ஜூலை 26 – நாடுகிறோம்!

“நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்” (2 கொரி. 5:9).

தமஸ்கு வீதியிலே, என்றைக்கு அப். பவுல் கிறிஸ்துவால் பிடிக்கப்பட்டாரோ, அன்று முதல் கிறிஸ்துவைப் பிரியப்படுத்தி கிறிஸ்துவுக்காகவே வாழ தன்னை அர்ப்பணித்தார். கர்த்தரைப் பிரியப்படுத்த அவர் தீர்மானித்திருக்கிறதை கொரிந்து பட்டணத்திலுள்ள சபை விசுவாசிகளுக்கு எழுதும் போது, “நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்” (2 கொரி. 5:9) என்று குறிப்பிட்டார். காரணம், அடுத்த வசனத்தில், “சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்” என்று எழுதுகிறார் (2 கொரி. 5:10).

மரணத்தோடு உங்களுடைய வாழ்க்கை முடிவடைந்து விடுவதில்லை. அதற்கு பின்பு கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்கவேண்டும். இந்த பூமியில் அவரைப் பிரியப்படுத்தி, உண்மையும் உத்தமமுமான வாழ்க்கை வாழ்ந்தால்தான் அங்கே நியாயாசனத்திற்கு முன்பதாக நீங்கள் நிற்கும்போது கர்த்தரிடத்திலிருந்து, ஜீவகிரீடத்தையும், நித்திய வாசஸ்தலத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே, எப்பொழுதும் அவருக்குப் பிரியமானதையே செய்வீர்களாக.

ஒரு முறை ஒரு கம்யூனிஸ்ட் தேசத்திலே, போதகர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அங்குள்ள பாடுகளை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவருடைய உள்ளம் பின்வாங்க ஆரம்பித்தது. ஒருநாள் சிறை அதிகாரி அவரைப் பார்த்து, “நீர் ஏன் வீணாக இவ்வளவு பாடுகளை அனுபவிக்க வேண்டும்? நீர் விடுதலை பெறுவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. இங்கே சிறையில் அடைக்கப்பட்டிருக்கிற இரண்டு பெண்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு நீர் விடுதலையாகிப் போகலாம்” என்றார். அவருடைய உள்ளம் தடுமாறினபோதிலும் முடிவாக அதற்கு அவர் சம்மதித்து கைகளிலே துப்பாக்கியை ஏந்தினார்.

அவர் முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட சகோதரிகளோ அவர் மூலமாய் இரட்சிக்கப்பட்ட அவருடைய சபை விசுவாசிகள். அவர்கள் அவரைப் பார்த்து, “ஐயா நீங்கள் பாடுகளின் மத்தியிலே வேறு வழியின்றி இந்த முடிவுக்கு வந்திருக்கலாம். நீங்கள் எங்களுக்கு கிறிஸ்துவை அறிமுகப்படுத்தினீர்கள், உங்கள் கைகள் எங்களைக் கொல்லும்படி துப்பாக்கி ஏந்தியிருக்கிறது. நாங்கள் மரித்தாலும் கிறிஸ்துவை மறுதலிக்க மாட்டோம். அவரையே பிரியப்படுத்துவோம். ஆனால் நீங்கள் எங்களை சுட்டுக்கொன்ற பின்பு எப்படியாவது மீண்டும் கிறிஸ்துவின் அன்புக்குள் வந்துவிடுங்கள், அவரைப் பிரியப்படுத்துங்கள். பின்மாற்ற நிலைக்கு போய்விடாதிருங்கள்” என்று கெஞ்சினார்கள்.

அந்த போதகரோ, ஈவு இரக்கமில்லாமல் அவர்களைச் சுட்டுக்கொன்றார். அவர் சிறையிலிருந்து வெளியேறி சுதந்தரமாக வாழலாம் என்று விரும்பினார். அந்தோ! அடுத்த வினாடி சிறைக் காவலர்கள் தங்கள் கைகளிலிருந்த துப்பாக்கியினால் போதகரை சுட்டுக் கொன்றார்கள். ஆகவே அவர் மனம் திரும்ப வாய்ப்பே இல்லாமல் போனது.  தேவபிள்ளைகளே, இந்த உலகில் ஒரே ஒரு வாழ்க்கைதான் உண்டு! அந்த ஒரு வாழ்க்கை ஆண்டவரைப் பிரியப்படுத்தி, அவரை நேசிக்கிற வாழ்க்கையாக விளங்கட்டும்!

நினைவிற்கு:- “நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்” (ரோமர் 14:8).

Article by elimchurchgospel

Leave a comment