சீஷர்களோடு மறுருபமலையில் இருந்தபோது, மீண்டும் பிரியமான பிள்ளை என்கிற மேன்மை கிடைத்தது. “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள்…” (மத். 17:5) என்று பிதாவாகிய தேவன் சாட்சி கொடுத்தார்.

இயேசுவினுடைய வாழ்க்கை முழுவதும் பிதாவை பிரியப்படுத்துகிற வாழ்க்கையாகவே இருந்தது. மனுஷரை பிரியப்படுத்தும் மாமாலமான வாழ்க்கையை அவர் வாழவில்லை. உலகம் அவரை, “பாவிகளின் நண்பன், போஜனப்பிரியன், பெயல்செபூல்” என்றெல்லாம் அழைத்தது. பரிசேயரும் சதுசேயரும் வன்பகையாய் அவரை பகைத்தார்கள். வேதபாரகர் இடைவிடாமல் அவரைக் குற்றம் கண்டுபிடிக்க வகைத் தேடினார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவோ நினைவுகளிலும், வார்த்தைகளிலும், கிரியைகளிலும் எதைச் செய்தாலும் அதை தேவனுக்குப் பிரியமானதாகவே செய்து முடித்து, “பிரியமான குமாரன்” என்ற நற்சாட்சியை பிதாவினிடத்திலிருந்து பெற்றுக் கொண்டார்.

தேவபிள்ளைகளே, உங்களைக் குறித்து கர்த்தர் என்ன சாட்சி கொடுப்பார்? பிரியமான பிள்ளை என்று சாட்சி கொடுப்பாரா? என் நேசகுமாரன், குமாரத்தி என்று சொல்லுவாரா? சிந்தித்துப் பாருங்கள். கர்த்தருக்குப் பிரியமானதை நீங்கள் செய்கிறீர்களா? அல்லது அவரை துக்கப்படுத்தி வேதனைப்படுத்திக் கொண்டிருக் கிறீர்களா? தாவீது ராஜா ஆண்டவரை நோக்கிப் பார்த்து, “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்” என்று சொல்லி ஜெபித்தார் (சங். 40:8).

தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறீர்களா? அவரை உங்கள் முழு இருதயத்தோடு நேசித்து பிரியப்படுத்துகிறீர்களா? அவருக்குப் பிரியமான பிள்ளைகளாக நடந்துகொள்ளுகிறீர்களா?

நினைவிற்கு :- “ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டான்… அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சி பெற்றான்” (எபி. 11:5).

Article by elimadmin

Leave a comment