“பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணமும், பலவானிடத்திலிருந்து மதுரமும் வந்தது” (நியா. 14:14).
இந்த வேத பகுதியில் சிம்சோன் ஒரு அழகான விடுகதையை சொல்லுகிறார். பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணமும், பலவானிடத்திலிருந்து மதுரமும் வந்தது. அது என்ன என்று கேட்கிறார். வேறு வார்த்தைகளில் சொல்லப் போனால் இனிப்பு அளித்த வலியோன் யார்? உண்பவனிடத்திலிருந்து உண்டான உணவு என்ன?
இந்த இரண்டு கேள்விகளிலே முதல் கேள்விக்கு விடை சிங்கம். இரண்டாவது கேள்விக்கு விடை தேன். கர்த்தர் பட்சிக்கிற சிங்கத்தினிடத்திலிருந்தும், பட்சணமாகிய தேனை வரவழைக்க வல்லமையுள்ளவர். ஆகவே சிங்கம் போன்ற கொடிய பகைவர்களைக் குறித்து நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. உங்களை நிர்மூலமாக்க எழும்புகிறவர்களைக் கொண்டு கர்த்தர் உங்களை போஷிக்கும்படி செய்வார். உங்களைப் பட்சிக்க சீறுவது, அரசாங்கமாயிருக்கலாம். அயல்வீட்டுக்காரராயிருக்கலாம் அல்லது உங்கள் அலுவலகத்திலுள்ள அதிகாரியாயிருக்கலாம். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்கிறபடியினால், அவர்கள் மூலமாகவே உங்களுக்கு ஆதரவையும், சகாயத்தையும் கொண்டு வருவார்.
பாருங்கள்! இஸ்ரவேலரின் இரண்டு வயதிற்குட்பட்ட ஆண் குழந்தைகளையெல்லாம் நதியிலே போட வேண்டுமென்ற கொடிய சட்டத்தை பார்வோன் கொண்டு வந்தான். அந்த சட்டத்தின்படி நைல் நதியில் விடப்பட்ட எபிரெய குழந்தையாகிய மோசேயை, பார்வோனுடைய குமாரத்தியே வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். அந்த குழந்தையினுடைய சொந்த தாயே குழந்தைக்கு பாலூட்டி வளர்க்க ஏற்பாடு செய்தாள். அதற்காக அந்த தாய்க்கு சம்பளமும் கிடைத்தது. ஆம், பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணத்தைக் கொண்டு வருகிறவர் கர்த்தர்.
இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் மிகவும் கொடுமைப்படுத்தினான். முடிவாக இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டு புறப்பட ஆயத்தமானார்கள். அவர்கள் கைகளிலே எந்த பணமுமில்லை. கர்த்தர் என்ன செய்தார்? அதுவரை பட்சித்துக் கொண்டிருந்த எகிப்தியரின் கண்களிலே அவர்களுக்கு தயவு கிடைக்கப் பண்ணினார். எந்த எகிப்தியர் இவர்களை ஆளோட்டிகளால் அடிமைப்படுத்தினார்களோ, அதே எகிப்தியர் தங்களுடைய பொன், வெள்ளி ஆபரணங்களைக் கழற்றிக் கொடுத்து அவர்களுக்கு இரக்கம் பாராட்டினார்கள். இன்றைக்கும் உங்களுக்கு விரோதமாய் இருக்கிறவர்கள் உங்களுக்கு இரக்கம் பாராட்டும்படி கர்த்தர் உதவி செய்வார்.
பாருங்கள்! தேவனுடைய மனுஷனாகிய மொர்தெகாயை தூக்கிலே போடும்படி ஆமான் தூக்கு மரத்தை ஆயத்தம் செய்தான். ஆனால் அந்த இரவு ராஜாவுக்கு தூக்கம் வரவில்லை. காலவர்த்தமான புத்தகத்தை ராஜா வாசிக்கக் கேட்டபோது அங்கே தன் உயிரைக் காப்பாற்றிய மொர்தெகாயுக்கு எந்த கைமாறும் செய்யப்படவில்லை என்பதை அறிந்துகொண்டான். அடுத்த நாள், ஆமான், ராஜா சமுகத்தில் வந்தபோது, ராஜா துஷ்டனாகிய ஆமானைக் கொண்டே மொர்தெகாயை கனம் பண்ணும்படி, கர்த்தர் செய்தார். தேவபிள்ளைகளே, எந்த மனுஷனால் கனவீனப்பட்டீர்களோ, அந்த மனுஷன் மூலமாய் நீங்கள் கௌரவிக்கப்படுவீர்கள்.
நினைவிற்கு:- “எவர்கள் உனக்கு விரோதமாய்க் கூடுகிறார்களோ, அவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள்” (ஏசாயா 54:15).