ஜூலை 29 – எச்சரிக்கையாய் இருங்கள்!

“நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள்” (பிலி. 3:2).

வேதத்திலே, உங்களுடைய முன்னேற்றத்திற்கான கர்த்தருடைய ஆலோசனைகளுமுண்டு. உறுதியாய்ப் பற்றிப் பிடித்துக் கொள்ளும் வாக்குத்தத்தங்களுமுண்டு. மகிழ்ச்சியடையும் ஆசீர்வாதங்களுமுண்டு. உற்சாகமுடைய ஆறுதலின் வாக்குகளுமுண்டு. அதே நேரத்தில், உங்களை எச்சரிக்கை செய்யும் காரியங்களுமுண்டு.

இந்த வேதப் பகுதியிலே, “நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள்” என்று சொல்லுகிறார். இதிலே நாய் என்று சொல்லப்படுவது மிருகத்தின் சுபாவமாகும். நீங்கள் ஆவிக்குரிய இனிமையான சுபாவங்களை வெளிப்படுத்தும்படி அழைக்கப்பட்டிருக்கிறீர்களே தவிர, நாயின் மிருக சுபாவத்தை ஒரு நாளும் வெளிப்படுத்தவேக்கூடாது.  நாயின் அசிங்கமான சுபாவம், தான் கக்கினதை தானே தின்பதாகும் (நீதி. 26:11). நீங்கள் விட்டு விட்டு வந்த பாவங்களை மறுபடியும் உங்களுடைய வாழ்க்கையிலே ஏற்றுக்கொள்ளவே கூடாது. பாவத்துக்கு மரித்த நீங்கள் இனி அதிலே எப்படிப் பிழைப்பீர்கள்? (ரோமர் 6:2).

ஆடும், பன்றியும் ஒரு சாக்கடையில் விழுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆடு எவ்வளவு துரிதமாய் வெளியே வர முடியுமோ அவ்வளவு துரிதமாய் வெளியேவந்து தன்னுடைய சரீரத்தை உதறி சாக்கடை நீரை தன்னை விட்டு அகற்ற முயற்சிக்கும். ஆனால் பன்றியோ சாக்கடையிலேயே இருக்கத்தான் விரும்பும். எடுத்து வெளியே விட்டாலும், மீண்டும் சாக்கடைக்கு திரும்பி விடும். தேவ சமுகத்திலே பொருத்தனை செய்து, விட்டு விட்ட காரியங்களை திரும்ப எடுப்பது நாயின் சுபாவமாகும். இயேசு சொன்னார், “பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதிருங்கள்” (மத். 7:6). பரிசுத்தமுள்ளதும் அசுத்தமுள்ளதும் ஒன்றாய் இணைந்து வாழ முடியவே முடியாது. உலகத்தையும் பிரியப்படுத்தி, கர்த்தரையும் பிரியப்படுத்தி உங்களால் வாழவே முடியாது.

ஏசாயா தீர்க்கதரிசி பரிசுத்தமுள்ளவராய் காணப்பட்டார். ஆனால் தேவனுடைய வெளிச்சம் அவர் மேல் விழுந்தபோது, தேவன் விரும்பாத சில காரியங்கள் அவரிடத்தில் காணப்படுகிறதை உணர்ந்தார். ஆகவே அதன் நிமித்தம் அவர் புலம்பி, “ஐயோ நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன். அசுத்த உதடுகள் உள்ள மக்கள் மத்தியில் வாசம் பண்ணுகிறேன்” என்று கதறி அறிக்கையிட்டார். தேவன் அந்த சுபாவத்தை ஏசாயாவினிடத்திலிருந்து அகற்ற வேண்டியதாயிருந்தது. ஆகவே சேராபீன்களில் ஒருவன் பறந்து வந்து, பலிபீடத்தின் அக்கினி குறடுகளினால் அவருடைய உதடுகளைத் தொட்டு சுத்தமாக்கினான்.

நீங்கள் அசுத்தத்தை விட்டும், அசுத்தமான சந்ததியை விட்டும் வெளியே வரும்போதுதான் கர்த்தர் உங்களை உயர்த்த முடியும். வேதம் சொல்லுகிறது: “ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்” (2 கொரி. 6:17,18).

நாயின் அடுத்த சுபாவம் அது ஊளையிட்டு ஊரை சுற்றி வருவதாகும் (சங்.59:6). தேவபிள்ளைகளே, வீண் வார்த்தைகளைப் பேசி ஆத்துமாவை கெடுத்து விடாமல், பக்தி விருத்திக்கான பேச்சுகளையே பேசுவீர்களாக!

நினைவிற்கு:- “தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்; தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான்” (நீதி. 13:3).

Article by elimchurchgospel

Leave a comment