“என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்” (யாத். 8:23).
கர்த்தருடைய ஜனங்கள் விசேஷமானவர்கள். அதே நேரத்தில் வித்தியாசமானவர்களும்கூட! பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் கர்த்தர் உங்களைத் தமக்கென்று பரிசுத்த ஜனமாய் தெரிந்து கொண்டார். ஆம், நீங்கள் வித்தியாசமானவர்கள்தான்.
ஒருமுறை இலங்கையிலுள்ள புத்த துறவி கிறிஸ்துவ மார்க்கத்தையும், புத்த மதத்தையும் ஒப்பிட்டுப் பேசினார். இரண்டுக்குமுரிய பெரிய வித்தியாசம் என்ன என்று கேட்டபோது அவர் சொன்னார், “இரண்டு மதங்களிலும் நன்மை என்று தோன்றுகின்ற காரியங்களை முழு பெலத்தோடு செய்வதற்கு விருப்பம் இருக்கிறது. ஆனால் புத்தமதத்தினருக்கு நன்மை இன்னது என்று தெரிந்திருந்தும் நிறைவேற்றுவதற்கான வல்லமை இல்லை” என்றார். எத்தனை பெரிய உண்மை!
கிறிஸ்தவ மார்க்கத்திற்கும், மற்ற எல்லா மார்க்கங்களுக்கும் ஒரு பெரிய வித்தியாசமுண்டு. கிறிஸ்தவ மார்க்கம் வல்லமை நிறைந்த மார்க்கம். ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தில், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் வல்லமையிருக்கிறது. ஆகவே தேவபிள்ளைகளாகிய நீங்கள் வல்லமையுள்ளவர்களாய் மகிழ்ச்சியோடு முன்னேறிச் செல்லுகிறீர்கள்.
ஒரு ஊரிலே அரசாங்க ஆஸ்பத்திரியும் இருந்தது. அதன் அருகிலே கிறிஸ்தவ ஆஸ்பத்திரியும் இருந்தது. ஆனால் அரசாங்க ஆஸ்பத்திரிக்கு அதிகமான பேர் போகாமல் கிறிஸ்தவ ஆஸ்பத்திரிக்கே ஓடி வந்தார்கள். என்ன காரணம் என்று அந்த இடத்திலுள்ள மக்களிடம் விசாரித்தபோது அவர்கள் சொன்னார்கள், ‘இரண்டிலும் பணிபுரிகிறவர்கள் ஒரேவிதமான படிப்பு படித்த டாக்டர்கள்தான். இரண்டு இடங்களிலுள்ளவர்களும் அனுபவசாலிகள்தான். ஆனால் கிறிஸ்தவ டாக்டரின் கரங்களில் விஷேித்த அன்பின் கனிவு இருக்கிறது. மற்றவர்களிடம் அது இல்லை’ என்றார்கள்.
நீங்கள் வித்தியாசமானவர்கள்தான். காரணம், விசேஷமான கிறிஸ்து உங்களுக்குள் வாசமாயிருக்கிறார். அவருடைய வாக்குத்தத்தங்கள் எல்லாவற்றுக்கும் நீங்கள் சுதந்தரவாளிகளாயிருக்கிறீர்கள். கர்த்தருடைய பிரசன்னமும், அவருடைய உடன்படிக்கையும் எப்போதும் உங்களோடுகூட இருக்கின்றன.
கோலியாத்தும், தாவீதும் ஒருவரையொருவர் எதிர்த்து நின்றார்கள். அவர்களுக்குள் எவ்வளவு பெரிய வித்தியாசம் இருந்தது! கோலியாத்து விருத்தசேதனம் பண்ணப்படாதவன். ஆனால் தாவீதோ விருத்தசேதனம் பண்ணப்பட்டவன். கோலியாத்து கூப்பிடும்போது அவனுக்கு துணைக்கு வருவதற்கு ஒருவருமில்லை. ஆனால் தாவீது கூப்பிடும்போது துணைக்கு வருவதற்கு கர்த்தர் எப்போதும் ஆயத்தமுள்ளவராயிருந்தார். ஆகவே வெற்றி தாவீதுக்குத்தான்.
தேவபிள்ளைகளே, உங்களுடைய அலுவலகத்தில்கூட நீங்கள்தான் விசேஷமானவர்கள் என்பதை மறந்துபோகாதிருங்கள். கர்த்தர் உங்களுக்கென்று ஆயிரக்கணக்கான வாக்குத்தத்தங்களை வேதத்தில் கொடுத்திருக்கிறாரே. உங்களுடைய ஜெபத்திற்கெல்லாம் பதிலளிப்பதாய் வாக்குப்பண்ணியிருக்கிறாரே. உங்கள் தேவன் ஜீவனுள்ளவராயிருக்கிறாரே.
நினைவிற்கு- “நீங்கள் நீதிமானுக்கும், துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ் செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ் செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்” (மல். 3:18).